– அமெரிக்க தேர்தலுக்கான நிதியில் அமெரிக்க வாழ் யூதர்களின் பங்கு முக்கியமானது
– இஸ்ரேலின் இருப்பானது அமெரிக்காவின் தயவிலானது. இஸ்ரேலின் இராணுவ பலமானது நேட்டோவின் கையிருப்பு ஆயுதத்திலானது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கமலாஹாரிஸ் வருகைக்குப் பின் முதன்மை பெறத் தொடங்கியுள்ளது.
இதுவரையும் முன்னணியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் பின்னுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் ஆதரவு அதிகரித்துள்ளது. சடுதியான மாற்றத்திற்கு கமலாஹாரிஸின் வருகையே பிரதான காரணம் என்று கருதப்படுகிறது.
கமலா ஹாரிஸ் ஒர் இந்திய பூர்வீகத்தைக் கொண்டவர் என்பதுடன் யூதரை திருமண உறவால் இணைந்துள்ளவர் என்ற கருதுகோளும் உள்ளது. அதனுடன் இணைத்தே இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அமெரிக்க விஜயம் பார்க்கப்பட வேண்டும்.
இக்கட்டுரையும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டதும் நெதன்யாகுவின் அமெரிக்க விஜயமும் (23.07.2024) எத்தகைய அரசியல் பிணைப்பை தருகிறது என்பதை தேடுவதாக உள்ளது.
அமெரிக்க தேர்தலுக்கான நிதியில் அமெரிக்க வாழ் யூதர்களின் பங்கு முக்கியமானது என்பது தெரிந்த விடயம்.
அதனால் அமெரிக்க ஜனாதிபதிகளை தேர்ந்தெடுப்பதில் யூதர்கள் செல்வாக்குச் செலுத்துகின்றனர் என்பதும் அதனால் அமெரிக்க- இஸ்ரேலிய உறவு பலமானதாக உள்ளது என்பதும் தவிர்க்க முடியாத அரசியலாக உள்ளது.
அதனடிப்படையிலேயே ஜோ பைடன் விலகியதும் கமலா ஹாரிஸ் வேட்பாளரானதும் நெதன்யாகுவின் வருகையும் சாத்தியமாகியுள்ளதாகவே தெரிகிறது.
அதற்காக யூதர்கள் குடியரசுக்கட்சி வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்று கூறிவிட முடியாது. யூதர்களைப் பொறுத்தவரை,
இருவரில் வெற்றிபெறும் வேட்பாளரை அரவணைத்து செயல்படும் திறன் கொண்டவர்கள். இரு வேட்பாளரையும் யூதர்களில் இருபிரிவினர் ஆதரவு வழங்குவார்கள். வெற்றி பெறுபவரை தமது கையாளுகைக்குள் வைத்திருப்பார்கள். இது யூதர்களின் மரபார்ந்த அரசியலின் இருப்பாக உள்ளது.
ஆனால் தற்போதைய நிலையில் ஜனநாயகக் கட்சியினரது இஸ்ரேலுடனான நட்புறவானது பலமானதாக உள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடனது இஸ்ரேல் தொடர்பிலான அணுகுமுறை தனித்துவமானது. இன்றைய நிலையில் இஸ்ரேலின் இருப்பை பாதுகாப்பதில் அமெரிக்காவின் பங்கு மிக அதிகமானது.
அதற்கு பைடனும் ஜனநாயகக் கட்சியினரும் முக்கிய பங்காற்றியவர்கள். இதனை குடியரசுக்கட்சி மேற்கொள்ளாது என்று கருதமுடியாது.
ஆனால் ட்ரம்ப்பைப் பொறுத்தவரை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கப்பிரல் கட்டடம் மீது நிகழ்த்திய தாக்குதல் ஜோ பைடனின் ஆணுகுமுறைகள் மீதுகொண்டுள்ள விமர்சனங்கள் கடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்ட விதம் என்பன அனைத்தும் ட்ரம்ப் மீதான வெறுப்பை அமெரிக்க மக்கள் மத்தியில் மட்டுமல்ல அமெரிக்க நிர்வாகத்தினரிடமும் ஏற்படுத்தியுள்ளது.
அவரை அதிகம் நம்ப முடியாது என்ற விவாதம் உள்ளது. அதற்காக அமெரிக்க- இஸ்ரேலிய உறவை ட்ரம்ப் பாதிக்கும் வகையில் செயல்பட்டதாகவோ எதிர்காலத்தில் செயல்படுவார் என்றோ அர்த்தமாகாது. குறிப்பாக ட்ரம்ப்பின் ஆட்சிக்காலத்திலேயே இஸ்ரேலுக்கு எதிரான எதிரிகள் இருநாடுகளாலும் வேட்டையாடப்பட்டனர்.
இஸ்ரேலின் இருப்புக்கான பலப்படுத்தலும் நிகழ்ந்துள்ளது. அது அமெரிக்க நலன்சார்ந்த நகர்வுகளாகவே நோக்கப்படுகிறது.
அதே நேரம் அமெரிக்காவின் உலகளாவிய நலன்களை தோற்கடித்ததில் ட்ரம்ப்புக்கு பங்கிருந்ததாக தெரியவருகிறது.
குறிப்பாக ரஷ்யா, சீனா, வட கொரியா என்பனவற்றைப் பொறுத்து ட்ரம்ப்பின் நிலைப்பாடு சற்று அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலனுக்கு எதிரானதாகவே அமைந்திருந்ததாக கருதுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி ஜனநாயகக் கட்சியின் காலத்தில் இஸ்ரேலின் வழித்தடத்தில் அமெரிக்க அணி செயல்படுவதும் குடியரசுக் கட்சியின் காலத்தில் அமெரிக்காவின் வழித்தடத்தில் இஸ்ரேல் நகர்வதையும் கடந்தகாலத்தில் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது.
இத்தகைய தன்மையே கமலா- நெதன்யாகு கூட்டுக்கு காரணம் எனக் கருதலாம். இதனை விரிவாக நோக்குதல் பொருத்தமானது.
முதலாவது, கமலா ஹாரிஸ்- நெதன்யாகு முரண்பாடு உள்ளதாக ஊடகங்கள் அதிகம் முதன்மைப்படுத்துகின்றன.
இஸ்ரேலின் போர்நிறுத்த உடன்பாட்டை சாத்தியப்படுத்துமாறும் அதற்கு ஹமாஸ் அமைப்புடன் இணைந்து செயல்படுமாறும் கமலா ஹாரிஸ் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
அது மட்டுமன்றி இஸ்ரேலிய பிரதமர் காங்கிரஸில் உரையாற்றும் போது ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது இருந்ததாகவும் கமலா ஹாரிஸும் கலந்து கொள்ளவில்லை எனவும் ஊடகங்களில் அதிகம் உரையாடப்படுகிறது.
கமலா ஹாரிஸ் போர்நிறுத்த உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பிணைக் கைதிகளை மீட்டெடுக்க வேண்டும் என்வும் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் உண்டு.
அனைத்துமே நிகழ்ந்துள்ளதாக இருந்தாலும் அடிப்படையில் இவை எதுவும் இஸ்ரேலிய- அமெரிக்க உறவைப் பாதிக்கும் என்றோ இருநாட்டின் உறவும் முடிவுக்கு வந்துவிடும் என்றோ கருதிவிட முடியாது.
இஸ்ரேலின் இருப்பானது அமெரிக்காவின் தயவிலானது. இஸ்ரேலின் இராணுவ பலமானது நேட்டோவின் கையிருப்பு ஆயுதத்திலானது.
இஸ்ரேலின் மனித உரிமை மீறலானது அமெரிக்கா சார்ந்த மேற்குலகத்தின் அரவணைப்பிலேயே உள்ளது.
கமலா ஹாரிஸ்- நெதன்யாகு முரண்பாடு என்பதெல்லாம் ஊடக அரசியல் ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் அமெரிக்க-இஸ்ரேல் அரசியல் என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
ஒருபோதும் அமெரிக்க- – இஸ்ரேல் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வொன்று நிகழ வாய்ப்பில்லை. அத்தகைய நெருக்கம் இரு நாட்டுக்குமானது. அதற்கு அடிப்படை அமெரிக்க வாழ் யூதர்களே. அதனடிப்படையிலேயே நெதன்யாகுவின் அமெரிக்க விஜயம் அமைந்துள்ளது.
இரண்டு, இந்தியப் பிரதமர் ரஷ்யாவுக்கு விஜயம் செய்த போது உக்ரைன் ஜனாதிபதி மட்டுமல்ல அனைத்து மேற்குலக ஊடகங்களும் மோடி மீது அதிக விமர்சனங்களை முன்வைத்தன.
அதாவது புட்டினுடனான நட்பினை அருவருக்கும் புட்டின் மீதான விமர்சனங்களை இந்தியப் பிரதமர் மீதும் செலுத்தினார்கள்.
நெதன்யாகு
39 ஆயிரத்திற்கு மேற்பட்ட பலஸ்தீனர்களை கொன்று குவித்த நெதன்யாகு மீது எத்தகைய விமர்சனமும் இன்றி ஊடகங்களும் தலைவர்களும் உரையாடும் தன்மையின் பிரதிபலிப்பு கவனிக்கப்பட வேண்டியது.
இதுவே மேற்குலக ஜனநாயகம் மனிதாபிமானம் மற்றும் நீதிச் செயன்முறையாகவுள்ளது. இதுவே மேற்குலக ஜனநாயத்தின் கூட்டு உற்பத்தியாகும். அது மேற்கு நாடுகளுக்குரியது.
தமது ஏகாதிபத்தியத்திற்கு ஆபத்து ஏற்படுத்தாத ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் கொண்ட அரசியல் உலகத்தையே படைத்துவருகின்றனர்.
இதனையே கீழைத் தேச நாடுகள் ஜனநாகம் என்ற விதிக்குள் இயங்குவதை பெரிதாக கருதுகின்றனர்.
இது வெள்ளைக்கார ஜனநாயகம் மனிதாபிமானம் மனித உரிமைகள் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. இத்தகைய ஏமாற்றுதத்தனத்தின் கீழ் உலகம் இயங்குவதே உலகளாவிய கட்டமைப்பாக உள்ளது.
ரஷ்ய ஜனாதிபதியை இனப்படுகொலையாளனாகவும் நெதன்யாகுவை நிரபராதியாகவும் மேற்குலகம் கருதுகிறது.
மூன்றாவது, அமெரிக்க காங்கிரஸில் இஸ்ரேலிய பிரதமர் உரையாற்றும் போது இரு நாட்டுக்குமான உறவின் முக்கியத்துவத்தை கோடிகாட்டியிருந்தார்.
ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புக்களை அழிப்பதற்கு இரு நாட்டினது உறவும் அவசியமானது.
அதில் ஹமாஸை தோற்கடிக்கும் வரை போரை தொடரப்போவதாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனாலும் இஸ்ரேலின் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.
தற்போது நடைபெறும் போர் நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இடையிலானது என்றார் நெதன்யாகு.
பலஸ்தீன போராட்டத்திற்கு ஈரான் ஆதரவளிக்கிறதெனவும் ஏறக்குறைய ஹமாஸ் அமைப்பு ஈரானின் பொம்மையாக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது இஸ்ரேலின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக தெரிவிக்கின்றது. இதனை அமெரிக்க காங்கிரஸில் நெதன்யாகு முன்வைக்க முடியும் என்பதே அமெரிக்க- இஸ்ரேலிய உறவின் தன்மையாகக் கண்டு கொள்ள முடிகிறது.
நான்காவது, கமலா ஹாரிஸின் வெற்றி வாய்ப்பினை பாதிக்கும் ஒரு விடயமாக அவரது பூர்வீகம் அமைந்துள்ளதாக குடியரசுக் கட்சி வேட்பாளர் தெரியப்படுத்தி வருகிறார்.
அதற்கான வாய்ப்பு காணப்பட்டாலும் அவரது ஆதரவுத்தளம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
அவ்வாறே அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றில் பெண் எவரும் இதுவரை அத்தகைய பதவியை அடையவில்லை.
இதில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அது ஒரு வரலாற்று பதிவாக மாறும் என முன்னாள் ஜனாதிபதி ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
அதனால் ஏற்படப் போகும் மாற்றம் ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் பெண்களின் தலைமைக்கு அமெரிக்கா இதுவரை முக்கியத்துவம் கொடுக்காத நிலையில் கமலா ஹாரிஸின் வெற்றி எத்தகையதாக அமையும் என்பதும் கவனத்திற்குரியது.
குறிப்பாக அவரது பிறப்பும் அவர் ஒரு பெண் என்ற விடயமும் அவரை நெருக்கடிக்கு உள்ளாக்கலாம்.
அதனைக் கடந்தே தற்போதைய ஜனாதிபதி தேர்தலை அமெரிக்கர்கள் – இஸ்ரேலியர்கள் நோக்குவதாகத் தெரிகிறது.
எனவே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கும் இஸ்ரேலியருக்குமான நெருக்கம் தனித்துவமானது.
ஈரானை மையப்படுத்தியே இஸ்ரேல் செயல்பட்டாலும் முழுமையான அராபிய உலகத்தையும் இஸ்ரேலிய ஹமாஸ் போர் இலக்கு வைத்துள்ளது.
அதற்கு அமைவான ஜனாதிபதியை முன்நிறுத்துவதே தற்போதைய நோக்கமாக உள்ளது. அதற்கு அமைவாகவே ஊடகங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன.
ட்ரம்ப் மீதான ஊடகங்களின் வெறுப்பு கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அதிகரித்துள்ளது. அத்தகைய மேற்குலகத்தின் விருப்புக்குள்ளேயே கமலாவின் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்படப் போகிறது.
-கே. ரீ. கணேசலிங்கம்-யாழ் பல்கலைக்கழகம்