நேட்டோவின் இராணுவ உதவிகளால் உக்ரேனில் போர் நடவடிக்கைகள் தீவிரமாகுவதால் நிலைமைகள் ஆபத்தாகும் சூழல் உருவெடுக்கும் என்று மொஸ்கோ எச்சரித்துள்ளது.
நேட்டோவிலுள்ள முக்கிய நாடுகளின் ஆளும் தலைமைகளின் உக்ரேனுக்கான இராணுவ உதவிகளானது ரஷ்யாவுடனான நேரடி யுத்தத்திற்கான முடிவு என்றே ரஷ்யா கூறியுள்ளது.
ஆயினும் ரஷ்யா சில நிபந்தனைகளுடன் போரை நிறுத்த தயாராக உள்ளது. ஆனாலும் உக்ரேன் மேற்குலக ஆயுதங்களை நம்பி இந்தப் போரில் ரஷ்யாவை பின்வாங்கச் செய்யலாம் என எதிர்பார்க்கிறது. இதுவரை ஹங்கேரிய சமாதான உடன்பாட்டை இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஹங்கேரியின் சமாதான பேச்சு ரஷ்யாவுடனான போர், இப்போது மூன்றாம் ஆண்டாக இழுத்துச் செல்லப்பட்டுள்ள வேளையில், எப்படி இப்போரை முடிவுக்கு வர வேண்டும் என்பதற்கான ஒரு ‘விரிவான திட்டத்தை’ உருவாக்கி வருவதாக சமீபத்தில் ஹங்கேரியின் பிரதமர் தெரிவித்தார்.
Hungary’s Prime Minister Viktor Orban and Ukrainian President Volodymyr Zelenskiy
ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் ரஷ்ய அரசு ஊடகமான சுவுக்கு தெரிவிக்கையில் தற்போது புரூசெல்ஸ் மற்றும் வாஷிங்டனால் திட்டமிடப்பட்ட ஒரு நேரடி இராணுவ மோதலுக்கான சாத்தியக்கூறு அதிகம் போல் தோன்றுகிறது. இதன் விளைவு போருக்குள் ஐரோப்பா நுழைவதற்கான தயாரிப்பு என்றும் கூறியுள்ளார்.
சுவு செய்தியின்படி, நேட்டோவின் முக்கிய நாடுகள் உக்ரேனிய மோதலில் அதன் பங்களிப்பை இன்னும் கூடுதலாக அதிகரிப்பதற்கான சிறந்த வளங்கலை வழங்கி வருகின்றன என்றும் அவர் கூறிக்கொண்டார்.
ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ மறைமுகமாக செய்து வருகின்ற போரில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் காண அவரது அரசாங்கம் விரும்புவதாகவும் ஓர்பன் தற்போது முனைந்துள்ளார்.
இப்போரில் ஹங்கேரியின் நிலைப்பாடு பற்றியும், தங்கள் நாட்டு வழக்கறிஞர்களும் அதிகாரிகளும் அமைதியை நாட்ட முனைகின்றனர் என்றும், அத்துடன் நேட்டோ நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஹங்கேரியை ஒரு நேட்டோ அங்கத்துவ நாடாக தொடர்ந்து இருக்க அனுமதிப்பதற்கான வழிகளில் செயல்பட்டு வருகின்றனர் எனவும் ஹங்கேரியின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமைதிக்காக புதிய அணுகுமுறையை, ஐரோப்பாவிற்குள் ஒரு சமாதான-ஆதரவு சக்தியாக தமது நிலைப்பாட்டிற்கு ஒரு புதிய சூழலை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடனான போருக்கான ஒரு தளமாக உக்ரேனைப் பயன்படுத்தி, மேற்குலக சக்திகள் முன்னாள்-சோவியத் குடியரசுகளை ஒருவருக்கொருவர் எதிராக போரிட வழிசமைத்துள்ளனர்.
அதேவேளை நேட்டோ ரஷ்யாவைத் தாக்கினால், ஹங்கேரி —ஸ்லோவாக்கியா மற்றும் பல்கேரியா போன்ற நாடுகள் போர் குறித்து எத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்பது இதுவரை தெளிவில்லை.
இம்மாத ஆரம்பத்தில் ஹங்கேரி பிரதமர் ஓர்பன் ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க மொஸ்கோ சென்றதை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தினார். இத்தகைய சூழலில், உக்ரைன் படையெடுப்புக்குப் பின்னர் மற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை விட மாஸ்கோவுடன் நெருக்கமான உறவைப் பேணி வருபவர் விக்டர் ஓர்பன்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, புட்டினும் ஓர்பனும் ரஷ்யாவில சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
அதனைப் போல இந்த ஜூலை தொடக்கத்தில், ஓர்பன் உக்ரேனிய தலைநகர் கிய்விற்கு விஜயம் செய்தார். அங்கு அவர் உக்ரேனிய ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஜூலை 2, 2024 அன்று ரஷ்யாவுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க போர்நிறுத்தத்தை பரிசீலிக்க வலியுறுத்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடிய பிறகு, கிய்வுக்கு ஒரு ‘நியாய அமைதி’ தேவை என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வேண்டினார்.
போர் தொடரும் வேளையில் ஹங்கேரியின் தலைவர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் சென்றுள்ளுமை ஐரோப்பிய ஒன்றியத்தால் வரவேற்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பை உக்ரேன் எதிர்த்துப் போராடுவதால், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இந்த சந்திப்பின் முக்கிய விடயமாக இருக்கும் என்று ஓர்பனின் செய்தித் தொடர்பாளர் ஹங்கேரிய செய்தி நிறுவனமான எம.;டி.ஐக்கு, பேச்சுவார்த்தை பற்றி கூறியுள்ளார்.
உக்ரேனிய ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நடந்த சந்திப்பில், உக்ரேனுக்கு தொடரும் மேற்கத்திய இராணுவ உதவியை கடுமையாக விமர்சித்த ஓர்பன், விரைவான போர்நிறுத்தம், அத்துடன் அமைதிப் பேச்சுக்களை விரைவுபடுத்த பரிந்துரைத்தார்.
உக்ரேனுடன் ஹங்கேரி தனது உறவுகளை மேம்படுத்த விரும்புவதாகவும், அதன் பொருளாதாரத்தை நவீனமயமாக்க உதவுவதாகவும் ஓர்பன் கூறியுள்ளார்.
ஹங்கேரிய தலைவரின் வருகையை பாராட்டுகிறேன் என்று கூறிய , ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உக்ரேனுக்கு ‘நியாய அமைதி’ தேவை என்று வலியுறுத்தி உள்ளார்.
இவ்வருட ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழலும் தலைமைப் பதவியை ஹங்கேரி ஏற்றுக்கொண்டது. இது சட்டமியற்றும் விவகாரங்களிலும், நிகழ்ச்சி நிரல்களை அமைப்பதும், மற்றும் ஒப்பந்தங்களைச் செய்வதும், ஆகியவற்றில் பெரும்பாலும் தலைமை நாடுகள் பொறுப்பேற்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழலும் தலைமைப் பதவியை ஹங்கேரி ஏற்று, ஓர்பனின் மாஸ்கோ வருகை, புடாபெஸ்டின் இறுக்கமான உறவுகளின் காரணமாக பலரையும் ஈர்த்ததுள்ளது.
போர் தொடங்கிய பின்னர், உக்ரேனுக்கு உதவுவதற்கும் ரஷ்யாவைத் தடைசெய்வதற்கும் ஐரோப்பிய ஒன்றிய திட்டங்களை ஹங்கேரி பலமுறை தடுத்து தாமதப்படுத்தியது.
அத்துடன் ஹங்கேரியும் உக்ரைனைக் கோபப்படுத்தும் வகையில், ரஷ்யாவுடன் நட்பை பேணியது. குறிப்பாக பொருளாதார உறவை ரஷ்யாவுடன் பேணியது. கடந்த ஆண்டு, ஜெலென்ஸ்கி சர்வதேச மன்றங்களில் விக்டர் ஓர்பனுடன் பல பதட்டமான விவாதங்களை நேர்கொண்டனர்.
உக்ரேன் தனது தொலைதூர மேற்கில் வசிக்கும் சுமார் 150,000 இன ஹங்கேரியர்களின் உரிமைகளைத் தடுப்பதாக ஹங்கேரி குற்றம் சாட்டியது. ஆயினும் இவ்விடயத்தில் புடாபெஸ்டின் கவலைகளைத் தீர்க்க தன்னால் முடிந்ததைச் செய்வதாகக் கூறி கிய்வ் அறிவித்தது.
இதுவரையில் ஹங்கேரிய தலைவரின் சமாதான உடன்பாட்டை இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யா சில நிபந்தனைகளுடன் போரை நிறுத்த தயாராக உள்ளது.
ஆனாலும் உக்ரேன் மேற்குலக ஆயுதங்களை நம்பி இந்தப் போரில் ரஷ்யாவை பின்வாங்கச் செய்யலாம் என எதிர்பார்க்கிறது. இலகுவான விடயமாக இல்லாவிடினும் இறுதியில் உக்ரேனின் நிர்க்கதியான நிலைக்கே தள்ளப்படும் சாத்தியங்கள் உள்ளன.
ஐங்கரன் விக்கினேஸ்வரா