நாட்டில் நிலவிவரும் தொடர் மழை, பலத்த காற்று, மர முறிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 11 மாவட்டங்களில் 18, 765 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கம்பஹா மாவட்டத்தில் 16,707 குடும்பங்களைச் சேர்ந்த 68,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 233 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தனகலு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதன்படி, எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு தெஹியோவிற்ற, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ, கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த களனி கங்கைப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சாரதிகள் அந்த வீதிகளின் ஊடாக பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது

இந்நிலையில் முல்லேரியா – கௌனிமுல்ல பகுதியில் வெள்ள நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

34 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் வெள்ள நீரில் குறித்த நபர் செலுத்திச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து, நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply