இந்தியா தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி, ஹரியாணா சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னணியில் உள்ளது.
ஹரியானாவில் பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்று 9 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்று 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இம்மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி தேவைப்படுகிறது.
10 ஆண்டுகள் கழித்து, சட்டப்பிரிவு 370 ரத்துக்குப் பிறகு முதன் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி தொடக்கம் முதலே முன்னிலை வகிக்கிறது.
ஹரியாணாவில் தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில், அதாவது மூன்றில் இரு பங்கு தொகுதிகளில் முன்னிலை வகித்த காங்கிரஸ் அதன் பின்னர் பின்னடைவை சந்தித்தது.
பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட அதிகமாக முன்னணி வகிக்கிறது.
ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் தோல்வி
90 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் பாஜகவும், பிடிபியும் தனித்துப் போட்டியிட்டன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆம் ஆத்மி கட்சி ஓர் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா நவ்ஷேரா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
இந்த தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சுரேந்திர குமார் சவுத்ரி 35,069 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால் ரவீந்திர ரெய்னா 27 ஆயிரத்து 250 வாக்குகள் பெற்றார். சுமார் 7 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார்.
வினேஷ் போகாட் வெற்றி
ஹரியாணாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் வெற்றி பெற்றார்.
ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்த வினேஷ் போகாட், பின்னர் பாஜக வேட்பாளர் யோகேஷை விட கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துவந்தார்
இந்நிலையில், வினேஷ் போகாட் ஜூலானா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்புதான் முன்னாள் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் காங்கிரசில் இணைந்தார். அவருடன் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் காங்கிரசில் இணைந்தார்.
கடந்த தேர்தலில் இத்தொகுதியில் ஜனநாயக ஜனதா கட்சியின் அமர்ஜீத் தண்டா வெற்றி பெற்றார்.