“தமிழ் அரசு கட்சி சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்ததற்கும் தபால் மூல வாக்களிப்புக்கும் தொடர்புகள் இல்லை. தனிப்பட்ட முறையில் சஜித் பிரேமதாசவுடன் செய்து கொண்ட இணக்கப்பாடு அக்கட்சியின் அவசர அறிவிப்புக்கு காரணம்”
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில், சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானம் கடந்த முதலாம் திகதி அவசர அவசரமாக எடுக்கப்பட்டது.
மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளையும் ஆராய்ந்த பின்னர் அதற்கு என நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே, யாருக்கு ஆதரவளிப்பது என தீர்மானம் எடுக்கப்படும் என முன்னதாக முடிவு எடுக்கப்பட்டது.
அந்த முடிவுக்கு மாறாக, வவுனியாவில் மத்திய குழு கூட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்ட போது, அதற்கு முக்கியமாக கூறப்பட்ட காரணம், தபால் மூல வாக்களிப்புக்கு முன்னதாக தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே ஆகும்.
தபால் மூல வாக்களிப்பு கடந்த நான்காம் திகதி ஆரம்பமாகியிருந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் இடம் பெற்றன. அந்த சந்தர்ப்பங்களில் வாக்களிக்காதவர்களுக்கு கடந்த 11 மற்றும் 12ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றவர்கள் அரசாங்க ஊழியர்களும், பொலிஸார் மற்றும் முப்படையினருமே ஆவர்.
இவர்களில் முப்படைகளைச் சேர்ந்தவர்களை தவிர அரசாங்க ஊழியர்களில் கணிசமானோர் கல்வி அறிவு அதிகம் பெற்றவர்கள்.
அவர்கள் மத்தியில் தமிழ் அரசு கட்சியோ அல்லது வேறு எந்த ஒரு பலமான கட்சியோ வாக்களிப்பில் தாக்கத்தை செலுத்த முடியுமா என்பது கேள்விக்குறி.
சாதாரண மக்களை விட, தபால் வாக்குகளை அளிப்பவர்கள் அதிகம் அரசியலை புரிந்து கொண்டவர்கள், புரிந்து கொள்ளக் கூடியவர்கள். அதற்கான கல்வித் தகமைகளை கொண்டவர்கள்.
அவர்கள் சுயமாக முடிவெடுப்பவர்களாக இருப்பார்களே தவிர, எந்த ஒரு அரசியல் கட்சியினதும் வழிகாட்டலுக்கு ஏற்ப செயற்படுபவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.
எனவே, தபால் மூல வாக்களிப்புக்கு முன்னதாக எந்த ஒரு கட்சியும் தங்களது தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என்ற நியதியோ நிர்ப்பந்தமோ கிடையாது.
தமிழ் அரசு கட்சி அந்த தீர்மானத்தை எடுத்ததற்கும் தபால் மூல வாக்களிப்புக்கும் தொடர்புகள் இல்லை. தனிப்பட்ட முறையில் சஜித் பிரேமதாசவுடன் செய்து கொண்ட இணக்கப்பாடு மற்றும் பொது வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்ற இலக்கு , இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்து வவுனியாவில் நடந்த மத்திய குழு கூட்டத்தில் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி அங்கம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதால் தான், வடக்கு, கிழக்கில் சஜித் பிரேமதாசவுக்கு அதிகபட்ச வாக்குகள் கிடைத்தன என்று ஒரு மிகையான கற்பனை காணப்பட்டது.
ஆனால் உண்மை நிலை அப்படியல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்காமல் போயிருந்தாலும் கூட, சஜித் பிரேமதாசவுக்கு அதிகபட்ச வாக்குகள் கிடைத்திருக்கும்.
ஏனென்றால் அவருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ. அவர் தமிழர்களுக்கு எதிரான போரை எவ்வாறு முன்னெடுத்தார், அதற்கு எவ்வாறு உதவினார், அவரால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், ஏற்படுத்தப்பட்ட அவமானங்கள் எல்லாமே அவருக்கு எதிராக வாக்களிக்கின்ற மனோநிலையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
எனவே தமிழ் மக்கள், சுயமாகவே கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது வாக்குகளை வழங்குவதற்கு தீர்மானித்திருந்தனர்.
அவருக்கு எதிரான பிரதான வேட்பாளராக அப்போது இருந்தவர் சஜித் பிரேமதாச மாத்திரம் தான், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், அந்த வாக்குகள் இயல்பாகவே சஜித் பிரேமதாசவுக்கு சாதகமாக விழுந்தன.
சஜித் பிரேமதாசவுக்கு அந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை வைத்துக் கொண்டு, அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது என்று யாரும் கருத முடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ் அரசு கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்த போது, தபால் மூல வாக்களிப்பு முடிவடைந்திருந்தது.
அதற்குப் பின்னரே அவருடன் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டு அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ் அரசு கட்சியின் அல்லது கூட்டமைப்பின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான வாக்குகளில் தாக்கம் செலுத்தியிருந்தால்- தபால் மூல வாக்களிப்பின் போக்கிற்கும் நேரடி வாக்களிப்பின் போக்கிற்கும் இடையில் வேறுபாடு இருந்திருக்க வேண்டும்.
அதாவது தபால் மூல வாக்களிப்பில் சஜித் பிரேமதாசவுக்கு குறைந்தளவு வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடந்திருக்கவில்லை.
அப்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பில் சஜித் பிரேமதாசவுக்கு 84.69சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்கூட்டியே தீர்மானம் எடுத்திருந்த போதும், அவருக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 69.17சதவீத தபால் மூல வாக்குகளே கிடைத்திருந்தன.
கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருந்த போதும் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த வாக்குகளை விட, கூட்டமைப்பின் ஆதரவு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் நடந்த 2019 தபால் மூல வாக்களிப்பில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.
அதேவேளை 2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு மொத்தமாக 83.86சதவீத வாக்குகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிடைத்தன.
இது தபால் மூலம் கிடைத்த வாக்குகளின் சதவீதத்துடன் ஒப்பிடும் போது, ஒரு சதவீதம் குறைவாகும்.
கூட்டமைப்பின் ஆதரவு கிடைக்காத போது சஜித்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை விட, கூட்டமைப்பின் ஆதரவு கிடைத்த பின்னர் நேரடி வாக்களிப்பின் போது அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகள், ஒப்பீட்டளவில் குறைவாகும்.
அதேவேளை, 2015 ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த வாக்குகளை விட, அதிகமாகவே மாவட்ட அடிப்படையில் வாக்குகள் கிடைத்திருந்தது.
அப்போது மைத்திரிபால சிறிசேனாவுக்கு யாழ் மாவட்டத்தில் 74.42சதவீத வாக்குகள் கிடைத்தன. இது தபால் மூலம் கிடைத்த வாக்குகளை விட சுமார் 5சதவீத அதிகமாகும்.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2019 ஜனாதிபதி தேர்தலில் 79.3சதவீத தபால் மூல வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாசவுக்கு மாவட்ட ரீதியாக 82.12சதவீதவாக்குகள் கிடைத்திருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் 81.83சதவீத தபால் வாக்குகளை பெற்றிருந்த சஜித் பிரேமதாச மாவட்ட ரீதியாக 78.70சதவீத வாக்குகளையே பெற முடிந்தது. இது 3 சதவீதம் குறைவாகும்.
இந்த மூன்று தேர்தல் மாவட்டங்களின் முடிவுகளுடன் ஒப்பிடுகின்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அல்லது தமிழ் அரசு கட்சியின் ஆதரவு என்பது தபால் மூல வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்தி இருக்கிறது என கூறக்கூடிய நிலை இல்லை.
இந்தமுறை முன்கூட்டியே அவசரப்பட்டு தமிழ் அரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியிருக்கிறது.
இவ்வாறான நிலையில், இந்த தேர்தல் முடிவுகளில் அந்தக் கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாசவின் வாக்குகளில் எந்தளவுக்கு தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அது மாத்திரமல்ல இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழ் மக்களின் மனோநிலையையும் வாக்குகளின் போக்கையும் குறிப்பிடத்தக்களவில் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கும்.
-கார்வண்ணன்-