சவால்களுக்கு தாம் ஒருபோதும் பயப்படுவதில்லை என்றும் சவால்களை தாம் விரும்புவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தாம் கொள்கைகளின் அடிப்படையில் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், செயற்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லத் தயார் எனவும் தெரிவித்தார்.
“நாங்கள் சவால்களுக்கு பயப்படுவதில்லை. நான் சவால்களை விரும்புகிறேன். அதைத்தான் நான் என் தந்தையிடம் கற்றுக்கொண்டேன். நான் யாரையும் வெறுக்கவில்லை. அதனால், எங்கள் மீது சேறு பூசுவது பயனற்றது,” என்று அவர் கூறினார்.
2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவேன் என்று கூறிய ராஜபக்ச, விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதாகவும் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்காது எனவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாப்போம், எம்மால் என்ன செய்ய முடியுமோ அதை மாத்திரம் கூறுவோம், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வடமாகாண மக்களை ஏமாற்ற மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.