-காசா போர் 11ஆவது மாதத்தைத் தொட்டது

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் இஸ்ரேலியப் படை நேற்று அங்கிருந்து வெளியேறியுள்ளது. கடந்த பத்து நாட்களாக நீடித்த ஜெனின் நகர படை நடவடிக்கையில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் மோதல் நீடிப்பதோடு இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்கள் காரணமாக மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ‘காசாவில் மனிதாபிமான நிலைமை பேரழிவுக்கு அப்பாற்பட்டுள்ளது’ என்று ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் ஸ்டபனே டுஜரிக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்டில் காசாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு எந்த ஓர் உணவுப் பொருளும் கிடைக்கப்பெறவில்லை என்று நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பில் டுஜரிக் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒக்டோபர் 07 ஆம் திகதி காசா போர் வெடித்தது தொடக்கம் அந்தப் பகுதிக்கான எல்லைகளை மூடிய இஸ்ரேல் உணவு, மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்கள் செல்வதை கட்டுப்படுத்தி வருகிறது.

மறுபுறம் காசாவின் தெற்கு நகரான ரபாவில் நேற்றுக் காலை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்து ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. அங்கிருந்து ஆறு சடலங்கள் மீட்கப்பட்டதை உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் காசா நகரின் செய்தூன் பகுதியில் நேற்று இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்தது. இங்கு இஸ்ரேலியப் படை கடந்த வியாழக்கிழமை இரவு தொடக்கம் தாக்குதல்களை நடத்தி வருவதோடு முந்தைய தாக்குதல்களில் அறுவர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் வெடித்து இன்றுடன் 11 மாதங்களை தொடுவதோடு இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41,000ஐ நெருங்கியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

காசாவில் போருக்கு மத்தியில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை தொடர்வதோடு தற்போது அது தெற்கு காசாவில் இடம்பெற்று வருகிறது.

தெற்கு காசாவில் தடுப்பு மருந்து வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட நேற்று முன்தினம் முதல் நாளில் 160,000க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் தெற்கு காசாவின் சில பகுதிகளில் போலியோ தடுப்பு மருந்து திட்டத்துடன் தொடர்புபட்ட மருத்துவக் குழுக்கள் செல்வதற்கு இஸ்ரேலிய இராணுவம் ஒத்துழைப்பு வழங்க மறுத்ததாக காசா சுகாதார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

இந்தத் தடுப்பு மருந்து வழங்கும் முதல்கட்ட திட்டம் மத்திய காசாவில் முன்னெடுக்கப்பட்டதோடு அப்போது 10 வயதுக்கு உட்பட்ட 187,000க்கும் அதிகமான சிறுவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டத்தில் தெற்கு காசாவில் 340,000 சிறுவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

காசாவில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்க மத்தியஸ்தர்கள் தொடர்ந்து முயன்றுவரும் நிலையில் உடன்படிக்கைக்கான 90 வீதமான விடயங்களில் இணக்கம் எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இதில் எகிப்துடனான காசாவின் தெற்கு எல்லையின் எதிர்கால பாதுகாப்பு நிலை குறித்த பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருப்பாகவும் எஞ்சிய விடயங்களை தீர்ப்பதற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணங்கி இருப்பதாகவும் பிளிங்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிலடெல்பியா தாழ்வாரம் என்று அழைக்கப்படும் இஸ்ரேல் மற்றும் எகிப்து எல்லையில் தொடர்ந்து நிலைகொள்வதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக இருக்கும் நிலையில் அதற்கு ஹமாஸ் மற்றும் எகிப்து எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

சின்னாபின்னமான ஜெனின்

காசா போர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அங்குள்ள ஜெனின் நகரில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் நேற்று வாபஸ் பெற்ற பின் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சேதத்தால் குவிந்திருக்கு இடிபாடுகளை அகற்றும் பணியில் பலஸ்தீனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் படை நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டதோடு ஹெலிகொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் அதேபோன்று புல்டோசர்களும் பயன்படுத்தப்பட்டன. இதன்போது ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பத்தா உட்பட பலஸ்தீன போராட்ட குழுக்களுக்கும் இஸ்ரேலியப் படைக்கும் இடையே மோதல்களும் இடம்பெற்றன.

‘அவர்கள் நுழைந்தபோது, புல்டோசர்களை பயன்படுத்தி அனைத்தையும் அழிக்க ஆரம்பித்தனர். எதனையும் விட்டுவைக்கவில்லை’ என்று ஜெனின் குடியிருப்பாளரான சமஹர் அபூ நஸ்ஸா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

நீர் மற்றும் மின்சார சேவைகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டிருப்பதோடு இஸ்ரேலிய புல்டோசர்களால் சுமார் 20 கிலோமீற்றர் வீதிகள் தோண்டப்பட்டுள்ளன.

வீதியோர குண்டு தாக்குதல்களை தடுப்பதற்கு இந்த மூலோபாயத்தை பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது. எனினும் இதனால் நகரின் மத்திய பகுதிகள் சின்னபின்னமாக்கப்பட்டுள்ளது.

இந்த மூலோபாயத்தை பயன்படுத்தி காசாவைப் போன்று மேற்குக் கரையையும் தரைமட்டமாக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது என்று பலஸ்தீன வெளியுறவு அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

மேற்குக் கரையின் வட பகுதியில் இருக்கும் ஜெனின் நகரம் பலஸ்தீன போராட்டக் குழுக்கள் வலுப்பெற்ற பகுதியாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேலிய பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஈரான் ஆதரவு போராட்டக் குழு ஒன்றை முறியடிக்கும் வகையில் துல்கர்ம் நகரில் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டதோடு இறுதிக் கிரியையில் துப்பாக்கி ஏந்தியவர்கள் வானில் சுட்டு மரியாதை செலுத்தினர்.

ஜெனினில் இஸ்ரேலின் படை நடவடிக்கையின்போது 21 பேர் கொல்லப்பட்டனர். பெரும்பாலானவர்கள் போராட்டக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றபோதும் இதில் ஜன்னல் வழியே வெளியே பார்த்தபோது இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட 16 வயது சிறுமி உட்பட பொது மக்களும் உள்ளனர்.

மேற்குக் கரையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் நடத்திய இஸ்ரேலியப் படை நடவடிக்கையில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டு மேலும் 150 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

இதன்படி காசாவில் போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7 தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படை மற்றும் இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 691 ஆக அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply