அடுத்த அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் யுக்ரேனில் “ஒரே நாளில்” போர் நிறுத்தப்படும் உறுதியளித்துள்ளார். அவர் அதை எப்படி செய்யப் போகிறார் என்று விவரிக்கவில்லை.

அவரது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அவர் அதை எப்படி செய்யப் போகிறார் என்பது குறித்துப் பல விதமான கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ரஷ்யா-யுக்ரேன் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகப் பல நிபுணர்கள் நம்புகின்றனர்.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன், இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பார் என்று யுக்ரேன் எதிர்ப்பார்க்கிறது. யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி “ராஜ்ஜீய வழிமுறைகள்” மூலம் அடுத்த ஆண்டுக்குள் போரை நிறுத்துவதற்கான தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்படியொரு பேச்சுவார்த்தை இந்த நேரத்தில் நடைபெற்றால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

போர் நிலவரமும் கருத்து கணிப்புகளும்

போரில் ரஷ்யா முன்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்க, போர்க்களம் அதற்குச் சாதகமாக அமைந்து வருகிறது.

கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றன. அதேநேரம் வட கிழக்கில் கார்கிவ் பகுதியில் உள்ள குப்யான்ஸ்க் நகரை நோக்கி முன்னேறுகின்றனர், தென் கிழக்கில் உள்ள பெரிய நகரமான ஸபோரிஷியா நகரை நோக்கியும் ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றன.

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், யுக்ரேன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூடுதலாக 500 சதுர கி.மீ இடத்தைக் கைப்பற்றியுள்ளது ரஷ்யா. 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இதுவும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

யுக்ரேனின் எல்லைக்கு உட்பட்டவை என்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற பகுதிகளில் 27% ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ளன என்று அதிபர் ஸெலன்ஸ்கி கூறுகிறார்.

ரஷ்யா 2014இல், கைப்பற்றிய க்ரைமியா மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதிகள் சிலவற்றையும் சேர்த்து அவர் குறிப்பிடுகிறார்.

தனது நாட்டின் கர்ஸ்க் பகுதியில், பெரிய அளவிலான பதில் தாக்குதலை ரஷ்யா திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இதில் வட கொரிய வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பகுதியை யுக்ரேன் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய திடீர் எல்லை-தாண்டிய தாக்குதலில் கைப்பற்றியது. பேச்சுவார்த்தைகளின்போது தனது தரப்பின் சார்பில் பேச உதவலாம் என்பதற்காக, யுக்ரேன் இப்போதும் இந்தப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ரஷ்யா-யுக்ரேன்: அமைதி பேச்சுவார்த்தை

ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்திய பகுதிகளில் யுக்ரேனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

ரஷ்யாவும் தனது அதிகாரத்தைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த நினைக்கிறது. டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதத்தில் பதவியேற்றவுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதால், அதற்குள்ளாக மேலும் பல யுக்ரேனிய பகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்று ரஷ்யா நினைப்பதாக பிபிசியிடம் பேசிய யுக்ரேன் விவகாரங்கள் குறித்த நிபுணர்கள் மற்றும் ராணுவ பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளின் எல்லை வரையிலும் அல்லது ஸபோரிஷியா போன்ற ஒரு மண்டல தலைநகரைக்கூட கைப்பற்ற ரஷ்ய அதிபர் புதின் விரும்புவதாகப் பரவலாக நம்பப்படுகிறது.

நீண்ட தூர ஏவுகணைகள் போரின் போக்கை மாற்றுமா ?

பதவியில் இருந்து வெளியேறும் அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான நிர்வாகம், நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்ய பகுதிக்குள் பயன்படுத்த யுக்ரேனுக்கு அனுமதி வழங்கியது.

அமெரிக்காவின் இம்முடிவு போர்ச் சூழலில் ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டு வந்தது.

போரின்போது முன்னதாக யுக்ரேனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் வழங்கப்பட்டன. க்ரைமியா மற்றும் யுக்ரேனின் கிழக்குப் பகுதிகளில் தாக்குவதற்கு, யுக்ரேன் அவற்றைப் பயன்படுத்தி வருகிறது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யுக்ரேனிய பிரதேங்களான க்ரைமியாவும், யுக்ரேனின் கிழக்குப் பகுதியும் தற்போது ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ளன.

இந்த வார தொடக்கத்தில், ரஷ்ய எல்லைக்குள் அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குவதற்கு, அதிபர் பைடன் அனுமதி வழங்கினார்.

அமெரிக்காவின் இந்த முடிவை, “எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல்” என ரஷ்யா விவரித்தது.

யுக்ரேனுக்கு கண்ணி வெடிகுண்டுகள் வழங்குவதற்கான முடிவையும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து விலகி யுக்ரேனிய எல்லைக்குள் மட்டுமே அவற்றை பயன்படுத்த வேண்டும் எனவும் அமெரிக்க கூறியுள்ளது.


 தங்களைப் பாதுகாப்பை வைத்திருக்க, யுக்ரேனியத் துருப்புக்களுக்கு கண்ணி வெடிகள் உதவும்.

இந்த போர்ச்சூழல் முழுவதிலும் ரஷ்யா தனது சொந்த கண்ணி வெடி குண்டுகளைப் பயன்படுத்தி வருகிறது. யுக்ரேன் அமெரிக்காவிடமிருந்து பெறும் கண்ணிவெடிகள், சில வாரங்கள் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் ரஷ்யாவின் கண்ணிவெடிகள் , அவற்றை செயலிழக்கச் செய்யும் வரை இயங்கும் தன்மை கொண்டவை.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 300 யுக்ரேன் பொதுமக்கள் கண்ணி வெடி விபத்துக்களில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல சர்வதேச அமைப்புகள், கண்ணிவெடிகளுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றன, அவை “இறப்பு, காயம் மற்றும் துன்பத்தின் நீண்டகால அடையாளத்தை விட்டுச்செல்கின்றன” என்று கூறுகின்றன.

இதுவரை யுக்ரேனுக்கு கண்ணி வெடிகுண்டுகள் வழங்க அமெரிக்கா தயக்கம் காட்டியது, ஆனால் பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் கண்ணி வெடிகளை வழங்கி வந்தது.

நீண்ட தூர ஏவுகணைகளைப் போலவே, தாக்குதல் நடத்துவதை விட தங்களைப் பாதுகாப்பை வைத்திருக்க,யுக்ரேனியத் துருப்புக்களுக்கு இந்த ஆயுதங்கள் உதவும்.

மாறி வரும் எண்ணம்

போர்களத்தில் யுக்ரேனுக்கு சாதகமான சூழல் இல்லாத நிலையில், மக்கள் மத்தியிலான பொதுக்கருத்தும் மாறி வருகிறது.

2022-ஆம் ஆண்டு முதல் தொடர் குண்டுவெடிப்புகள், மின்வெட்டு, தூக்கமில்லா இரவுகளை எதிர்கொண்டு வரும் யுக்ரேன் மக்கள் ஒட்டுமொத்தமாக போரால் அயற்சி அடைந்துள்ளனர். எதிர்வரும் குளிர்காலத்தை நினைத்து அவர்கள் கவலையில் உள்ளனர்.

ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தை குறித்த எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. சில பகுதிகளை இழக்க நேரிட்டாலும், நீண்ட காலத்துக்கு நிலையற்றத்தன்மை நீடிக்கும் என்றாலும் கூட, மக்கள் பேச்சுவார்த்தைகளை விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரசும்கோவ் மையம் எனும் சிந்தனைக்குழு சார்பில் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட கருத்து கணிப்புகள், மூன்றில் ஒரு யுக்ரேனியர் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கிறது. ஓராண்டுக்கு முன்பு ஐந்தில் ஒருவர் மட்டுமே பேச்சுவார்த்தை வேண்டும் என்று விரும்பினர்.

அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட மற்றொரு கருத்து கணிப்பின் படி, தங்கள் நாடு இந்த போரில் வெல்லும் என்று முன்பு கொண்டிருந்த உறுதியை யுக்ரேனியர்கள் தற்போது கொண்டிருக்கவில்லை. எனினும் பெரும்பாலானவர்கள் யுக்ரேன் ரஷ்யாவை வீழ்த்தும் என்று நம்புகின்றனர்.

‘டிரம்ப் திட்டம்’ அரங்கேற காத்திருப்பு

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ரஷ்யா-யுக்ரேன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கான அவரது திட்டங்கள் குறித்து தெரிந்துக் கொள்ள பலரும் காத்திருக்கின்றனர்.

தேர்தலுக்கு பிறகு அவர் ரஷ்யா-யுக்ரேன் குறித்து பேசிய போது குறிப்பாக எதையும் கூறவில்லை. “ரஷ்யா மற்றும் யுக்ரேனுடன் நாம் கடுமையாக உழைப்போம். இது நிறுத்தப்பட வேண்டும். ரஷ்யாவும் யுக்ரேனும் நிறுத்த வேண்டும்” என்று பேசியிருந்தார்.

அதன் பிறகு ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. போரை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று டிரம்ப் எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் ரஷ்யா இதை மறுத்துவிட்டது.

டிரம்பின் திட்டம் முழுமையாக தயாராகவில்லை என்றாலும் அவரது குழுவினர் அதற்கான யோசனைகளை ஏற்கெனவே உருவாக்கிக் கொண்டிருப்பார்கள் என்று யுக்ரேனிய விவகாரங்கள் குறித்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த யோசனைகளில் பல, எவ்வாறாயினும், மோதலை நிறுத்தவே பரிந்துரைக்கும் என்று “நியு யுரோப்” என்ற யுக்ரேனிய வெளியுறவுக் கொள்கை குறித்த சிந்தனைக்குழுவின் இயக்குநர் அல்யோனா ஹெட்மன்சுக் நம்புகிறார்.

“போரின் முன்களத்தில் மோதலை நிறுத்துவது. நேட்டோவில் உறுப்பினராவது குறித்து கோருவதை நிறுத்துவது. குறைந்தபட்சம் நிதியுதவியை நிறுத்துவது. எல்லாவற்றையும் நிறுத்துவது” இதுதான் திட்டமாக இருக்கும் என்று விளக்குகிறார் அவர்.

பைடன் நிர்வாகத்தின் அணுகுமுறையிலிருந்து இதனை மிக மாறுபட்ட அணுகுமுறையாக கருதவில்லை அவர்.

இதில் வித்தியாசம் என்னவென்றால் ஜனநாயகக் கட்சியினர், பேச்சுவார்த்தைகளை யுக்ரேன் தொடங்கி வைக்க வேண்டும், அமெரிக்கா அல்ல என்று நினைத்தனர். அவர்கள் யுக்ரேனுக்கு நீண்ட கால நிதியுதவிக்கான உறுதியை அளித்திருந்தனர்.

செப்டம்பர் மாதம் ஜெலன்ஸ்கி, டிரம்பை அமெரிக்காவில் சந்தித்து பேசினார்

ஜனநாயகக் கட்சியினர் போல் அல்லாமல், பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க யுக்ரேனுக்கு சிறப்பு தூதுவரை நியமிக்கும் தனது எண்ணத்தை டிரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். இதனை யுக்ரேன் நேர்மறையான நடவடிக்கையாக பார்க்கிறது. டிரம்ப் இதற்கு முன்பு அதிபராக இருந்த காலத்தில், மூத்த தூதரக அதிகாரியான கர்ட் வோல்கர் என்பவர், இது போன்ற ஒரு பிரதிநிதியாக இருந்தார்.

‘டிரம்பின் காதுகளுக்கு நெருக்கமான, செல்வாக்குமிக்க ‘மிஸ்டர் யுக்ரேன்’ தான் இப்போது தேவை” என்கிறார் ஹெட்மன்சுக்.

புதிதாக அமையவுள்ள அமெரிக்க நிர்வாகத்துடன் விரிவாக ஆலோசனை நடத்த யுக்ரேனிய அதிகாரிகள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

அதே நேரம் அது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் அவர்கள் உணர்கின்றனர். அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக் காட்டுவது போல, ரஷ்யாவுக்கு இது எளிமையானதாக இருக்க வாய்ப்பில்லை.

 

நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் குறித்து புதிய அமெரிக்க நிர்வாகத்தின் முதல் கட்ட நடவடிக்கைகளை ரஷ்யாவும் யுக்ரேனும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒன்று மட்டும் நிச்சயம் – அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றால் அவை சிக்கலானதாகவும், நீண்ட பேச்சுவார்த்தைகளாகவும் இருக்கப் போகின்றன.

இரு நாடுகளுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியமானதாகும். அவர்களின் எதிர்காலம், இந்த பேச்சுவார்த்தைகள் எப்படி முடியப்போகின்றன என்பதை பொருத்து அமையும்.

தொகுப்பு – ஏஞ்சலினா கோர்பா

-BBC TAMIL NEWS-

 

Share.
Leave A Reply