இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவாகியுள்ளார்.

இந்த நிலையில், அநுர குமார திஸாநாயக்கவின் பதவியேற்று நிகழ்வு நாளை (ஆக. 23) இடம்பெறவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

இடதுசாரி கொள்கையொன்றை அடிப்படையாகக் கொண்ட கட்சியொன்று இலங்கையில் ஆட்சி பீடம் ஏறும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைகின்றது.

இந்த நிலையில், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவாவதற்கு அநுர குமார திஸாநாயக்க எவ்வாறான சவால்களை எதிர்கொண்டார் என்பது குறித்த ஒரு தொகுப்பே இது.

ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள்

பொருளாதார நெருக்கடியின் போது 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட போராட்டங்களில் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, அரசியல்வாதிகள் தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில்கூட, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் மீது எவரும் தாக்குதல் நடத்தவில்லை.

போராட்டக்காரர்கள் முன்வைத்த கோரிக்கைகளை, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தமையே அதற்கான காரணம் எனக் கூறப்பட்டது.

“போராட்டம் முடிவடைந்த போதிலும், ஊழலுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி எழுப்பிய குரல் ஓயவில்லை.

ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகிய செயற்பாடுகள் உடன் நிறுத்தப்படும் என்ற உறுதிமொழியே, அநுர குமார திஸாநாயக்கவை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது,” என்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன்.

இந்த ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளே அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முக்கியக் காரணம் என்கிறார் அ.நிக்சன்.

”அநுர குமார திஸாநாயக்க கடந்து வந்த சவால்கள் என்று பார்த்தால், ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, யுத்தத்திற்கு எதிராகக் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இதுதான் அவர்களின் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது,” என்றார்.

மேலும், நார்வே அரசாங்கத்துடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் போது ஜே.வி.பியின் (ஜனதா விமுக்தி பெரமுனா) செயற்பாடு மிக மிக முக்கியமானதாக மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்திற்கு இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

“மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் யுத்தத்தை வென்றதாகச் சொன்னாலும், அதற்கான மூலமாக இருந்தவர்கள் ஜே.வி.பி. தான். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் ஊடாக இரண்டாக உடைத்தது.

தமிழ்த் தேசியம் என்ற ஒன்று அங்கு உடைக்கப்பட்டது. அதில் அவர்களின் பங்களிப்பு காணப்படுகின்றது. இறுதிப் போருக்காக இளைஞர்களைத் திரட்டினார்கள். இவர்களின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க கொழும்பிற்கு வந்தபோது, 50 ஆயிரம் இளைஞர்களைச் சேர்த்துக் கொடுப்பதாக முதலாவது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்” என நிக்சன் கூறினார்.

”இவர்கள் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வந்த ஒரு குழுவினர். இவர்களிடம் ஊழல், மோசடி இல்லை என்ற நம்பிக்கை சிங்கள மக்களிடம் இருந்தது. இவர்கள் நேர்மையானவர்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. தமிழ் மக்களை பொருத்தவரை இவர்கள் எதிரியாகப் பார்க்கப்படலாம். ஆனால், சிங்கள மக்களைப் பொருத்தவரையில் இவர்களை ஒரு தியாகியாகத் தான் பார்க்கிறார்கள்” என்கிறார் அவர்.

போராட்டங்களை நடத்தி தோல்வி கண்டு, பின்னர் ஜனநாயக வழியில் வந்து, மக்களுக்காகப் பேசி சோஷலிச சமத்துவம் என்ற போர்வையில் பௌத்த சமயத்தையும், அதனுடைய முக்கியத்துவத்தையும் கொடுத்துக் கொண்டு, பிரிவினைவாத போராட்டத்திற்கு எதிரான கருத்துகளை கொடுத்துக் கொண்டு ஒழுங்கான கட்டமைப்பைக் கொண்டு வருகிறார்கள் என்ற நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் இருந்ததாக நிக்சன் தெரிவித்தார்.

“அந்த விடயத்திலேயே அநுர குமார திஸாநாயக்கவிற்கு அதிக பங்களிப்பு இருந்தது. தமிழ் மக்களுக்குப் பொருந்தாதவர்கள் என்று பார்க்கலாம். ஆனால் சிங்கள மக்களுக்குப் பொருத்தமானர்” என அவர் குறிப்பிட்டார்.

”சந்திரிகா அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தாலும், பின்னர் பல வழிகளில் தொல்லைப்படுத்தியது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடைய அடக்குமுறைகளுக்குள் எழுந்து வந்தவர்கள்தான் இவர்கள்” என்கிறார் நிக்சன்.

கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் அநுர குமார திஸாநாயக்கவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது என்றும் போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு நேரடித் தொடர்பு இல்லாத போதிலும், மக்களை அதனூடாக தம்வசப்படுத்திக் கொண்டார்கள் என்றும் அதனுடைய முயற்சியாகவே இந்த வெற்றியைப் பார்க்க முடிகின்றது எனவும் நிக்சன் கூறுகிறார்.

இலங்கையின் பாரம்பரிய கட்சிகளை வீழ்த்திக் கொண்டு வந்தமையானது, பாரிய வெற்றியாகவே கருத முடிவதாக அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.
வெற்றியை சாத்தியமாக்கிய யுக்தி என்ன?

அநுர குமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் எவ்வாறான விடயங்களை முன்னிலைப்படுத்தி, இந்த சவாலை வெற்றிக் கொண்டார் என்பது குறித்து மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

”லஞ்ச ஊழல் தடுப்பு, நிதி மோசடி, அதிகார துஷ்பிரயோகத்தை செய்தவர்களுக்கான தண்டனையை வழங்குவதாக இதற்கு முன்னர் ஏனையோர் சொன்னார்கள். ஆனால், கொடுக்கவில்லை. இவர் தண்டனை கொடுப்பதாகச் சொன்னார்.

போர் குற்றம் தொடர்பில் பெரிதாகக் கருத்தில் கொள்ளமாட்டேன், விசாரணைகளை நடத்த மாட்டேன் என அவர் ஒரு பேட்டியில் கூறினார். இதையெல்லாம் சிங்கள மக்கள் பார்க்கின்றார்கள். இவர் வெளிப்படையாக அதைப் பேசியதாக அவர்கள் கருதுகின்றனர்” என்றார் சிவராஜா.

மேலும், “முக்கியமாக லஞ்ச ஊழலை முன்னிலைப்படுத்தினார். எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலிடம் சாராய அனுமதிப் பத்திரத்தை வாங்கியுள்ளதாக, அதை உறுதிப்படுத்த ஆதாரம் இருக்கின்றது என்று அநுர கூறினார்.

இதுபற்றி சஜித் ஏன் ஒன்றும் பேசவில்லை என மக்கள் பார்த்தார்கள். தமிழ் எம்.பிக்களும் இதை வாங்கியுள்ளார்கள். இந்த மாதிரியாக ஊழல்கள் நடக்கக்கூடாது. வீண்விரயம் இடம்பெறக் கூடாது என அநுர கூறினார்” என்றார் சிவராஜா.

யார் இந்த அநுர குமார திஸாநாயக்க?

மக்கள் விடுதலை முன்னணியாக 1965ஆம் ஆண்டு ரோஹண விஜயவீரவினால் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணியின் இடதுசாரி கொள்கைக்குள் ஈர்க்கப்பட்ட பெருந்திரளான இளைஞர்கள், அந்தக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், ரோஹண விஜயவீர தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி ஆயுத பயிற்சிகளை இளைஞர்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்து, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், வன்முறைகளும் ஏற்பட்டன.

நாட்டின் பல பகுதிகளை மக்கள் விடுதலை முன்னணி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, நாட்டின் ஆட்சிக்கு சவாலாக அமைந்திருந்தது.

இந்த வன்முறைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் வன்முறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இவ்வாறு ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது பெரிய கட்சி

இதையடுத்து, ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ரோஹண விஜயவீரவை விடுதலை செய்து, மக்கள் விடுதலை முன்னணி மீதான தடையை நீக்கியது.

அதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக ரீதியாக செயற்படும் அரசியல் கட்சியாகத் தம்மை அறிவித்துக் கொண்டது.

இவ்வாறான நிலையில், 1983ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறைகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியே காரணம் எனக் கூறப்பட்டது.

கடந்த 1990ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி மீள கட்டியெழுப்பப்பட்டு, 1994ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டது.

இந்த நிலையில், சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளைக்கூட பெற்றுக்கொண்ட அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகத் தொடர்ந்தும் செயற்பட்டு வந்தது.

இந்த நிலையில், அந்தக் கட்சியின் தலைவராக அநுர குமார திஸாநாயக்க 2014ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

அதன் பின்னர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த தேசிய மக்கள் சக்தி சார்பாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றது.

எனினும், கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியை மக்கள் போராட்டம் கலைத்ததை அடுத்து, ஊழலுக்கு எதிரான குரல் மிகவும் அதிகமாக எழுப்பப்பட்டது.

ஊழல், மோசடி, வீண்விரயம் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிராக அநுர குமார திஸாநாயக்க தொடர்ச்சியாக குரல் எழுப்பியிருந்தார். அதுவே அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply