“திரையுலக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை அறிவித்துள்ளார்.
அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று குறிப்பிட்டு பிரமாண்டமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை நடைபெறுகிறது.
விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார்,
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது. அவர்களுக்கு பின்னால் தலைமைச்செயலகம் இடம் பெற்றுள்ளது.
இதில் பெண்களுக்கு என்று முதல் முறையாக தனி அங்கீகாரத்தை இந்த மாநாடு அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது.
மேலும் மேடையின் வலதுபுறம் தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் விஜய் நிற்பது போன்ற கட்-அவுட்களும் மாநாட்டு திடலில் கம்பீரமாக காட்சி தருகின்றன.
மாநாட்டு திடலில் நுழைவாயில் இரு புறமும் விஜய் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நேற்று காலை நடப்பட்டது. இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கொடி பறக்க விடப்படுகிறது.
கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணி, 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைப்பது என்று அனைத்து வித பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
மாநாட்டு திடலில் காவல் துறை அளிக்கும் பாதுகாப்புடன் 150-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் படை, துபாயில் இருந்து 1000 பவுன்சர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பவுன்சர்களிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விஜய் வலியுறுத்தி உள்ளார்.
மாநாட்டு திடலை சுற்றி பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டு திடலில் தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கும் இன்று மாநாட்டு திடலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.திரை பிரபலங்கள் அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாநாட்டு திடலில் கேரவன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.
மாநாடு நடைபெறும் இடத்திற்கு போலீசார் ஜீப்கள், பஸ்கள் மூலம் வரத்தொடங்கி உள்ளனர்.”,