தவறிய குறி இரண்டு – தவறாத குறி மூன்று

பத்மநாதனுக்கு முன்னர்

இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தன்   மீது உடனடியாக குறி வைக்கப்படும் என று எதிர்பார்த்திருக்கவில்லை. அவரது வீட்டின் முன்பாக காரை நிறுத்திவிட்டு கேற் திறப்பதற்காக தாமதித்த விநாடிகளில் முதல் சூடு விழுந்தது கைத்துப்பாக்கியை எடுத்துக் கொள்ளக்கூட அவகாசம் இல்லை.

கார்க்கதவைத் திறந்து இறங்கி ஓடிய பத்மநாதன் மீது மேலும் பல துப்பாக்கிச் சூடுகள் விழுந்தன.அவர் பலியானார்.

பொலிஸ் வட்டாரம் அதிர்ச்சியடைந்தது. தமிழ் பத்திரிகை ஒன்று,சூடுபட்ட நிலையிலும் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொலைஞர்களை சிறிது தூரம் துரத்திச் சென்றார் என்று செய்தி போட்டது.

‘இன்ஸ்பெக்டர் பத்மநாதன், பஸ்தியாம்பிள்ளை போன்றவர்கள் அப்போது ‘ஹீரோக்கள்’ போலவே மதிக்கப்பட்டார்கள்.

இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவது மக்களால் வியப்பாக நோக்கப்பட்டது. அதேநேரம் பொலிசார் அவர்களை சுலபமாக பிடித்துவிக்கூடும் என்றும் நம்பப்பட்டது.

1978இல் நடந்து முடிந்த பத்மநாதன் கொலை முக்கியமானதாக இருந்தபோதும் அதற்கு முன்னரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கொல்லப்பட்டிருந்தனர்.

அல்பிரட் துரையப்பா கொலை வழக்கின் துப்புத் துலக்கலில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கருணாநிதி. இவர் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்.

1977ஆம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி கொன்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

துரையப்பா கொலை வழக்கில் துப்புத் துலக்கிய மேலும் இரு கொன்ஸ்டபிள்கள் ஒரே பெயரைக் கொண்டவர்கள். ஒருவர் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர். மற்றவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்.

நோக்கம் ஒன்று தான் துரையப்பா கொலைக்கு காரணமானவர்களைக் கண்டறிவது.

பெயரும் ஒன்று தான், சண்முகநாதன்! இரண்டு சண்முகநாதன்களும் தமக்கு கிடைத்த ஒரு தகவலை ஆராய ஒன்றாகச் சேர்ந்து இணுவில் என்ற இடத்திற்குப் போனார்கள்.

சிவில் உடையில் இருந்த இரு சண்முகநாதன்களையும் இனம் கண்டு கொண்ட இளைஞர்கள் இருவர் சைக்கிளில் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

இணுவில் பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்ற இரு கொன்ஸ்டபிள்களும் திடீரென துப்பாக்கி வேட்டுக்களை எதிர்கொண்டனர்;.

தமக்குக் கிடைத்த தகவலை ஆராயவோ, அல்லது பஸ்ஸை பிடிக்கவோ சந்தர்ப்பமே இல்லாமல் இரு சண்முகநாதன்களும் பலியானார்கள்.

இது நடந்தது 18.05.77- நேரம் காலை 9.15 மணி.

கொன்ஸ்டபிள் கருணாநிதி மற்றும் கொன்ஸ்டபிள்கள் சண்முகநாதன்  மற்றும் கொலைகளுக்கு காரணமானவர்கள் விடுதலைப்புலிகள்.

ஆனால்,இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொலைக்கு காரணம் விடுதலைப் புலிகள் அல்ல.

குட்டிமணி குழுவினர்

குட்டிமணி, தங்கத்துரை ,சிறிசபாரத்னம், பெரியசோதி ,சின்னசோதி போன்ற இளைஞர்கள் தாம் ஒரு தனிக்குழுவாக இயங்கிக் கொண்டிருந்தார்.

பின்னர் 1974ஆம் ஆண்டளவில் அக்குழுவினரோடு தொடர்புகளை முறித்துக் கொண்டு தமிழ் புதிய புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

குட்டிமணி குழுவினரே இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொலைக்கு காரணமாக இருந்தனர்.

இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொலைக்கு முன்பாக குட்டிமணி குழுவினரால் குறி வைக்கப்பட்டவர், அப்போது நல்லூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அருளம்பலம்.

தமிழ் காங்கிரஸ் கட்சி மூலமாக பாராளுமன்றம் சென்ற அருளம்பலம் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தாவினார்.

ஒரெயொரு தடவை தனது கணவர் பாராளுமன்றம் செல்ல உதவுமாறு திருமதி அருளம்பலம் வாக்காளர்களிடம் வீடு வீடாகச் சென்று உருக்கமாக வேண்டிக்கொண்டார்.

“எங்கள் பலம் பொன்னம்பலம். எங்கள் பலம் அருளம்பலம்,||, “போடு புள்ளடி சைக்கிளுக்கு நேரே|| என்ற கோஷங்கள் அப்போது தேர்தல் காலத்தில் செவிகளுக்குள் வந்து விழும்.

உருகிப்போன நல்லூர் தொகுதி மக்கள் அருளம்பலத்துக்கு வாக்குகளை அள்ளிப் போட்டனர். பாராளுமன்றம் சென்றவருக்கு ஆளும் கட்சிக்குச் செல்லும் ஆவலும் வந்துவிட கட்சி மாறிவிட்டார்.

இரும்பு மனிதன்

அருளம்பலத்திற்கு முன்னர் நல்லூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அமரர் டாக்டர் இ.எம்.பி.நாகநாதன்.

நாகநாதன் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.

‘இரும்பு மனிதன்’ என்று அழைக்கப்பட்டவர்.

நாகநாதன் பாதி அகிம்சைவாதி – மீதி தீவிரவாதி.

சத்தியாக்கிரகப் போராட்டங்களை தமிழரசுக்கட்சி நடத்தும்போது அடிபட்டாலும் மிதிபட்டாலும் தமிழரசுக்கட்சித் தலைவர்கள் சகித்துக் கொண்டிருப்பார்கள்.

நாதகநாதன் பதிலடி கொடுக்க எழுந்து விடுவார்.

யாழ்.கச்சேரிக்கு முன் நடந்த சாத்வீகப் போராட்டத்தில் பொலிஸ் ஜீப்பின் முன்பாக குறுக்கே படுத்துவிட்டார் நாகநாதன்.

ஆத்திரம் அடைந்த பொலிஸ் அதிகாரி குண்டாந்தடியால் நாகநாதனை அடித்தார். அடி கழுத்தின் பின்புறம் விழுந்தது.

நாகநாதன் அசையவில்லை. குண்டாந்தடி தான் உடைந்தது என்று அப்போது பேசப்பட்டது.

அந்த அடியில் பட்ட உட்காயமும் இரும்பு மனிதன் நாகநாதனின் விரைவான இழப்புக்கு காரணம் என்று அப்போது நம்பப்பட்டது.

அமரர் நாகநாதன் போன்றோர்களின் செந்நீரும் வியர்வையும் தான் தமிழ்த்தேசிய எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் உரமாக அமைந்தன.

அருளம்பலம் பாராளுமன்ற உறுப்பினரானார்.கட்சி மாறினார்.

1972இல் தமிழரசு கட்சியம் – தமிழ் காங்கிரசும் ஒற்றுமை கண்டன. தமிழர் கூட்டு முன்னணி (வுருகு)உருவாகியது.(இ.தொ.கா.வும் கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்தபோதும் வடக்கு – கிழக்கு அரசியலுக்குள் தலை போடவில்லை)

கூட்டணி மேடைகளில் அருளம்பலம் ‘கள்ளன்’,’துரோகி’ போன்ற வார்த்தைகளால் அர்ச்சிக்கப்பட்டார்.

செத்த பாம்புக்கு சொல் அடி

நல்லூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி தமிழ் மன்னன் சங்கிலியன்.

அந்த சங்கிலியனை காட்டிக் கொடுத்தவனும் ஒரு தமிழன்.

அந்த எட்டப்பனின் மறுபிறவியாகவே அருளம்பலம் கூட்டணியினரால் சுட்டிக்காட்டப்பட்டார்.

அருளம்பலம் அரசியல் செல்வாக்குப் படைத்த ஒருவரல்ல.

அதுவும் கட்சி மாறிய பின் அவர் ஒரு செத்த பாம்பு.

ஆனாலும் செத்த பாம்பையும் விடாமல் கூட்டணித் தலைவர்கள் சொல்லால் அடித்துக் கொண்டிருந்தனர்.

அரசியலில் தமக்கு எதிராக கடைவிரித்த எவரையுமே கூட்டணித் தலைவர்களால் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்தது.

தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் தனித்தனியே அரசியல் நடத்தியபோது அக்கட்சிகளைச் சார்ந்தோர் அரசில் அங்கம் வகித்தார்கள்.அமைச்சர் பதவிகளும் பெற்றார்கள்.

தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சராக இருந்திருக்கின்றார்.

தமிழரசுக் கட்சி பிரமுகராக இருந்த அமரர் திருச்செல்வமும் அமைச்சராக இருந்திருக்கின்றார்.

வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழர்கள் அரசோடு இருப்பதையோ அமைச்சர்களாக இருந்ததையோ அந்த இரு கட்சிகளாலுமே சகிக்க முடியாமல் போய்விட்டது.

கூட்டணியாகிய பின் இரு கட்சிகளும் ஒன்றாய் நின்று ஒரே குரலில் துரோகிப் பட்டியலை ஒப்புவித்தார்கள்.

தாம் அமைச்சர்களாக இருந்தது சாணக்கிய தந்திரம்.

பிறகு தமிழர்கள் அமைச்சர்களானால் அது காட்டிக்கொடுக்கும் காரியம்.

அது தான் தமிழர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் தலைவர்களாக இருந்தவர்களது அகராதி.

அரசோடு சேர்ந்த அருளம்பலமும் கூட்டணியின் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்று தீவிரவாத இளைஞர் குழுக்களது கொலைப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்.

1976இல் குட்டிமணி குழுவினரால் அருளம்பலம் சுடப்பட்டார்.

சூடுபட்டவுடன் அருளம்பலம் சுருண்டு விழுந்துவிட்டார்.

செத்துவிட்டார் என்று நினைத்து குட்டிமணி குழுவினர் சென்றுவிட்டனர்.

ஆனால் அருளம்பலம் பிழைத்துக் கொண்டார்.

இந்தக் கொலை முயற்சியை கூட்டணியினர் கண்டித்ததாக நினைக்கவில்லை.

வலது கரம் வீழ்ந்தது

அதே ஆண்டு குட்டிமணி குழுவினரால் குறிவைக்கப்பட்டு தப்பிக் கொண்ட இன்னொருவர் கு.விநோதன்.

இவர் உடுவில் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராக இருந்தவர்.

அருளம்பலத்தின் வலதுகரமாக இருந்தவர் தாடித் தங்கராஜா.

கூட்டணி சார்பான இளைஞர்கள் பலர் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுத்து வந்தார்.

1977;ம் ஆண்டளவில் கொக்குவிலில் இருந்த அவரது வீட்டுக்குள் புகுந்த குட்டிமணி குழுவினர் சரமாரியாக சுட்டுத் தீர்த்தனர்.

தாடித்தங்கராஜாவின் கதை முடிந்தது. அரசியல்வாதிகளுக்கு எதிரான கொலை நடவடிக்கைகளில் ஒன்றாக தாடித் தங்கராஜாவின் கொலையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

1978ம் ஆண்;டில் குட்டிமணி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கை பொலிஸ் அதிகாரி குருசாமிக்கு குறி வைப்பு!

‘சுடடா என்றார் குட்டி மணி.

தயங்கி நின்றார் ஓபரோய் தேவன்!

பிறகென்ன நடந்தது?

(தொடரும்)

_____________________________________________________________________________________________________________

கட்டம் இடப்பட்ட செய்தி

இத் தொடரின் பல குறிப்புக்களுக்கு ஆதார ஆவணங்கள் இருக்கின்றன. வேறு சில ஞாபகசக்தியை நம்பி எடுத்துத் தரப்படுபவை. சில சமயம் எழுதும் வேகத்தில் ஞாபகசக்தி தவறிழைத்துவிடலாம். உதாரணமாக அமரர் திருச்செல்வம் பற்றி கூறியபோது துரையப்பா கொலை வழக்கில் ஆஜராகி ‘ஸ்ரீலங்கா சட்டங்கள் தமிழ் ஈழத்துக்குப் பொருந்தாது’ என அவர் வாதிட்டதாக குறிப்பிட்டிருந்தேன். தொடரை மீண்டும் திருப்பிப் பார்த்தபோது அது தவறு என்று மூளையில் உறைந்தது.

துரையப்பா கொலை வழக்கில் கூட்டணித் தலைவர் அமிர்,சிவசிதம்பரம், நவரத்னம் உட்பட முக்கியமான சட்டத்தரணிகள் ஆஜரானது உண்மை தான். ஆனால், திருச்செல்வம் ஸ்ரீலங்கா சட்டம் தமிழ் ஈழத்துக்கு பொருந்தாது என வாதிட்டது துரையப்பா கொலை வழக்கில் அல்ல. தமிழ் ஈழம் கோரும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து கைதான தமிழ் தலைவர்கள் மீதான வழக்கில்!

‘ட்ரயல் அற்பார்’ என்னும் விசேட நீதிமன்றத்தில் (ஜுரிகள் இல்லாத நீதிமன்றம்} அந்த வழக்கு நடந்தது. அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழ் ஈழம் என்ற சொல்லையே உச்சரிக்காமல் சட்டவாதம் செய்தார். அமரர் திருச்செல்வம் ‘தமிழ் ஈழம் இறைமையுள்ள நாடு’ என்று எடுத்துக்காட்டி வாதம் செய்தார். தமிழ் ஈழக் கோரிக்கைக்கு மிகப் பெரும் பிரசார லாபமாக அமைந்த வழக்கு அது.

 

தொடரும்)

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 1.. 2..3...4

Share.
Leave A Reply