ஒரு நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளில் ஒருவரின் தாயார், ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாருக்கு ஒரு யோசனையை வழங்கினார்.

‘இஸ்ரேலின் பாதுகாப்புத் தலைவர்களின் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, இறந்தவர்களும் உயிருடன் உள்ளவர்களுமென ஹமாஸின் பிடியில் இருக்கும் 109 பணயக்கைதிகளை விடுவிக்கவும்’ என்பதே அந்த யோசனை.

இந்த யோசனையை வழங்கிய டிட்சா ஓர்-இன் மகன் அவினாதன், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி, ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலின் போது நோவா இசை விழாவில் இருந்து கடத்தப்பட்டார்.

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், இஸ்ரேலின் தலைவர்களைப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தவில்லை. மாறாக, ஹமாஸுடன் மேலும் கடுமையாகப் போரிடச் சொன்னார்.

டிட்சா ஓர் போல மேலும் சில பணயக்கைதிகள் குடும்பங்கள் போரை ஆதரிக்கின்றனர். இவர்கள் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செயல்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

நெதன்யாகுவுக்கு அமெரிக்கா, அவரது பாதுகாப்புத் தலைவர்கள், மற்றும் அவரது சொந்தப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர், கொஞ்சம் வளைந்து கொடுத்து அமைதி ஒப்பந்தத்தை எட்டுமாறு அழுத்தம் தருகின்றனர்.

அமெரிக்க அதிபர் அதிருப்தி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையில் சமீபத்தில் ஒரு தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது.

அதுபற்றிக் கசிந்த அறிக்கைகள், ஜோ பைடன், நெதன்யாகுவிடம், ‘என்னை முட்டாளாக்காதீர்கள்’ என்ற தொனியில் பேசியதாகத் தெரிவிக்கின்றன.

இதன் உட்பொருள்: நெதன்யாகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை விரும்பவில்லை என்பதாகும்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே இடைவெளிகளைக் குறைக்கும் நோக்கில் கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தைகள் பலவீனம் அடைந்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலிய ஊடகங்களுக்குக் கசிந்துள்ள செய்திகள் நெதன்யாகுவுக்கும், அவரது அமைதி பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுக்கும் இடையிலேயே விரிசல்கள் ஏற்பட்டு வருவதாகக் கூறுகின்றன.

இஸ்ரேலின் தொலைக்காட்சி சேனல் 12-இன் தலைமை அரசியல் ஆய்வாளரான டானா வெயிஸின் கூற்றுப்படி, நெதன்யாகு தனிப்பட்ட முறையில், தனது முக்கிய பேச்சுவார்த்தை பிரதிநிதிகளும் பாதுகாப்புத் தலைவர்களும் ‘பலவீனமானவர்கள்’ என்று குற்றம் சாட்டினார். இஸ்ரேலின் ராணுவ நலன்களைப் பாதுகாப்பதில் தான் தனியாக நிற்பதாக அவர் காட்டிக் கொண்டார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் எவ்வளவு அவசரமாகத் தேவைப்படுகிறது என்பது பற்றி அவர்கள் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். காரணம், ஒவ்வொருவரும் அவர்களது பொறுப்புகளை வெவ்வேறு அளவில் உணர்கிறார்கள்.

“இஸ்ரேலிய ராணுவம் அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த சம்பவம் பற்றிக் குற்ற உணர்வுடன் உள்ளது. ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகளை மீட்டுக் கொண்டு வருவதைத் தனது தார்மீகக் கடமையாக அது கருதுகிறது,” என்று அவர் விளக்கினார்.

“ஆனால் இஸ்ரேலிய அரசாங்கம், அமைச்சர்கள், மற்றும் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் அக்டோபர் 7-ஆம் தேதியின் சம்பவத்துக்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கவில்லை.

அவர்கள் முழு பழியையும் ராணுவத்தின் மீது போடுகிறார்கள். எனவே அவர்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்படுவதற்கான அவசர உணர்வு இல்லை,” என்கிறார்.

நெதன்யாகு, ஹமாஸ் உடனான பொரில் வெற்றி பெறுவதே முதல் நோக்கம் என்றும், பணயக்கைதிகளை மீட்பது அதற்குப் பிறகுதான் என்றும் கூறியிருக்கிறார்.

‘பெரியளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களை எதிர்கொண்டு’ இஸ்ரேலின் பாதுகாப்பைப் உறுதிசெய்வதற்கான தனது நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.

ஒருமுறை இஸ்ரேலின் ‘மிஸ்டர் செக்யூரிட்டி’ என்று தனது பிம்பத்தை போற்றியவர், அக்டோபர் 7 தாக்குதல்களால் அந்த பிம்பம் சிதைந்து 10 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் அதை மீட்க முயற்சி செய்வது போலத் தெரிகிறது.

நெதன்யாகு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு உள்நாட்டு அரசியல் காரணங்களும் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
எகிப்து எல்லையில் முக்கியப் பிரச்னை

பிலடெல்பி காரிடார் என அழைக்கப்படும் எகிப்துடனான காஸாவின் எல்லையில் உள்ள ஒரு பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுமா என்பது அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.

இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகளை மேற்கோள் காட்டி, இஸ்ரேலிய ராணுவத்தை அங்கு வைத்திருக்கும் முடிவில் நெதன்யாகு உறுதியாக இருப்பதாகத் தோன்றுகிறது.

கசியும் தகவல்கள், நெதன்யாகுவின் இந்தப் பிடிவாதம் ‘அமைதி ஒப்பந்தத்தை முறிப்பதாக’ அவர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் கருதுகிறார்கள் என்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) பிபிசி-யிடம் பேசிய ஹமாஸின் மூத்த பிரமுகரான ஹுஸாம் பத்ரான், இஸ்ரேலியப் படைகள் பிலடெல்பி காரிடாரிலிருந்து திரும்பிப் பெறப்படவேண்டும் என்ற கோரிக்கையில் ஹமாஸ் குழு உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

இந்த விஷயத்தில் நெதன்யாகுவின் நிலைப்பாடு, அவர் ஒரு போர்நிறுத்த உடன்பாட்டை விரும்பவில்லை என்பதையும், அவர் வெற்றுப் பேச்சுவார்த்தைகள் மூலம் காலம் கடத்த நினைக்கிறார் என்பதையும் காட்டுகிறார், என்றும் பத்ரான் தெரிவித்தார்.

கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடந்துவரும் குண்டுவீச்சுத் தாக்குதல் மற்றும் மக்களின் இடப்பெயர்வுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலின் மீது நடத்திய தாக்குதலால் காஸா அல்லது பாலத்தீனர்கள் என்ன ஆதாயம் அடைந்தனர் என்ற கடினமான கேள்வியை ஹமாஸ் எதிர்கொள்வதாகப் பரவலாகக் கருதப்படுகிறது.

காஸாவில் இஸ்ரேலின் ராணுவம் தொடர்ந்து இருப்பது, வடக்கு நோக்கி நகரும் மக்களுக்கான சோதனைச் சாவடிகள் ஆகியவற்றை விடவும் கைதிகள் பரிமாற்றங்களில் சமரசங்கள் ஹமாஸ் குழுவுக்கு மிக எளிதாக இருக்கும் என்று கருதப்படுகின்றன.

பாலத்தீனர்கள் பொறுப்பேற்காத எந்தவொரு ஒப்பந்தத்தையும் எகிப்து நிராகரிப்பதாகவும் கருதப்படுகிறது.

ஆகஸ்ட் 22 அன்று காஸாவின் டெய்ர் அல் பலா-வில் நடந்த தாக்குதலில் இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகள்

யாருக்கு என்ன ஆதாயம்?

தற்போது நடக்கும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கவில்லை.

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், பிராந்திய மோதலைத் தூண்டும் வகையில் காஸா போரைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறார் என்று பரவலாகக் கருதப்படுகிறது. இது போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இரான் மற்றும் ஹெஸ்பொலாவின் அச்சுறுத்தல்களால் மோதல் தீவிரமடையும் அபாயம் உள்ளது. அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குக் கடுமையாக அழுத்தம் கொடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ளன. காஸாவில் போர் நிறுத்தம் அந்தப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவர உதவும் என்று அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகம் நம்புகிறது.

இஸ்ரேல் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குக் கூட உடன்படவில்லை என்றால், அது போர் தீவிரமடைவதற்கான உறுதியான வழி என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஒப்புக்கொள்கிறார், என்று அரசியல் ஆய்வாளர் டானா வெய்ஸ் கூறுகிறார்.

“ஆனால், நெதன்யாகு முற்றிலும் நேர்மாறாகச் சிந்திக்கிறார்,” என்று அவர் கூறுகிறார். “இஸ்ரேல் இப்போது சின்வார் கேட்பதற்கு இணங்கினால், ஹெஸ்பொலாவும் இரானும் இஸ்ரேல் பலவீனமாக இருப்பதாக நினைப்பார்கள். போரைத் தடுக்க, ஹமாஸை முழுதாக முடிக்க வேண்டும், என்று நெதன்யாகு கருதுகிறார்,” என்கிறார் வெய்ஸ்.

நெதன்யாகு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு உள்நாட்டு அரசியல் காரணங்களும் உள்ளன என்று வெய்ஸ் கூறுகிறார்.

பல மாதங்கள் மோசமாக இருந்த நெதன்யாகுவின் பிம்பம் இப்போது மீண்டும் மேம்பட்டு வருவதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன என வெய்ஸ் கூறூகிறார்.

அவரது வலதுசாரிக் கட்சியான லிகுட் சார்ந்தும், அவரது தனிப்பட்ட பிம்பம் சார்ந்தும் மக்கள் அவருக்கு வாக்களிக்க விரும்புவதாகச் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்புவரை இது நினைத்துப் பார்க்க முடியாதது.

எல்லைப் பகுதிக்கான இஸ்ரேலின் சமீபத்தியத் திட்டத்தை ஹமாஸுடன் பகிர்ந்து கொள்ள எகிப்து ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியம்தான் என்று மத்தியஸ்தர்கள் கருதுகின்றனர். ஆனால் எல்லா தரப்பிலும் நம்பிக்கைகள் சுருங்கி வருவதாகத் தெரிகிறது.

ஆகஸ்ட் 24-ஆம் தேதி இஸ்ரேலிய பிரதமரைச் சந்தித்த பின்னர், ஹமாஸிடம் இருக்கும் மற்றொரு இஸ்ரேலிய பணயக்கைதியின் மகள் எல்லா பென் அமி, தான் ‘நெதன்யாகுவை நேருக்கு நேர் பார்த்து, பணயக்கைதிகளை மீட்க அனைத்தையும் செய்வதற்கு சத்தியம் செய்யுமாறு’ கேட்டதாகக் கூறினார்.

“ஆனால், அது விரைவில் நடக்காது என்ற கனமான உணர்வுடன்” தான் திரும்பி வந்ததாக அவர் கூறுகிறார்.

இந்தப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கான நேரம் கடந்துகொண்டே வருகிறது, காஸா மக்களுக்கு, ஹமாஸின் சுரங்கங்களில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியப் பணயக்கைதிகளுக்கு, அந்த முழு பிராந்தியத்துக்கும்.

ஆனால் ஹமாஸ் தலைவர் சின்வார் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோருக்கு, இந்தப் போரில் அவர்கள் வைத்திருக்கும் மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் நேரம் தான்.

 

Share.
Leave A Reply