30 ஆண்டுகால போரை நடத்திய தமிழில் விடுதலைப் புலிகள் 2009 ஆம் ஆண்டு இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போது, அடுத்து என்ன என்ற கேள்வி இருந்தது.
ஏனென்றால், தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவாக அது அடையாளப்படுத்தப்படுகிறது. மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகளே நேரடியாகவும் மறைமுகமாகவும்,தமிழரின் அரசியல் போராட்டத்தை வழி நடத்தினார்கள்.
அவர்கள் இல்லாத இடைவெளி ஒன்று ஏற்பட்ட போது, அதனை எப்படி கையாளுவது, அந்த இடைவெளியை எப்படி நிரப்புவது என்ற கேள்விகளை எழுப்ப வைத்தது.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டாலும் அவர்களால் அல்லது அவர்களின் ஆசீர்வாதத்துடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கட்டமைப்பு, 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வலுவான ஒன்றாக இருந்தது.
பல்வேறுபட்ட அரசியல் கருத்துக்களை கொண்டிருந்தவர்களும், அந்தக் கூட்டமைப்பில் ஒன்றிணைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் அடுத்த கட்டமாக தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் நம்பிக்கை இருந்தது.
அவ்வாறான ஒரு நம்பிக்கையில் தான், விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார்கள். அவ்வாறான தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 15ஆண்டுகளில் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ் மக்களுக்கு என, அவர்களின் குரலாக ஒலிக்கக் கூடிய வலுவான ஒரு அரசியல் கட்டமைப்பு இன்று திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கிறது.
2009 ஆம் ஆண்டு போர் முடிந்தவுடன், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தமிழர்களின் ஆயுதப் போராட்ட வரலாற்று எச்சங்கள் அனைத்தையும் தேடி அழிப்பதில் ஈடுபட்டார்.
வடக்கு கிழக்கில் தமிழரின் ஆயுதப் போராட்டத்தை வெளிப்படுத்துகின்ற அனைத்து சின்னங்களும், எச்சங்களும் இல்லாமல் துடைத்தழிக்கப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்கள் கூட, சிதைக்கப்பட்டு அவற்றின் மீது படைத்தளங்கள் நிறுவப்பட்டன.
இலங்கையில் தமிழ் மக்களின் மிகப்பெரிய ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது என்ற வரலாற்றை மறைக்க வேண்டும் என்பதை நோக்காக கொண்டே, அந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
ஆனாலும், மாவீரர் துயிலும் இல்லங்களை மக்கள் மறந்து போகவில்லை, நினைவேந்தல்கள் அவர்களை விட்டுப் போகவில்லை. அது ஆட்சியாளர்களுக்கு ஒரு தோல்வியாகவே இருந்து வந்தது.
அதேபோல, ஆட்சியாளர்களுக்கு உறுத்தலாக இருந்த இன்னொரு விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதனையும் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சமாகவே பார்த்து வந்தார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த சிலர், சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுடன்,இணங்கிப் போகின்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு விசுவாசமானவர்களாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாகவே சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளால் பார்க்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் இதனை அவர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளை அழித்தாயிற்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று, அவர்களில் பலர் பாராளுமன்றத்தில் கோசமிட்டதை யாரும் மறந்து போய்விட முடியாது.
கூட்டமைப்பில் இருந்த தனிநபர்களை குறிவைத்து அவ்வாறான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாமல் செய்வதை நோக்காக கொண்டே அவர்கள் அதனை இலக்கு வைத்தார்கள்.
அவர்களால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய முடியவில்லை. ஏனென்றால் தமிழரின் அரசியல் பிரதிநிதிகளாக சர்வதேச சமூகத்தினால் பார்க்கப்பட்டு வந்த, ஒரு அரசியல் அமைப்பை தடை செய்யும் போது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும்.
ஆனால் இப்போது அவர்கள் யாரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யுமாறு கேட்பதில்லை. ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது. அதனை அரசாங்கம் நேரடியாகச் செய்யவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களே செய்து முடித்தார்கள்.
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் எச்சங்களை இல்லாமல் செய்கின்ற, கோட்டாபய ராஜபக்ஷவின் நிகழ்ச்சிநிரலில் ஒரு முக்கியமான கட்டம் அதன் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதனை செய்தது வேறு யாரும் அல்ல, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தான். தமிழ்த் தேசிய அரசியல் முகமூடியுடன் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டவர்கள் தான் அதனைச் செய்தார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைத்து சிதைத்து, அதனை அவர்கள் ஒன்றும் இல்லாமல் ஆக்கி இருக்கிறார்கள்.
இதில் சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்களின் பங்களிப்பு மிக மிக அதிகமானது. அவர்கள், தெரியாமல் அந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொடுத்திருப்பார்கள் என்று யாரும் கருதுவதற்கில்லை.
அதேவேளை ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கு அதில் பங்களிப்பு கிடையாது என்று யாரும் கூறவும் முடியாது.
இந்த விடயத்தில், எல்லா தரப்புகளாலும் தவறுகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ, சுரேஷ் பிரேமச்சந்திரனோ, செல்வம் அடைக்கலநாதனோ அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.
தனது பாட்டனாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தையும், சின்னத்தையும் கட்டிக்காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கஜேந்திரகுமார், விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரம்பரியத்தை கட்டி காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை.
அவர் தான் முதலில் கூட்டமைப்பை சிதைப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர். அவ்வாறு அவர் முடிவெடுப்பதற்கு காரணமாக இருந்தவர்களை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.
கஜேந்திரகுமாருக்குப் பின்னர், ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர் அல்லது வெளியேறினர். கடைசியாக, இருந்த கூட்டமைப்பை, உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவதாக முடிவு எடுத்து இல்லாமல் செய்தது.
இப்போது அதே தமிழரசுக் கட்சியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட கட்சி என்று பெருமை கூறிக் கொள்பவர்கள் , தமிழர் விடுதலை கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் அந்தக் கட்சியை பெயரளவிற்கு தான் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், கூட்டமைப்பு, தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போது, விடுதலைப் புலிகள் தான் தமிழரசுக் கட்சியை மீளவும் மக்களிடம் கொண்டு சென்று, வீடு சின்னத்தை பிரபல்யப்படுத்தினார்கள். இதனை அன்றிருந்த எந்த ஒரு தமிழரசுக் கட்சி தலைவராலும், மறுக்க முடியாது.
2004 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியையும் அதன் சின்னத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடையாளமாக மாற்றிய விடுதலைப் புலிகள், அந்தக் கட்சியை மீளவும் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்ததால் தான், இதுவரை அந்தக் கட்சிக்கு பலர் ஆதரவளித்து வந்தனர்.
அவர்கள் எல்லோரும் இப்போது அந்த ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டது. அத்தகைய நிலையை ஏற்படுத்தியது தமிழரசு கட்சியும், சுமந்திரனும் தான்.
தமிழரசுக் கட்சியில் இருந்து தனக்கு எதிரானவர்களை வெளியேற்றி வெளியேற்றி இப்போது அந்த கட்சியையே வெறுமை நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார் அவர்.
விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட அல்லது ஆதரிக்கப்பட்ட அரசியல் அடையாளங்களை முற்றுமுழுதாக இல்லாமல் செய்யும் நிகழ்ச்சி நிரலின் இறுதி கட்டம் இது.
இப்போது தமிழரசு கட்சி கிட்டதட்ட தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்பட்ட ஒன்றாக மாறி விட்டது. விடுதலை புலிகளின் அடையாளங்கள் ஏதும் இல்லாத ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனை ஒற்றை ஆளாக செய்து முடித்திருக்கிறார் சுமந்திரன்.
இதன் மூலம் தமிழரசு கட்சியை, அவர், 75 ஆண்டு பாரம்பரியத்தில் இருந்து வெளியேற்றி, சிங்களத் தேசியத்தை சார்ந்த ஒன்றாக மாற்றியிருக்கிறார்.
15 ஆண்டுகளுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷவினால் முடியாத காரியத்தை, சிங்களப் பேரினவாதிகளால் கடந்த 15 ஆண்டுகளாக செய்ய முடியாமல் இருந்த காரியத்தை, அவர் குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றியிருக்கிறார்.
இதன் மூலம் அவருக்கு என்ன ஆதாயம் கிடைக்கிறதோ இல்லையோ, தமிழ் மக்களுக்கும் சரி, தமிழரசு கட்சிக்கும் சரி, எதுவுமே கிடைக்காத கிடைக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
-என்.கண்ணன்