ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரான கபாத்தியாவில் இஸ்ரேலியப் படை கடந்த வியாழக்கிழமை (19) நடத்திய சுற்றிவளைப்பில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேலியப் படை கூரை மேல் இருந்து தள்ளிவிடும் வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருப்பதோடு அதனை அல் ஜசீரா செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இஸ்ரேலியப் படையின் இந்த சுற்றிவளைப்பில் குறைந்தது எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இதன்போது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மொட்டை மாடியில் இருந்து கை, கால்கள் மற்றும் கண்கள் கட்டுப்பட்ட ஒருவரை இஸ்ரேலியப் படையில் காலால் தள்ளி கீழே வீசி எறிவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதனை ஒரு குற்றச் செயல் என்றும் இஸ்ரேலிய இராணுவத்தின் கொடூரம் என்றும் பலஸ்தீன வெளியுறவு அமைச்சு எக்ஸ் சமூகத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘இது (இஸ்ரேல் இராணுத்தின்) பெறுமானங்கள் மற்றும் (இஸ்ரேல் இராணுவ) படையினரிடம் எதிர்பார்க்கப்படுவதற்கு மாறான ஒரு தீவிர செயல்’ என்று குறிப்பிட்டுள்ளது.