“காஸாவில், போர்நிறுத்தம் கொண்டுவருவதற்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்திற்கும் இதுவே சிறந்த, ஒருவேளை கடைசி வாய்ப்பாக கூட இருக்கலாம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் பகுதிக்கு ஒன்பதாவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார் பிளிங்கன். திங்களன்று இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் உடனான சந்திப்பின் போது, பிளிங்கன் தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
கடந்த வாரம் தோஹாவில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியதில் இருந்து, போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது அமெரிக்கா.
ஆனால் போல் இஸ்ரேலிய துருப்புக்கள் காஸாவில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்துகிறது. இதில் இருதரப்புக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி, இந்த பேச்சுவார்த்தை குறித்த முன்னேற்றங்கள் எல்லாம் ஒரு ‘மாயை’ என்று ஹமாஸ் கூறுகிறது.
பிளிங்கன் இந்த விவகாரத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் திங்களன்று நெதன்யாகுவையும் சந்தித்தார்.
‘இதுவே கடைசி வாய்ப்பாகவும் கூட இருக்கலாம்’
“மீண்டும் இருதரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரிக்காது, எந்த ஆத்திரமூட்டக்கூடிய செயல்களும் நிகழாது மற்றும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலிருந்து எங்களைத் தடுக்கக்கூடிய செயல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்” என பிளிங்கன், ஹெர்சாக் உடனான சந்திப்பின் போது கூறினார்.
“அக்டோபர் 7க்கு பிறகு, நான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கிற்கு வருவது இது ஒன்பதாவது முறையாகும். இது முடிவெடுக்கவேண்டிய தருணம்.” என்று கூறினார்.
மேலும், “பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கும், போர்நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்கும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பாதையில் அனைவரையும் வழிநடத்துவதற்கும் இது சிறந்த வாய்ப்பு. இதுவே கடைசி வாய்ப்பாகவும் கூட இருக்கலாம்” என்றும் பிளிங்கன் தெரிவித்தார்.
தற்போதைய பேச்சுவார்த்தைகள், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான நீண்ட கால முரண்பாடுகளைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டவை.
அடுத்த வாரத்திற்குள், எல்லையில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டுவர முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.
ஆனால் அத்தகைய நம்பிக்கையை இஸ்ரேலிய தலைமையோ அல்லது ஹமாஸ் அமைப்போ பகிர்ந்து கொள்ளவில்லை.
இருத்தரப்பினரும், மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இதனால் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்படுவது தொடர்ந்து தடைபடுகிறது.
பிளிங்கன் (இடது) இந்த விவகாரத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு (வலது) அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இருதரப்புக்கும் இடையிலான முரண்பாடுகள்
ஹமாஸ் அமைப்பு, ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன்படிக்கையைத் தடுக்கும் நோக்கில் தடைகளை ஏற்படுத்துவதாகவும், போரை நீடிக்கும் நோக்கத்துடன் புதிய நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளை அமைப்பதாகவும்’ குற்றம் சாட்டியுள்ளது.
மத்தியஸ்தர்களின் முயற்சிகளை முறியடிப்பதற்கும், ஒப்பந்தத்தைத் தடுப்பதற்கும் நெதன்யாகுதான் முழு காரணம் என்றும் ஹமாஸ் கூறியது.
ஹமாஸ் அமைப்பின் விவகாரங்கள் குறித்து அறிந்த ஒருவர் முன்னதாக சௌதி ஊடகத்திடம் பேசிய போது, ‘எகிப்துடனான காஸாவின் தெற்கு எல்லையில் உள்ள ஒரு குறுகிய நிலப்பகுதியான பிலடெல்பி காரிடாரில், இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் குறைவான அளவில் நிலைநிறுத்தப்படும் என்ற திட்டமும் அந்த முன்மொழிவில் உள்ளது’ என்றார்.
ஆனால் இஸ்ரேலிய வட்டாரங்கள் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலிடம் பேசிய போது, ‘ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில், இஸ்ரேல் எடுக்கும் பிற நடவடிக்கைகள், எல்லையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதற்கு ஈடாக இருக்கும்’ என்று கூறியுள்ளன.
காஸாவில் 40,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான எதிர்பாராத தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் ஒரு போர்த்தொடரைத் தொடங்கியது, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
அதன் பிறகு காஸாவில் 40,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நவம்பரில் ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையின்படி ஹமாஸ் பிணைக் கைதிகளில் 105 பேரை ஒரு வார கால போர்நிறுத்தத்திற்கு ஈடாக விடுவித்தது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் இருந்த சுமார் 240 பாலத்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இன்னும் 111 பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 39 பேர் இறந்துவிட்டதாகக் கருதப்படுவதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
அமெரிக்காவின் அதீத ஆர்வம்
இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இதற்கு முன்னால் இருந்ததை விட, ஒரு உடன்படிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்தும் நிலைக்கு மிக அருகில் நாங்கள் உள்ளோம்” என்று கூறினார்.
ஆனால் பல மாத கால பேச்சுவார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட ‘ஒரு ஒப்பந்தத்திற்கான நம்பிக்கை’ ஆதாரமற்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ‘பிணைக் கைதிகளை திரும்பப் பெறுவதற்கான சிக்கலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் அதில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக சில கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்’ என்றும் நெதன்யாகு கூறினார்.
“நாங்கள் விட்டுக்கொடுக்கக்கூடிய சில விஷயங்கள் உள்ளன, ஆனால் உறுதியாக மறுக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. அதைத் தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். இரண்டையும் எப்படி வேறுபடுத்துவது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்,” என்று அவர் கூறினார்.
ஹமாஸ் பேச்சுவார்த்தைகளில் ‘பிடிவாதமாக’ இருப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர், ஹமாஸ் மீது மேலும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஒரு மூத்த ஹமாஸ் அதிகாரி சனிக்கிழமையன்று பிபிசியிடம் பேசிய போது, “மத்தியஸ்தர்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்தவை எல்லாம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை.” என்றார்.
இரு தரப்பிலிருந்தும் வரும் ‘கீழ்ப்படியாமை’ குறித்த பொது அறிக்கைகள், பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முக்கிய தந்திரமாக கருதப்படலாம்தான், ஆனால் இங்கு குறிப்பிடத்தக்க பகை மற்றும் அவநம்பிக்கை நிலவுகிறது. அதனால் தான் ஒரே வாரத்தில் உடன்படிக்கை எட்டப்படும் என்பது அதீத நம்பிக்கையாகத் தெரிகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசின் அழுத்தத்தின் பின்னணியில் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் அரசியலும் உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினருக்கும் இருப்பதை விட, அமெரிக்காவுக்கு அதீத ஆர்வம் இருப்பது போலவும், நேரம் குறைவாக இருப்பது போலவும் ஒரு உணர்வு எழுகிறது.
இஸ்ரேலின் மே 27 முன்மொழிவின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் பைடனால் கோடிட்டுக் காட்டப்பட்ட அசல் ஒப்பந்தம் மூன்று கட்டங்களில் இயங்குவதாக இருந்தது,
• முதல் கட்டத்தில், ஆறு வாரங்கள் நீடிக்கும் ‘முழுமையான போர்நிறுத்தம்’, காஸாவில் மக்கள் வாழும் அனைத்து பகுதிகளிலிருந்தும் இஸ்ரேலியப் படைகள் வெளியேறுதல் மற்றும் இஸ்ரேலில் உள்ள பாலத்தீனிய கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, ஹமாஸ் தரப்பில் உள்ள சில பணயக்கைதிகள், குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அல்லது காயமடைந்தவர்களை விடுவிப்பது ஆகியவை அடங்கும்.
• இரண்டாவது கட்டம், மற்ற அனைத்து (உயிருடன் இருக்கும்) பணயக்கைதிகளையும் விடுவிப்பது மற்றும் இருதரப்புக்கு இடையிலான “பகைமைகளுக்கு நிரந்தர முடிவு” ஆகியவை அடங்கும்.
• மூன்றாவது கட்டத்தில், காஸாவிற்கான ஒரு பெரிய புனரமைப்புத் திட்டம் மற்றும் இறந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திரும்பப் பெறுவது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள், ‘ஞாயிற்றுக்கிழமை அன்று, தெற்கு காஸா நகரமான கான் யூனிஸில் இருந்து இஸ்ரேலைத் தாக்கப் பயன்படுத்திய ராக்கெட் ஏவுகணைகளை அழித்ததாகவும், இதில் 20 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும்’ தெரிவித்தது.