இளவரசர் இறந்ததால் கலவரங்கள் வெடிக்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் முதலாம் உலகப்போர் உருவாவதற்கே இந்தக் கொலைதான் பிள்ளையார் சுழிப் போடும் என்று அப்போது யாருமே எதிர்பார்க்கவில்லை.

இளவரசரின் கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்தது. அவர் மனைவியின் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்தன. இளவரசர் நினைவிழந்தார்.

ஆனால் அதற்கு முன் மனைவியைப் பார்த்து “சோஃபி இறந்துவிடாதே” என்று கதறினார். கவர்னரின் வீட்டை நோக்கி கார் பறந்தது.

அங்குப் போய்ச் சேர்ந்தபோது இருவருமே உயிரோடு இருந்தார்கள். என்றாலும் கடும் காயங்களினால் அதன் பின்னர் இறந்துவிட்டார்கள்.

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: ஆஸ்திரிய இளவரசருக்கு போஸ்னியாவில் நிகழ்ந்தது என்ன? பரபர நிமிடங்கள்!

இளவரசரைச் சுட்டவுடன் துப்பாக்கியை தன் நெற்றிப்பொட்டில் வைத்துக்கொண்டான் சதிகாரன். ஆனால் அருகிலிருந்த இருவர் சட்டென அவனை வளைத்துப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முதலாம் உலகப்போரில் தொடக்கப்புள்ளியாக அமைந்த அந்த ஒருவனைப் பற்றி மேலும் சில விவரங்களை அறிந்து கொள்வோம்.

கவ்ரிலோ ப்ரின்ஸிப் (Gavrilo Princip) அவனது பெயர். போஸ்னியாவில் பிறந்தவன். எனினும் செர்பிய இனத்தைச் சேர்ந்தவன்.

மிகவும் ஏழ்மையான குடும்பம். அவனுடைய பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளில் ஆறு பேர் பிறந்தவுடனேயே இறந்தனர்.

ஊட்டச்சத்து சிறிதும் கிடைக்கப் பெறாத தாய். ப்ரின்ஸிப்பை வளர்க்க முடியாத அவனது பெற்றோர் சரயோவோவிலுள்ள அவனது சித்தப்பா வீட்டுக்கு அவனை அனுப்பிவிட்டனர்.

கவ்ரிலோ ப்ரின்ஸிப்பை (Gavrilo Princip) பிடித்துக்கொடுக்கும் மக்கள்

ஆஸ்திரியாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ப்ரின்ஸிப் கலந்து கொண்டான். முதலிலேயே ‘கறுப்புக் கை‘ இயக்கத்தில் சேரத் தீர்மானித்தான்.

ஆனால் அவனது சிறிய உருவத்தைப் பார்த்த அந்த இயக்கம் அவனை அப்போது சேர்த்துக்கொள்ளவில்லை.

இந்த நிராகரிப்பால் ஏமாற்றமடைந்த அவன், ‘மற்ற யாரையும் விட நான் தாழ்ந்தவன் இல்லை‘ என்பதை நிரூபிக்கும் எண்ணத்தை அவனுக்குள் வளர்த்துக் கொண்டான்.

அதை அவன் நிரூபிக்க நினைத்ததே இளவரசரைக் கொல்ல முன் வந்ததற்கும் காரணமாக அமைந்தது என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பிடிபட்ட இரண்டு பேரையும் காவல்துறை விதவிதமாக விசாரித்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் உண்மையைக் கூறிவிட்டார்கள். இளவரசர் இறந்ததால் கலவரங்கள் வெடிக்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் முதலாம் உலகப்போர் உருவாவதற்கே இந்தக் கொலைதான் பிள்ளையார் சுழிப் போடும் என்று அப்போது யாருமே எதிர்பார்க்கவில்லை.

விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆஸ்திரியா கொதித்துப் போனது. தங்கள் இளவரசர் இறந்ததையும் அதற்குக் காரணமாக செர்பிய இயக்கம் ஒன்று இருந்ததையும் ஆஸ்திரியா – ஹங்கேரி நாட்டினால் ஜீரணிக்க முடியவில்லை.

அதெப்படி ஒரு நாடு – அதுவும் நம்மை விட ஒரு மிகச் சிறிய நாடு, இப்படி ஒரு சதி திட்டம் தீட்டி அதில் வெற்றியும் பெறலாம்?

கொல்லப்பட்டபோது ஆஸ்திரிய இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்ட் அணிந்திருந்த உடை

செர்பியாவைச் சேர்ந்த மூவர்தான் இதற்கு முக்கிய காரணம் என்பதை அறிந்து கொண்டது. “செர்பியா அரசு இந்த மூன்று பேரையும் வியன்னாவுக்கு (ஆஸ்திரியாவின் தலைநகர்) உடனடியாக அனுப்ப வேண்டும்” என்று ஆணையிட்டது. (அம்புகள்தான் போஸ்னியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர். எய்தவர்கள் செர்பியாவுக்குச் சென்றுவிட்டிருந்தார்கள்).

செர்பியாவின் அப்போதைய பிரதமர் நிகோலா பாசிக் இதற்கு மறுத்தார். “எங்கள் நாட்டில் கைது செய்தவர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்புவது முடியாது. ஏனென்றால் எங்கள் சட்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லை” என்று பதில் அனுப்பினார். தாங்களே ஒரு விசாரணைக் குழுவை அமைப்பதாகக் கூறினார்.

ஜூலை 23 அன்று, ஆஸ்திரிய அரசு செர்பியாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. நீங்கள் இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் உங்கள் மீது போர் தொடுப்போம் என்று ஒரு பட்டியலை முன்வைத்தது.

இரண்டே நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. ஆனால், இந்தக் கடிதம் செர்பியா ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டதே மாலை ஆறுமணிக்குத்தான்!

ஆஸ்திரியா அந்தக் கடிதத்தில் ஆறு விஷயங்களை வலியுறுத்தி இருந்தது.

போஸ்னியா உள்ளிட்ட செர்புகள் ஒன்றாக இணைவதிலிருந்து செர்பிய அரசு தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆஸ்திரியாவுக்கு எதிரான பிரசாரத்தை செர்பிய ஊடகங்கள் தொடர்வதை அடக்க வேண்டும். ஆ​ஸ்திரியாவுக்கு எதிராக செர்பியாவில் உள்ள தீவிரவாத இயக்கங்களைச் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

இளவரசர் படுகொலை தொடர்பாக செர்பியா ஒரு விசாரணையை மேற்கொள்வதாக அறிவித்திருந்தது. அந்த விசாரணையில் ஆஸ்திரியாவும் பங்குகொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தில் கவ்ரிலோ ப்ரின்ஸிப் (முதல் வரிசையில் நடுவில்...)

நீதிமன்றத்தில் கவ்ரிலோ ப்ரின்ஸிப் (முதல் வரிசையில் நடுவில்…)

 

செர்பியா, இந்த நிபந்தனைகளை ஏற்பதில் முதலில் தயக்கம் காட்டியது. எனவே குழப்பம் நீடித்தது.

பிறகு மீதி நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்ட செர்பியா கடைசி நிபந்தனையை மட்டும் ஏற்க மறுத்தது.தாங்கள் நடத்தும் விசாரணையில் வேறொரு நாட்டுப் பிரதிநிதியைக் கலந்துகொள்ள வைப்பது என்பது தங்கள் இறையாண்மைக்கு எதிரானது என்று அது கருதியது. ஆனால், ஒத்துக்கொண்டால் ஒப்பந்தத்தை முழுமையாக ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டியது ஆஸ்திரியா.

இளவரசர் கொலை செய்யப்பட்டு சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் செர்பியாவுக்கு ஆணையிட்டது ஆஸ்திரியா. ஆனால் செர்பியப் பிரதமரின் பதில் கிடைத்த மூன்றே நாள்களில் செர்பியாவின் மீது போர் தொடுக்கப்போவதாக அறிவித்தது. ஆக, முன்பே தீர்மானிக்கப்பட்ட முடிவுதான் இது.

ஜூலை 28, 1914 அன்று போர் அறிவிப்பு வெளியானது.

– போர் மூளும்…

Share.
Leave A Reply