சி.சி.என்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஆதரவளிக்கப்பட்ட தரப்பினருக்கு சலுகைகள் என்ற ரீதியில் மதுபான உரிமங்களை விநியோகித்திருந்தமையை நாடே அறியும்.
ஒரு சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய அவர் நிதி அமைச்சையும் தன் வசம் கொண்டிருந்தார். ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் மதுபான உரிமங்கள் விநியோகிக்கப்பட்ட விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.
தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின்போது இது தொடர்பான பல அதிர்ச்சியளிக்கும் சம்பவம் வெளிப்பட்டுள்ளன.
அதாவது ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பிறகும் தேர்தல் வரை சுமார் 80 மதுபான உரிமங்கள் விநியோகிக்கப்பட்டமை தற்போது வெளியாகியுள்ளது.
குருணாகல் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் 19 வயது மகனின் பெயரில் ஒரு உரித்து விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமமானது செப்டெம்பர் டிசம்பர் 31ஆம் திகதி வரை செப்டெம்பர் 11ஆம் திகதியிலிருந்து செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
தனக்கு ஆதரவு வழங்கும் தரப்பினருக்கு சலுகை அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த இலஞ்ச செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்.
ஜனாதிபதி வசமே நிதி அமைச்சு உள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் தேர்தல் விதிகளை மீறி அவர் செயற்பட்டிருக்கின்றார் என்பதே இப்போது எழுந்துள்ள ஒழுங்கு பிரச்சினையாகும். செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.
ஆனால் செப்டெம்பர் மாதம் 18, 19, 20ஆம் திகதிகளிலும் உரிமங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் பாரதூரமான விடயமாகும். நிதி அமைச்சர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு உரிமங்களை விநியோகித்தமை பொருத்தமற்றது என கலால் திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.
தேர்தல் திணைக்கள அதிகாரிளின் விசாரணைகளில் பல விடயங்கள் அம்பலமாகி வருகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைப்பாளர்களின் பெயர்களில் இந்த தற்காலிக மதுபான உரிமங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.
நிபந்தனை என்னவென்றால் ஆளும் கட்சியின் குருணாகல் மாவட்ட தேர்தல் பிரசார கூட்ட மேடையில் அவர்கள் ஏறி ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செயற்படாததால் அவர்களுக்கான உரிமம் வழங்கப்படவில்லை. இப்படி பல தகவல்களை வெளிப்பட்டுள்ளன.
மதுபான உரிமங்களை விநியோகித்தல் என்பது ஒரு சிறப்பு சலுகையாகும். அவற்றை வழங்குவதற்கு குறிப்பிட்ட நடைமுறைகள் காணப்படுகின்றன.
கலால் திணைக்கள ஆணையாளர் சிபாரிசின் பெயரில் நிதி அமைச்சர் இந்த உரிமங்களை வழங்குகிறார். எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், நிதியமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தார். இந்த சூழ்நிலையில் அத்தகைய சலுகைகளை வழங்குவது மிகவும் நெறிமுறையற்றது. தேர்தல் சட்டத்தின்படி, இந்த நடவடிக்கை இலஞ்சத்திற்கு சமம்.
மேலும், தேர்தல் காலத்தில் மதுபான உரிமங்கள் வழங்குவதை நிறுத்தவும் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இது தொடர்பாக இலங்கை தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன்பிறகே உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டது.
எனினும் இக்காலகட்டத்தில் சுமார் 80 மதுபான உரிமங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால் அரசியல்வாதிகள் எவரின் பெயரிலும் உரிமங்கள் வழங்கப்படவில்லை. இவை அனைத்துமே அவர்களது உறவினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளர்களின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த உரிமங்களைப் பெற்றவர்கள் அவற்றை கணிசமான விலைக்கு விற்பனை செய்துள்ளனர். ஆரம்பத்தில் ரூ.2 பில்லியனுக்கு விற்கப்பட்ட உரிமம் ரூ.600 மில்லியனுக்கும் பின்னர் ரூ.10 மில்லியனுக்கும் மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த உரிமங்கள் விற்பனை செய்யப்படும் என்று கடிதங்கள் வழங்கப்பட்டாலும், அவற்றைக் கோருவதற்கு பலர் முன்வரவில்லை.
மதுபானங்களுக்கு உரிமம் வழங்கும் போது, உரிமம் வழங்குவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களை ஒரு நாளிதழில் வெளியிடுவது வழக்கம். விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு உரிமங்கள் பின்னர் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்த அமைப்பு நீண்ட காலமாக உள்ளது.
1970ஆம் ஆண்டு முதல் அரசியல் தலையீடு மூலம் மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 1977இல் அரசியல் செல்வாக்கு காரணமாக முறைகேடாக வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய, 28(பி) பிரிவின் கீழ், கலால் வரிச்சட்டம் திருத்தப்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட போதிலும், 1985– – 1986ஆம் ஆண்டில் கட்டளைச் சட்டத்தை மீறி உரிமங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட பல மதுபான உரித்துகளின் அமைவிடங்கள் பற்றி பிரச்சினைகள் தலைதூக்கியிருந்தன. பாடசாலைகள், ஆலயங்கள் அமைந்துள்ள சூழலில் புதிய மதுபானசாலைகள் உருவாவதை எதிர்த்து பிரதேச மக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆனால் இது குறித்து பிரதேச அரசியல்வாதிகள் வாய் திறக்கவில்லை. இதன் காரணமாகவே அரசியல்வாதிகளுக்கும் இதில் சம்பந்தம் இருக்கின்றதை மக்கள் உறுதிப்படுத்தினர்.
கடந்த அரசாங்கத்தில் பல அரசியல்வாதிகளுக்கு சலுகை அடிப்படையிலேயே மதுபான உரித்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவை அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் ,சகோதரர்களின் பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதன் பின்னணியில் கலால் திணைக்கள அதிகாரிகளும் இருப்பதாகவே தெரிகின்றது. ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் விநியோகிக்கப்பட்ட மதுபான உரித்துகள் தொடர்பான பல தகவல்களை திணைக்கள அதிகாரிகள் மறைத்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் போது அரசியல்வாதிகளுக்கு தனியார் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட மதுபானங்களுக்கு மேலதிகமாக சுமார் 130 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அனுமதிப்பத்திரங்களில் இருந்து பெறப்படும் கமிஷன் கட்டணம் முன்னாள் செல்வாக்கு மிக்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து போட்டியிடவுள்ளோர் அனைவருமே இந்த மதுபான உரித்துகளுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
ரணிலை விட்டு நீங்கினால் அவர் தரப்பில் உள்ளவர்கள் ஏதாவதொரு வழியில் அதை வெளிப்படுத்தி விடுவர் என்ற காரணத்தினாலேயே அவர்கள் அவருக்கு ஆதரவு தரும் வகையில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.