யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மூன்று முக்கியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.
ஒன்று – கட்சியில் இருந்து தன்னை வெளியேற்றுவதற்கு நடந்து வருகின்ற முயற்சிகள்.
இரண்டு – கடைசிவரை தமிழரசு கட்சியிலேயே இருப்பேன், வெளியேறமாட்டேன்.
மூன்று, இந்த தேர்தலில் தமிழரசு கட்சிக்கு 15 ஆசனங்கள் கிடைக்க வேண்டும்.
இவையே அந்த மூன்று முக்கியமான விடயங்கள்.
தமிழரசு கட்சியில் இருந்து சிறிதரனை வெளியேற்றுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது என்று அவரே பகிரங்கமாக கூறியிருக்கிறார். இது அவர் கட்சிக்குள் எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடியை வெளிப்படுத்துகிறது.
தமிழரசுக் கட்சியில் இப்போது சிறிதரனின் இருப்பு, மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை, அவரது கூற்று உணர்த்துகிறது.
அவரை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிப்பது யார்? அவரை வெளியேற்றுவதால் அவர்களுக்கு என்ன இலாபம்?
தமிழரசு கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறிதரனுக்கு, கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாதது போல, அந்தப் பதவி அவரது கைக்கு வரவில்லை.
தமிழரசு கட்சியின் நிர்வாகிகள் தெரிவுக்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றனர். அவர்கள் யார், அவர்களுக்கு பின்னால் யார் இருந்தார்கள், என்பது தமிழரசு கட்சியில் உள்ளவர்களுக்கு மாத்திரமன்றி- அன்றாட நடப்புகளை அறிந்து கொள்ளுகின்ற அனைவருக்கும் நன்றாக தெரியும்.
சிறிதரனுக்கு கட்சித் தலைவர் பதவி கிடைப்பதை தடுக்க முயன்று தோற்றுப்போன நிலையில், பொதுச்செயலாளர் பதவியை வசப்படுத்திக் கொள்வதற்கு அல்லது தமக்கு வசதியான ஒருவருக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அதிகம் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
தமிழரசு கட்சியில் தலைவர் ஆளுமை உள்ளவராக இருந்தால் மட்டுமே, அவரால் பொதுச்செயலாளரை கட்டுப்படுத்த முடியும். கட்சியில் பொதுச்செயலாளருக்கு அதிக அதிகாரங்கள் உள்ளது.
அதனால் அந்தப் பதவியை தங்கள் பக்கம் எடுத்துக் கொள்வதற்கு முற்பட்ட தரப்பினர்தான், சிறிதரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளின் தெரிவை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தினார்கள்.
அந்த விவகாரம் இன்னமும் நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இந்த சூழலில் தான், கட்சியில் தலைமைப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட தனக்கு எதிராக, தனது கட்சியினரே நீதிமன்றத்துக்கு சென்றார்கள் என்பதை சிறிதரன் நினைவுபடுத்தியிருக்கிறார்.
சிறிதரனை கட்சியில் இருந்து அகற்றுவதற்கு அல்லது சிறிதரனுக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு காரணமாக இருந்தவர்களும், அந்த அரங்கிலேயே அமர்ந்திருந்தார்கள்.
அவர்களை வைத்துக் கொண்டுதான் சிறிதரன் அந்த குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
சிறிதரன் தமிழரசு கட்சியை விட்டு வெளியேறப் போகிறார் என்று வதந்திகள் பரப்பப்படுவதாகவும், ஆனால், தான் வெளியே செல்லப் போவதில்லை என்றும் கட்சிக்குள் இருந்தே போராட போவதாகவும் கூறியிருக்கிறார்.
இது முக்கியமான ஒரு விடயம். தன்னை கட்சியை விட்டு வெளியேற்ற நினைக்கின்ற தரப்புடன் சிறிதரன் மல்லுக் கட்ட போவதாக பகிரங்கமாக போர்ப்பிரகடனம் செய்திருக்கிறார்.
இது தமிழரசு கட்சிக்குள், ஏற்கனவே இருந்து வந்த பனிப்போரை, இன்னும் தீவிரமான கட்டத்திற்கு கொண்டு செல்ல போகிறது.
கட்சியில் இருந்து வெளியேறமாட்டேன், என்பது வேறு, கட்சிக்குள் இருந்து கொண்டு போராடுவேன் என்பது வேறு. மாவை சேனாதிரா ஜா கட்சியை விட்டுப் போகமாட்டேன் என்று கூறுகிறாரே தவிர, உள்ளே இருந்து போராடுவேன் என்று கூறவில்லை.
அதாவது அவர் பெயருக்கு கட்சியில் இருந்து விட்டுப் போவோம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ஆனால் சிறிதரன் கட்சிக்குள் இருந்து கொண்டு போராடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
வேறு எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன், தமிழரசு கட்சியில் மாத்திரம் இருப்பேன் என்ற சிறிதரனின் நிலைப்பாடு, அவரை வெளியேற்ற நினைப்பவர்களுக்கு சவாலானது.
அதேவேளை, சிறிதரன் வெளியே சென்றால், கட்சி உடைந்து போகும் என நினைக்கின்ற அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு, இது ஆறுதலை அளிக்கக் கூடும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்த காலகட்டத்தில் இவ்வாறான நெருக்கடிகள், பலருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது
அத்தகைய சந்தர்ப்பங்களில் நெருக்கடிக்கு உள்ளானவர்கள், அதனை எதிர்கொள்ள முடியாமல் வெளியே சென்றிருக்கிறார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடக்கம் கே.வி.தவராசா வரைக்கும் அதுதான் நடந்தது.
ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தொடங்கிய இந்த வெளியேற்றம், தனிநபர்கள் என்ற வகையில் சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன், சி.வி.விக்னேஸ்வரன், அருந்தவபாலன், சிவகரன் என நீண்டு கொண்டே சென்றது.
இப்போது தமிழரசு கட்சியில் இருந்து கே.வி.தவராசா, ஈ.சரவணபவன் உள்ளிட்ட பலர் வெளியே சென்றிருக்கிறார்கள். இவர்களில் பலர் வேறு அணியிலும் இணைந்திருக்கிறார்கள், தனியான அணியாகவும் ஒன்றிணைந்திருக்கிறார்.
மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்த போதும் சரி, தமிழரசு கட்சியிலும் சரி, பலர் வெளியேறுகின்ற அல்லது வெளியேற்றப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது…
ஒவ்வொருவராக வெளியே போன போது, அவர்களை வெளியேற்ற நினைத்தவர்கள் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். ஆனால் இந்தமுறை அப்படி நடக்கவில்லை. அப்படி நடக்கப் போவதும் இல்லை என்று சிறிதரன் அடித்துக் கூறியிருக்கிறார்.
அவர் கடைசி வரை கட்சிக்குள் இருந்து அதற்கு எதிராக போராடப் போகிறார். அது கடினமானது. ஆனால் சிறிதரன் அதற்குத் துணிந்து விட்டார்.
அதற்காக, சிறிதரன் என்ன வியூகத்தை வகுக்கிறார் அல்லது வகுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் தன்னை வெளியேற்ற நினைப்பவர்களுக்கு அவர் ஒரு பாடம் கற்பிக்க எத்தனிக்கிறார் என்று தெரிகிறது.
இந்த தேர்தலில் தமது கட்சி 15 ஆசனங்களை பெற வேண்டும் என சிறிதரன் கூறியிருக்கிறார். அது மிகையான ஒரு எதிர்பார்ப்பு.
தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிட்ட கடைசி தேர்தலில் கூட, தமிழரசு கட்சிக்கு (கூட்டமைப்பு) கிடைத்தது மொத்தம் பத்து ஆசனங்கள் தான்.
அப்படியிருக்க, கட்சி சின்னாபின்னமாகி, கட்சியின் தலைவர்களும் ஆதரவாளர்களும் சிதறிப் போய்விட்ட சூழலில்,15 ஆசனங்களைக் கைப்பற்றுவது என்பது, மிகையான கனவுதான்.
அவரது அந்த கனவு பலித்தால், கட்சிக்குள் அதிகம் நெருக்கடியை சந்திக்க போகின்றவரும் அவர் தான்.
(நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி. சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன், அகேசவன் சயந்தன், இமானுவேல் ஆர்னோல்ட், தி.பிரகாஷ், ச. இளங்கோ, ச. சுரேக்கா, சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.)
ஏனென்றால், இந்த தேர்தலில் வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி போட்டியில் நிறுத்தப்பட்டிருக்கிறவர்கள் பெரும்பாலும், சிறிதரனுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள். அவர்கள் வெற்றிபெறுகின்ற போது சிறிதரன் கட்சிக்குள் மேலும் தனிமைப்படுத்தப்படுவார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட, தமிழரசு கட்சி ஒற்றை ஆசனத்தை கைப்பற்றுவது தான் சிறிதரனுக்குப் பாதுகாப்பானது. அதிலும் கூட அவருக்கு சிக்கல் இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
இரண்டு ஆசனங்கள் கிடைக்குமானால், தமிழரசு கட்சிக்குள் சிறிதரனுக்கான நெருக்கடி இன்னமும் அதிகரிக்கும். இது வெளிப்படையான விடயம்.
அவ்வாறான நிலையில், 15 ஆசனங்களை பெற மீண்டும் என சிறிதரன் எதிர்பார்ப்பதை, கட்சி மீதுள்ள விசுவாசமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது அவர் தனக்குத்தானே தோண்டுகின்ற புதைகுழியாகும்.
இது சிறிதரனுக்கு தெரியாத ஒன்று அல்ல. எனவே, இந்த தேர்தலில் தமிழரசு கட்சி 15 ஆசனங்களை பெற வேண்டும் எனக் கூறியிருந்தாலும் அதற்காக அவர் பணியாற்றுவாரா என்பது சந்தேகம்.
தமிழரசு கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு அது கைக்கு வராமலே போய்விட்ட நிலையில், சிறிதரன் தனது அடுத்த நகர்வுகளை மிக அவதானமாக கையாண்டிருக்க வேண்டும்.
அந்த விடயத்தில் அவர் தவறிழைத்து விட்டார். அவர் மிக விழிப்புடன் செயற்படாது போனால் அவரால் அரசியலில் நிலைத்திருக்க முடியாது. அவ்வாறு நிலைத்திருப்பதற்கான தகைமையும் அவருக்கு கிடையாது. அரசியல் என்பது புத்திசாலித்தனமும் சாணக்கியமும் இணைந்த ஒன்று.
அதனை சரிவர கையாள முடியாதவர்களால், சரியாக அரசியல் செய்யவும் முடியாது. வெற்றி பெறவும் முடியாது.
இந்த இடத்தில் சிறிதரன் தனது அரசியலை எப்படி முன்னெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்தே தேர்தலுக்குப் பின்னரான அவரது அரசியல் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.
– கபில்