இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே முந்துகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார திஸநாயகே முன்னணியில் இருக்கிறார்.
தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அனுரகுமார திஸநாயகே தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.
தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்த அனுரகுமார திஸநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்த கட்டங்களில் படிப்படியாக குறைந்தது.
இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரணில் விக்கிரமசிங்கே மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல்
விறுவிறுப்பாக வாக்குப்பதிவு
இலங்கையில் 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகள் உள்பட இலங்கை முழுவதுமே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
1.7 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாயின.
வாக்கு எண்ணிக்கை
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், நேற்றிரவே இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 1,703 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்கே. சஜித் பிரேமதாசா ஆகிய மூவருக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவிய இந்த தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதே மக்களின் ஆதரவு அனுரகுமார திஸநாயகேவுக்கு அதிகம் இருந்தது புலப்பட்டது.
தபால் வாக்குகள் மட்டுமின்றி, வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளிலுமே அனுரகுமார திஸநாயகே, மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
அனுரகுமார திஸநாயகே – 15,70,412 (44.12%)
சஜித் பிரேமதாசா – 10,76,029 (30.23%)
ரணில் விக்ரமசிங்கே – 5,63,054 (15.82)
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, ஒட்டுமொத்தமான பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.
தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த அனுரகுமார திஸநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குறைந்து வருகிறது.
ஆனாலும், வெற்றி பெறத் தேவையான 50 சதவீத வாக்குகளுக்கு நெருக்கமாக அவரே இருக்கிறார்.
அதேநேரத்தில், சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிற. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் வாக்கு சதவீதம் குறைந்தே இருக்கிறது.
ஒருவேளை, யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிட்டால், மக்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தீர்மானிக்கப்படும்.
நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு
வாக்குப்பதிவு நாளான நேற்று (செப்டம்பர் 21) இரவு 10 மணி முதல் இன்று (செப்டம்பர் 22) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக போலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.
பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் நேரத்தில் வீட்டிலேயே நேரத்தைச் செலவிடுமாறு போலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை காலையிலும் தொடர்ந்த நிலையில் இலங்கை முழுவதும் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செக, தமிழர்களின் பொது வேட்பாளர் என்ற பெயரில் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் இருந்தனர்.