டெல்லி: காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவருமான நட்வர்சிங் (வயது 93) காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவராக அறியப்பட்டிருந்த நட்வர்சிங் அதே காங்கிரஸ் கட்சியின் ‘முதல் குடும்பமான’ சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான கலகத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.
குறிப்பாக இலங்கை பிரச்சனையில் ராஜீவ் காந்தியின் தவறான அணுகுமுறை, சோனியா காந்தி குடும்பத்தின் ரகசியங்களை வெளியிடுதல் என காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை குடைச்சலாக இருந்தவர்தான் நட்வர்சிங்
காங்கிரஸின் முதுபெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் நட்வர்சிங். 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் கீழ் பிரதமர் அலுவலக பணியில் இணைந்தது முதலே அவரது குடும்பத்துக்கு நெருங்கிய நபரானவர் நட்வர்சிங். 1984ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை செயலராக பணியாற்றிய நட்வர்சிங் அந்த பணியை ராஜினாமா செய்தார்.
ராஜீவ் காலத்தில்… : 1984ஆம் ஆண்டு நட்வர்சிங்குக்கு அப்போதைய காங்கிரஸ் அரசு பத்மபூஷண் விருது அளித்தது.
1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணை அமைச்சரானார்.
1985-க்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் நட்வர்சிங் உருவெடுத்தார். பின்னர் காங்கிரஸில் இருந்தும் விலகினார்.
ஊழலில் சிக்கி பதவி இழந்த நட்வர்சிங்: 1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சோனியா கை ஓங்கிய பின்னரே மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார் நட்வர்சிங். லோக்சபா, ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்த அவர், 2004ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போது வெளியுறவுத் துறை அமைச்சரானார்.
2005ஆம் ஆண்டு ஈராக்குக்கு உணவு, மருந்துக்கு எண்ணெய் என்ற ஐ.நா. திட்டத்தில் நடந்த ஊழலில் சிக்கி அமைச்சர் பதவியை பறிகொடுத்தார் நட்வர்சிங்.
விரட்டியடித்த காங்கிரஸ்: 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் இருந்தும் நட்வர்சிங் நீக்கப்பட்ட நிலையில் 2008-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.
அக்கட்சியிலும் இருந்து நட்வர்சிங் நீக்கப்பட்டார். இதனையடுத்து ராஜீவ்-சோனியா குறித்து மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன் பல சோனியா குடும்பத்து ரகசியங்களையும் பகிரங்கப்படுத்தி பெரும் குடைச்சல் கொடுத்தார்.
குறிப்பாக One life not enough என்ற சுயசரியதை நூலின் மூலம் பல்வேறு திரைமறைவு அரசியல் நிகழ்வுகளை வெட்டவெளிச்சமாக்கினார் நட்வர்சிங்.
இலங்கை பிரச்சனையில் ராஜீவ் காந்தியின் செயல்பாடுகள் எவ்வளவு தன்னிச்ச்சையாக இருந்தது என்பதையும் அம்பலப்படுத்தியவர் நட்வர்சிங்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரனை ராஜீவ் காந்தி ரகசியமாக சந்தித்தது; அமைச்சரவையின் எந்த ஒரு ஒப்புதலுமே இல்லாமல் இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியது;
ஜேஆர் ஜெயவர்த்தனேவிடம் பிரபாகரனை தம்மிடம் ஒப்படைக்க கோரியது என பல நிகழ்வுகளை சுயசரிதை நூல் மற்றும் டிவி பேட்டிகளில் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் நட்வர்சிங்.
சர்வாதிகாரி சோனியா: சோனியா காந்தி பிரதமராவதை ராகுல் காந்திதான் தடுத்தார்; சோனியா காந்தி இந்திய தலைவராக இல்லாமல் எப்படியெல்லாம் இத்தாலி தலைவராக, சர்வாதிகாரியாக செயல்படுகிறார் எனவும் அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார் நட்வர்சிங்.
இந்திராவுக்கு நெருக்கமான தம்மை சோனியா குடும்பம் புறக்கணித்த கோபத்தில்தான் இத்தனையையும் நட்வர்சிங் பட்டவர்த்தனமாக பேசினார்.
காங்கிரஸின் முகமாக இருந்த நட்வர்சிங், வாழ்வின் கடைசியில் காங்கிரஸின் துரோகியாக வாழ்ந்து மறைந்துவிட்டார்.
ஆனாலும் நட்வர்சிங்கின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.