இந்திய பிரதமர் மோடியின் திருமண புகைப்படம் என இணையத்தில் வைரலாகிவரும் பதிவு தவறான தகவல்களுடன் பகிரப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

“திருமணத்தை மறைத்த திருடனின் திருமண புகைப்படம்.. நல்லாருந்த பல கோடி இந்திய மக்களை ஏழையாக்கிய திருடன்” என்று தலைப்பிட்டு இந்திய பிரதமர் மோடியின் திருமணப் புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதே புகைப்படத்தை மற்றொரு நபர் “கிடைச்சிடுச்சு மோடியின் திருமண ஃபோட்டோ. எனக்கு திருமணமே ஆகலைன்னு பொய்யை சொன்ன மோடி. தேர்தல் பிரமாண பத்திரத்தில் தன் திருமணத்தையே மறைத்தார்” என பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத் தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிரதமர் மோடியின் திருமண படம் என்று புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடப்பட்டது.

இத்தேடலில் ஏபிவிபியின் தேசியச் செயலாளர் ஆஷிஷ் சௌகான் வைரலாகும் புகைப்படம் பிரதமர் மோடியின் திருமண புகைப்படம் அல்ல என தெளிவுப்படுத்தி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

வைரலாகும் படத்தில் பிரதமரின் அருகில் இருப்பவர் குஜராத்தின் முன்னாள் அமைச்சர் ஹேமந்த் சப்பத்வாலாவின் மகள் என்று அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து தேடுகையில் குஜராத் ஒபிசி அணியின் முன்னாள் தலைவரும் ஹேமந்த் சப்பத்வாலாவின் மகனுமான கேயூர் “1994-ம் ஆண்டில் அவரது சகோதரி ஆல்பாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்டது” என்று தெளிவுப்படுத்தி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதை காண முடிந்தது.

Share.
Leave A Reply