வழுக்கை தலையில் தங்கம் இருப்பதாக ஒரு மூட நம்பிக்கையில் ஆபிரிக்கா கண்டத்தின் மொசம்பிக் நாட்டிலுள்ள ஒரு மாநிலத்தில் சில வழுக்கை தலை ஆண்கள் கொல்லப்பட்ட சம்பவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்றிருந்தது.

இதை பொலிஸார் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். மீண்டும் இவ்வாறானதொரு விபரீத சம்பவங்கள் 2022 ஆம் ஆண்டும் பதிவாகியிருந்தது.

இதன் காரணமாக குறித்த மாநிலத்தில் வழுக்கை தலை ஆண்கள் வீடுகளிலிருந்து வெளியே வரவே அச்சமுற்றிருந்தனர். தற்போது மீண்டும் இந்த அச்சம் தலைதூக்கியுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக ஆபிரிக்கா கண்டத்தின் சில நாடுகளில் மிகவும் பழமையான பழக்க வழக்கங்களை பின்பற்றும் மக்கள் இன்னும் நவீன உலகத்திற்கு காலடி எடுத்து வைக்கவில்லையென்ற விடயம் உண்மை தான்.

அதிகமாக பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் நாடுகளில் ஆபத்தை ஏற்படுத்தும் மூட நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் இந்த நவீன காலத்திலும் நிலவி வருகின்றன. மொசம்பிக் நாட்டின் மிலாங்கே எனும் மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு ஒரு விநோதமான சம்பவம் நடக்க ஆரம்பித்தது.

அதாவது வழுக்கை தலை ஆண்கள் தமது தலைகளினுள்ளே தங்கத்தை கொண்டிருக்கின்றனர் என்ற கதை பரப்பப்பட்டது.

இதன் காரணமாக அவ்வாண்டு ஐந்து வழுக்கை தலை ஆண்கள் இனந்தெரியாத குழு ஒன்றினால் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் தலையற்ற உடற்பகுதியே கிடைத்தது. இந்த கொடூரமான காரியத்தை செய்தவர்கள் மிகவும் பின்தங்கிய இனக்குழுக்களை சேர்ந்தவர்களாவர்.

வழுக்கை தலையர்களை கொன்ற குற்றத்துக்காக குறித்த இப்பிரிவினரில் இருவர் அத்தருணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதில் என்ன பிரச்சினைகள் என்றால் அல்பினிசம் என்று கூறப்படும் ஒரு வகை குறைபாட்டால் தலையில் மயிர் இல்லாது வழுக்கை தலையர்களும் இதனால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த மூட பழக்க வழக்கம் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்வதாக பொலிஸார் கூறுகின்றனர். மொசம்பிக்குக்கு அருகில் உள்ள மலாவி என்ற நாட்டில் இதே காரணங்களுக்காக 2014 ஆம் ஆண்டு 20 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிக்கின்றது.

சில மொசம்பியர்கள் வழுக்கை தலை ஆண்கள் மிகவும் பணக்காரர்களாக இருப்பார்கள் என்று நம்புகின்றனர்.

அவர்களின் தலையினுள்ளே தங்கம் இருப்பதாக நினைக்கின்றனர் என அப்பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மொசம்பிக் நாட்டில் 2017 ஆம் ஆண்டு பரவிய இந்த வதந்தியானது பலரை அச்சத்துக்குட்படுத்தியது.

இயற்கையாகவே தலையில் மயிர் இல்லாதவர்கள் மற்றும் விட்டமின் குறைபாடால் தலை வழுக்கையானவர்கள் தமது வீடுகளிலிருந்து வெளியே வர அச்சமுற்றனர்.

இதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கும்பல் ஒன்று வழுக்கை தலையர்களை குறி வைத்து கொலை செய்ய ஆரம்பித்தது.

பின்னர் பொலிஸார் தமது தேடுதல்களை தீர்விரமாக்கியதும் அந்த செயற்பாடு குறைந்தது. ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் இந்த வழுக்கை தலையர்களை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்தன.

இது தொடர்பான விசாரணைகளின் போது இந்த கதையை பரப்பியவர்கள் அங்குள்ள மந்திரம், சூனியம் செய்பவர்கள் என்ற கதை வெளியானது.

அதாவது வழுக்கை தலையர்களின் உடல் உறுப்புகள் மிக முக்கியமாக தலைக்குள் தங்கம் இருப்பதாக இவர்களே கதையை பரப்பியுள்ளனர்.

இவர்களின் கதைகளை கேட்டு அவ்வாறு மனிதர்களை கொல்லும் நபர்களிடமிருந்து தமது சூனிய காரியங்களை செய்வதற்கு இந்த மந்திரவாதிகள் மனித உடல் உறுப்புகளை பெற்றுக்கொள்கின்றனர் என்ற விடயம் தெரிய வந்தது.

கொல்லப்பட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் உடலில் உள்ள சில உறுப்புகள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் கண்டு பிடித்தனர்.

கோடீஸ்வரர்களின் உடல் உறுப்புகளை வைத்து பூஜை செய்யும் பழக்கம் மொசம்பிக்கை சூழ அமைந்திருக்கும் நாடுகளான தன்சானியா , மலாவி உள்ளிட்ட பகுதி மக்களிடையே உள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சூனியக்காரர்களால் மூட நம்பிக்கைக்காக கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தது மாத்திரமல்லாது வழுக்கைத் தலை உடையவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தற்போதும் இவ்வாறான சம்பவங்கள் மறைமுகமாக இடம்பெற்று வருவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழுக்கை தலைக்குள் தங்கம் உள்ளது என்ற இந்த மக்களின் மூட நம்பிக்கை அவர்களுக்கு எந்த அளவுக்கு கல்வியறிவு உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

கல்வி அறிவில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த மக்கள் எப்படியாவது பணக்காரர்களாகி விட வேண்டும் என நினைக்கின்றனர். இதன் காரணமாக எதை யார் சொன்னாலும் அதை நம்பும் மனிதர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

(சி.சிஎன்)

Share.
Leave A Reply