இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் கனடாவில் வசிக்கின்றனர். குடியுரிமை பெற்ற பிறகு தங்கள் பெற்றோரையும் கனடாவுக்கு அழைத்து வர பலர் விரும்புகின்றனர். ஆனால் 2020 இல் இருந்து `கனடா பெற்றோர் இடப்பெயர்வு விசா’ வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர விண்ணப்பிக்கும் விசா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 2020 இல் இருந்து பரிசீலனையில் உள்ளன.

இது தொடர்பாக கனடா அரசாங்கம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, 2020 முதல் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கனடாவுக்கு அழைத்து வர ஸ்பான்சர் செய்யும் படிவங்களை சமர்ப்பித்த 35,700 ஸ்பான்சர் விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்படும் என்ற தகவலை பகிர்ந்துள்ளது.

இந்த அழைப்பு கடிதங்கள், மே 21, 2024 முதல் கனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை துறையால், `பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்’ (PGP) திட்டத்தின் கீழ் அனுப்பப்படும்.

எனவே, பிஜிபி (PGP) திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் பெற்றோரின் விசாவுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மின்னஞ்சல் வந்துள்ளதா என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம் மற்றும் பிஜிபி திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் சூப்பர் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
விளம்பரம்

இதுகுறித்து கனடா அரசு தனது இணையதளத்தில், “அடுத்த 2 வாரங்களுக்குள் 35,700 அழைப்பு கடிதங்கள் அனுப்புவோம். 20,500 விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதே எங்கள் இலக்கு. ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

`பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்’ (PGP) திட்டம் என்றால் என்ன?

`பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்’ (PGP) என்பது சிறப்பு திட்டமாகும், அதன் கீழ் கனடாவில் வசிக்கும் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் (PR) பிஜிபி விண்ணப்பத்தின் மூலம் தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்து வர விண்ணப்பிக்கலாம்.

சூப்பர் விசா என்றால் என்ன?

சூப்பர் விசா என்பது கனடாவின் குடிமக்கள் மற்றும் நிரந்தரமாக குடியேறியவர்கள் (PR) தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளை சந்திக்க விண்ணப்பிக்கும் ஒரு பிரத்யேக விசா திட்டம். அதன் கீழ், பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் 5 ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா சென்ற பிறகு, இந்த விசாவின் காலவரம்பை நீட்டிக்க முடியும். அவர்கள் கனடாவில் 10 ஆண்டுகள் வரை மீண்டும் மீண்டும் விண்ணப்பம் பதிவு செய்து வசிக்க முடியும்.

கனடாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் , சூப்பர் விசா திட்டத்தின் கீழ் செயல்பாடுகள் கொஞ்சம் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுற்றுலா விசாவுக்கும் சூப்பர் விசாவுக்கும் என்ன வித்தியாசம்?

சூப்பர் விசா என்பது சுற்றுலா விசாவை (Visitor Visa) விட சற்று வித்தியாசமானது. சூப்பர் விசா குறிப்பாக பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கானது.

சூப்பர் விசாவின் கீழ், ஒரு விண்ணப்பதாரர் மொத்தம் 5 ஆண்டுகள் வரை தங்கலாம், அதே சமயம் சுற்றுலா விசாவின் கீழ், ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 6 மாதங்கள் வரை தங்கலாம்.

சூப்பர் விசாவில் விண்ணப்பதாரரின் சொந்த பிள்ளைகள் (biological) அல்லது தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் மட்டுமே அழைக்க முடியும், ஆனால் சுற்றுலா விசாவில் இந்த கட்டுப்பாடுகள் இல்லை.

`பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்’ விசா திட்டத்தில் ஸ்பான்சர் ஆவது எப்படி?

பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர் (பிஜிபி) திட்டத்தின் கீழ், ஸ்பான்சர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, விண்ணப்பதாரர் தொடர்பான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஸ்பான்சர் இரண்டு விஷயங்களில் கையெழுத்திட வேண்டும், ஒன்று ‘உறுதிமொழிப் பத்திரம்’ (அஃபிடவிட்) மற்றொன்று ‘ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம்’.

பொறுப்பேற்கும் படிவம்

பிஜிபி திட்டத்தின் கீழ் ஸ்பான்சராக ஆவதற்கு உறுதிமொழி படிவத்தில் (undertaking) கையெழுத்திட வேண்டும். கையெழுத்திடும் பட்சத்தில் இரண்டு விஷயங்களை ஒப்புக்கொள்வதாக கருதப்படும்.

1. குறிப்பிட்ட காலத்திற்கு, நீங்கள் ஸ்பான்சர் (நிதியுதவி) செய்பவர்களின் முழு செலவுகளையும் நீங்கள் ஏற்க வேண்டும்.

2. உங்களிடம் நிதியுதவி செய்பவர்கள், கனடா அரசாங்கத்தின் சமூக உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க கூடாது. அதே காலகட்டத்தில் அவர்கள் அரசாங்கத்திடம் இருந்து உதவி பெற்றால், அந்த செலவை நீங்களே ஏற்க வேண்டும்.

நீங்கள் ஸ்பான்சர் செய்யும் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவுடன், அவர்கள் தங்கியிருக்கும் காலத்தை உங்களால் குறைக்கவோ அல்லது உங்கள் ஸ்பான்சர்ஷிப்பை திரும்பப் பெறவோ முடியாது. அவர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறும் வரை மட்டுமே உங்கள் ஸ்பான்சர்ஷிப்பை நீங்கள் திரும்பப் பெற முடியும்.


ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம்

ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில், ஸ்பான்சர் செய்யப்படும் நபரின் அடிப்படைத் தேவைகளை `ஸ்பான்சர்’ பூர்த்தி செய்ய வேண்டும் –

• அவர்களின் உணவு, உடை, தங்குமிடம் மற்றும் அன்றாட தேவைகளை கவனிக்க வேண்டும்.

•பல் அல்லது கண் நோய்கள் போன்ற பொது சுகாதார சேவையின் கீழ் வராத சுகாதார சேவைகளை ஸ்பான்சர் ஏற்க வேண்டும்.


`பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்’ விசா பெற என்ன தேவை?

• கனடா அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர் திட்டத்தின் கீழ், பின்வரும் நிபந்தனைகளின் கீழ் நீங்கள் உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளுக்கு நிதியுதவி செய்யலாம்…

• உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்
•நீங்கள் குறைந்தது 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
கனடாவில் வசிக்க வேண்டும்

• நீங்கள் ஒரு கனடிய குடிமகன் அல்லது கனடாவில் நிரந்தரமாக வசிப்பவர் அல்லது கனேடிய-இந்தியச் சட்டத்தின் கீழ் கனடாவில் இந்தியராகப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்

• நீங்கள் அழைக்கும் பெற்றோரை பார்த்து கொள்ள உங்களிடம் போதுமான நிதி உங்களிடம் இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் வருமானச் சான்றிதழை வழங்க வேண்டும் மற்றும் உங்களுக்கு இணையர் இருந்தால், நீங்கள் இருவரும் சேர்ந்து விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும்.

•குடியேற்றம் மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குடியேற்றம் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின் அனைத்துத் தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

யாரால் ஸ்பான்சர் செய்ய முடியாது?

பின்வரும் சூழல்களில் இருப்பவர்கள் சூப்பர் விசாவிற்கு ஸ்பான்சர் செய்ய தகுதியுடையவராக கருதப்படமாட்டார்கள்…

நீங்கள் சிறையில் அல்லது ஏதேனும் காவலில் இருந்தால்

நீங்கள் குடியேற்றக் கடன், செயல் திறன் பத்திரம் அல்லது நீதிமன்றம் உத்தரவிட்ட நிதி உதவி (ஜீவனாம்சம் அல்லது குழந்தைக்கான நிதி) செலுத்த தவறி இருந்தால்

நீங்கள் இதற்கு முன் ஸ்பான்சர் செய்த நபருக்கு போதுமான உதவி வழங்வில்லை
வங்கிகளால் ‘திவாலானவராக’ அறிவிக்கப்பட்டிருந்தால்

நீங்கள் அரசாங்கத்திடம் இருந்து உதவி பெறுபவராக இருந்தால்

உங்கள் பெயர் கிரிமினல் வழக்கில் இருந்தால்

நீங்கள் சட்டவிரோதமாக கனடாவில் வசிப்பவர்

என்பன போன்ற சூழல்களில் ஒருவரால் ஸ்பான்சர் ஆக முடியாது.

ஸ்பான்சர் பெற தகுதியானவர்கள் யார்?

கனடாவில் வசிப்பவர்கள் ஒருவரை ஸ்பான்சர் செய்ய வேண்டுமெனில், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்..

கனடாவில் வசிப்பவர்களின் சொந்த பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி அல்லது அவர்களை தத்தெடுத்தவர்கள் (இரத்த உறவு அல்லது தத்தெடுக்கப்பட்ட)

•கனடாவில் வசிப்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியின் சார்ந்திருக்கும் குழந்தைகள் (உடன்பிறந்தவர்கள், உடன்பிறந்தவர்கள்)

• கனடாவில் வசிப்பவர்களின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி விவாகரத்து பெற்றிருந்தால், அவர்களின் தற்போதைய துணை

நீங்கள் யாரை ஸ்பான்சர் செய்ய முடியாது?

உங்கள் கணவர்/மனைவியின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு நீங்கள் ஸ்பான்சர் செய்ய முடியாது, ஆனால் உங்கள் துணையின் விண்ணப்பத்தில் நீங்கள் கையெழுத்திடலாம்.
கனடாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நபருக்கு நீங்கள் ஸ்பான்சர் செய்ய முடியாது.

பிஜிபி திட்டம் எப்படி செயல்படும்?

கனடா அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, 2020 இல் பிஜிபி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் ‘உறுதிப்படுத்தல் எண்’ பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இது தொடர்பாக கனடா அரசாங்கத்தின் கனடா அரசாங்கத்தின் குடியேற்றத் துறையில் இருந்து மின்னஞ்சலையும் பெற்றிருப்பார்கள்.

உங்கள் விண்ணப்பம் 2024 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதைப் பார்க்க இந்த உறுதிப்படுத்தல் எண்ணைப் பயன்படுத்தலாம்.

இந்த எண் பெற்றிருக்கும் நபர்களுக்கு 21 மே 2024 முதல் 2 வாரங்களுக்குள் அழைப்பு கடிதம் வர வாய்ப்புள்ளது. அழைப்புக் கடிதங்கள் 2020 ஆம் ஆண்டில் விண்ணப்பதாரர்கள் படிவத்தில் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு வரும்.

அதேபோல், கனடா குடியேற்றத் துறையின் இணையதளத்தில் ‘Check Your Invitation’ என்ற பிரிவில், உங்கள் உறுதிப்படுத்தல் எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.

அழைப்புக் கடிதம் கிடைத்ததும் விண்ணப்பிக்க வேண்டும். அழைப்புக் கடிதம் இல்லாமல் விண்ணப்பிப்பதால் எந்தப் பயனும் இல்லை. விண்ணப்பிக்க, உங்கள் படிவம், புகைப்படங்கள் மற்றும் தேவையான பிற ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.

கனடா அரசாங்கம் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு உங்கள் மருத்துவ, காவல்துறை சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

  • தனிஷா சவுகான்-பிபிசி நியூஸ்

 

Share.
Leave A Reply