பாராளுமன்றத் தேர்தலில் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகளையும் மாவீரர்களையும் கையில் எடுத்திருக்கிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர், சி.வி.கே.சிவஞானம், மாவீரர்களின் கட்சியான தமிழரசுக் கட்சியை அழிந்து போக இடமளியாதீர்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
விடுதலைப் புலிகளைத் தவிர, மாவீரர்களுக்கு உரிமை கோரக் கூடியவர்கள் எவரும் கிடையாது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அதற்கான அருகதை இல்லை.
அவர்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்து போராடி மடிந்தார்களே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிக்காக போராடியவர்களோ, எந்தவொரு கட்சியில் இருந்து போராடியவர்களோ அல்ல.
அப்படியிருக்க, தமிழரசுக் கட்சி எப்படி மாவீரர்களுக்கு உரிமை கோர முடியும்? அதற்கான அருகதை தான் அந்த கட்சிக்கு இருக்கிறதா?
“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலே இணைந்தவர்களில் 90 வீதமானவர்கள் இலங்கைத் தமிழரசுக்க் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
போராட்டத்திலே தங்களை ஆகுதியாக்கியவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்காரர்கள்.
அந்தத் தமிழரசுக் கட்சி பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், அழிந்து விடும் எனச் சிலர் சொல்கிறார்கள். இவர்கள் மனச்சாட்சியுடன்தான் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.” என்று சி.வி.கே.சிவஞானம் கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியுடன் தொடர்புடையவர்களாக இருந்தனரே தவிர, புலிகள் அமைப்பில் இணைந்திருந்தவர்களில், 90 சதவீதமானவர்கள் தமிழரசுக் கட்சியில் இருந்தவர்கள் என்பது அப்பட்டமான பொய்.
தமிழ் அரசுக் கட்சி, 1972 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனித்து இயங்கவில்லை. அது தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஐக்கியமாகி விட்டது. ஆயுதப் போராட்டத்தில் உயிர்களை ஈகம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் அதற்கு பின்னர் பிறந்தவர்கள்.
அவர்கள் பிறந்து வளர்ந்த காலகட்டங்களில் தமிழ் அரசுக் கட்சியே இயங்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலம், எந்தவொரு கட்சியும் தமிழர் பகுதிகளில் செயற்பட்டதில்லை.
அப்படிப்பட்ட நிலையில், 90 சதவீதமானவர்கள் தமிழரசுக் கட்சியில் இருந்து, விடுதலைப் போராட்டத்திற்காக உயிர் துறந்ததாக சி.வி.கே.சிவஞானம் கூறியிருப்பது அப்பட்டமான பொய்.
பாராளுமன்றத் தேர்தலுடன், தமிழரசுக் கட்சி அழிந்து போய்விடும் என்று கூறுவதற்கு மனசாட்சி இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதேகேள்வியைத்தான் அவர்களைப் பார்த்து தமிழ் மக்கள் எழுப்பினார்கள்- எழுப்புகிறார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கியமாகிய பின்னர், அந்தக் கட்சி தூசி மண்டித் துருப்பிடித்துப் போய்க் கிடந்தது. அது தான் வரலாற்று உண்மை.
இப்படி ஒரு கட்சி இருக்கிறது என்று கூட, இளைய தலைமுறையினருக்கு தெரியாமல் இருந்தது. 2004 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்ட போது, தமிழரசுக் கட்சியை தூசி தட்டி அதன் வீட்டு சின்னத்தை வெளியே கொண்டு வந்து, தமிழ் மக்கள் முன் கொண்டு போய் அறிமுகப்படுத்தி, 22 ஆசனங்களைப் பெற வைத்தது விடுதலைப் புலிகள்.
அப்போது தமிழரசின் தலைவர்களாக இருந்த, இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்களுக்குக் கூட, உதயசூரியனுக்கு வாக்களித்துப் பழக்கப்பட்ட தமிழ் மக்கள், வீட்டு சின்னத்துக்கு வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது.
அந்த நிலையை மாற்றி, முழுமையான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது விடுதலைப் புலிகள். அந்த வெற்றியின் மூலமாகத் தான், அதனை மூலதனமாக கொண்டுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றிக் கொண்டது.
ஆனால் போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழரசுக் கட்சி அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தாங்கள் எப்படி மீள் உருவாக்கம் செய்யப்பட்டோம் என்பதை வெளிப்படுத்த தயங்கியே வந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்துக்குப் பின்னால் விடுதலை புலிகள் இருக்கவே இல்லை என்று கூட, இரா.சம்பந்தன் முன்னர் கூறியிருந்தார்.
ஆனால், இப்போது சி.வி.கே.சிவஞானம் தமிழ் அரசுக் கட்சியினர் தான்,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தார்கள் என்றும், மண்ணுக்காக மடிந்தார்கள் என்றும் கூறுகிறார்.
தமிழரசுக் கட்சி இப்போது, விடுதலை புலிகளையும், மாவீர்களையும் அரசியல் வியாபாரப் பண்டம் ஆக்கி விட்டது.
விடுதலைப்புலிகள் தமக்கென ஒரு அரசியல் கட்டமைப்பு இருந்த போதும், அதனை முன்னிறுத்தாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதற்கு காரணம் இருந்தது. எதிர்காலத்தில், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்கள் அதனைச் செய்தார்கள்.
அந்த எண்ணத்தையும், விருப்பத்தையும் அடியோடு புதைத்து அழித்து விட்டு நிற்கிறது தமிழரசுக் கட்சி. பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழரசுக் கட்சி அழிந்து விடும் என்று எப்படி மனம் வந்து கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பியிருப்பதில் நியாயம் இருக்கிறது.
ஆனால் இதே கேள்வியை – கூட்டமைப்பை சிதைப்பது நியாயமா என, அவர்களை நோக்கி முன்னர் எழுப்பிய போது, அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது தமிழ் அரசுக் கட்சி.
விடுதலை புலிகளால் பெருங்கனவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்தது தமிழ் அரசுக் கட்சி. அப்போது விடுதலை புலிகளின் விருப்பமும் கனவும் மாவீரர்களின் எண்ணமும் அவர்களின் நினைவுக்கு வரவில்லை.
உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவெடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடைசி சாவுமணியை அடித்தது தமிழரசுக் கட்சி தான்.
அப்போது கூட அந்தக் கட்சியில் உள்ள யாரும் மாவீரர்களையும் விடுதலைப் புலிகளையும் மனதில் நிறுத்தி முடிவுகளை எடுங்கள் என்று கேட்கவில்லை.
தனித்து போட்டியிடுவோம் என்று ஆளுக்கு வீரவசனம் பேசிக் கொண்டிருந்தனர். இப்போது மக்களால் உதறித் தள்ளப்படும் நிலை வந்தவுடன் தான், அவர்களுக்கு மாவீரர்களும் விடுதலைப் புலிகளும் நினைவில் வருகிறார்கள்.
தமிழரசுக் கட்சியின் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட, வரலாற்றுப் புரளியை முன்வைத்திருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கத்திற்கு விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 டிசம்பர் மாதம் ஒஸ்லோ உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதாக அதில் கூறப்பட்டிருக்கிறது. ஒஸ்லோ பேச்சுக்களின் முடிவில், எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளப்படவில்லை.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம் சமஷ்டி கட்டமைப்பின் அடிப்படையில் அமைந்த தீர்வு குறித்து ஆராயவே முடிவு செய்யப்பட்டது.
அது ஒரு உடன்பாடோ அல்லது பிரகடனமோ அல்ல என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், போரும் சமாதானமும் என்ற தனது நூலில் தெளிவாக எழுதியிருக்கிறார். ஆனாலும் அண்மைக்காலமாக, இலங்கை தமிழரசுக் கட்சி ஒஸ்லோ கோட்பாடு, ஒஸ்லோ பிரகடனம், ஒஸ்லோ உடன்பாடு என மாயை காட்டி மக்களை மயக்க பார்க்கிறது.
அதேவேளை, தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் நிலங்களையும் காத்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளை மௌனிக்கச் செய்தது போல, தற்போது தமிழ் மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் தமிழரசுக் கட்சியையும், வீட்டுச் சின்னத்தையும் மௌனிக்கச் செய்யும் நோக்குடன், இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக புதுக்குடியிருப்பில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் வேட்பாளர் துரைராசா ரவிகரன் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை அரசாங்கம் வீட்டு சின்னத்தையும், தமிழரசுக் கட்சியையும் மௌனிக்க செய்வதற்கு முனைகிறதோ இல்லையோ, அந்தக் கட்சியில் இன்று கோலோச்சுபவர்களே அதனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
தன் முதுகு தனக்கு தெரியாது என்பார்கள். அந்த நிலையில் தான் தமிழரசுக் கட்சி இருக்கிறது. ஒரு பக்கம் விடுதலைப் புலிகளை வைத்து தேர்தலில் பிழைப்பு நடத்த முற்படுகிறது.
இன்னொரு பக்கம் அவர்களின் கனவில் உருவான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சின்னாபின்னப்படுத்தி விட்டு நிற்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாமல் செய்யும் சூழ்ச்சியின் தொடர்ச்சி தான், தமிழரசுக் கட்சியின் இப்போதைய நிலைக்கு காரணம்.இதனைக் கூட புரிந்து கொள்ளாமல் அந்தக் கட்சியின் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது.
– கபில்-