– அறிமுகமான புதிய விதிமுறைக்கெதிராக பலர் கருத்து
நியூஸிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டனிடன் விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதியில் கட்டிப்பிடிப்பதற்கு மூன்று நிமிட வரம்பு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய விதிமுறை செப்டம்பர் 26ஆம் திகதி அறிமுகமானது.
அங்குள்ள அறிவிப்பு பலகையில் ‘கட்டி தழுவுவதற்கான நேரம் அதிகப்பட்சம் 3 நிமிடங்கள். நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்’ என அச்சிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் இத்தகைய முடிவால், சமூக ஊடகத்தில் பலவிதமான கருத்துகள் பதிவாயின.
இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற செயல் என கருத்து தெரிவித்து இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இது இவ்வாறிருக்க காலதாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் பயணிகளின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகத்தினர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வாறு பயணிகள் விரைவாகப் புறப்பட்டால், மேலும் அதிகமானோர் அத்தகைய அர்த்தமுள்ள அரவணைப்புகளைப் பெற முடியும் என்று டனிடன் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டானியல் டி போனோ கூறினார்.