சிரியா அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலை கிளர்ச்சிக்குழுக்கள் கடந்த புதன்கிழமை தொடங்கின.
ஞாயிற்றுக்கிழமை, சிரியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவில் அதிகளவிலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு தெற்கில் உள்ள ஹமாவை நோக்கி கிளர்ச்சிக்குழுக்கள் முன்னேறின.
சிரியாவில் நடக்கும் மோதலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும், இஸ்லாமிய ஆயுதக் குழுவான ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham- HTS)’ தலைமையில் இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.
2016 க்குப் பிறகு முதல் முறையாக அலெப்போவின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த இத்தாக்குதல் ரஷ்யாவைத் தூண்டியது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்றால் யார் ?
எச்டிஎஸ் அலெப்போவிற்குச் சென்றது
2011 இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக ‘ஜபத் அல்-நுஸ்ரா’ (Jabhat al-Nusra) என்ற வேறு பெயரில் ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ அமைக்கப்பட்டது.
இஸ்லாமிய அரசு (IS) என தன்னை தானே அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ராவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார்.
சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களில், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கொடிய குழுவாக இது கருதப்பட்டது.
ஆனால் அதன் புரட்சிகரக் கொள்கையை விட, ‘ஜிஹாதி சித்தாந்தம்’ அக்குழுவின் உந்து சக்தியாக கருதப்படுகிறது.
மேலும் அந்த நேரத்தில், “சுதந்திர சிரியா” எனும் பெயரில் இயங்கும் முக்கிய கிளர்ச்சிக் கூட்டணியுடன் இந்தக்குழு முரண்படுவதாகவும் அறியப்பட்டது.
2016-ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பைப் பகிரங்கமாகப் பிரிந்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார்.
ஒரு வருடம் கழித்து, இதே போன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ என்ற பெயரை இக்குழுப் பெற்றது.
சிரியா யார் கட்டுப்பாட்டில் உள்ளது?
கடந்த நான்கு ஆண்டுகளாக சிரியாவில் போர் முடிந்துவிட்டதாக கருதப்பட்டது.
நாட்டின் முக்கிய நகரங்களில், பிற ஆட்சியாளர்களின் போட்டியின்றி, சிரியா ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில், சிரியாவின் வேறு சில பகுதிகள் அவரது நேரடி கட்டுப்பாட்டில் இல்லை.
கிழக்கில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் இதில் அடங்கும்.
அவை மோதலின் தொடக்க காலம் முதல், சிரியா அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன.
2011 இல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக தெற்கில் புரட்சி தொடங்கியது. அதைத் தொடந்து, அங்கு அமைதியின்மை நிலவத் தொடங்கியது.
பரந்த சிரியா பாலைவனத்தில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். குறிப்பாக அதிக லாபம் ட்ரப்ல் எனும் காளான் வகையை சேகரிக்க மக்கள் அப்பகுதிக்குச் செல்லும் போது, அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்.
சிரியாவின் வடமேற்கில் உள்ள ‘இட்லிப் மாகாணம்’ ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இட்லிப்பில் உள்ள ஆதிக்க சக்தியான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு அலெப்போ மீது திடீர் தாக்குதலை நடத்தியது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு சிரியா மோதலை மீண்டும் தூண்டும் என்பதற்கான சிறிய அறிகுறிகள் கூட தென்படவில்லை.
பல ஆண்டுகளாக, சிரியா அரசாங்கப் படைகள் தனது கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றதால், இட்லிப் பகுதி போர்க்களமாகவே இருந்தது.
ஆனால் நீண்டகாலமாக அசாத்தின் முக்கியக் கூட்டாளியாக இருந்த ரஷ்யா மற்றும் கிளர்ச்சியாளர்களை ஆதரித்த துருக்கியால் 2020 இல் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது .
சுமார் நான்கு மில்லியன் மக்கள் அங்கு வாழ்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலோர், போரில் அசாத்தின் படைகள் வென்ற நகரங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள்.
அலெப்போ கடும் பாதிப்பை சந்தித்த போர்க்களங்களில் ஒன்று .மேலும் போராட்டக்காரர்கள் பெரிய அளவில் தோல்வியடைந்த இடங்களிலும் ஒன்றாகும்.
வெற்றி அடைய, ரஷ்ய விமானப்படை மற்றும் இரானின் ராணுவ உதவியை அசாத் நம்பினார்.முக்கியமாக இரானால் ஆதரிக்கப்படும் ஆயுதக்குழுவின் உதவி மூலம் அசாத் வெற்றியை எதிர்நோக்கி இருந்தார். இதில் ஹெஸ்பொலாவும் அடங்கும்.
லெபனானில் ஹெஸ்பொலா மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல் மற்றும் சிரியாவில் இரானிய ராணுவத் தலைவர்கள் மீது நடந்த தாக்குதலின் விளைவாக, இட்லிப்பில் உள்ள ஜிஹாதிகள் மற்றும் புரட்சிக் குழுக்கள், இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி அலெப்போ மீது திடீர் தாக்குதல் நடத்த ஊக்குவித்திருக்கலாம்.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) இட்லிப்பைக் கட்டுப்படுத்தி, நடைமுறையில் அங்குள்ள உள்ளூர் அரசாங்கமாகச் செயல்பட்டு வருகிறது.
எவ்வாறாயினும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் அதன் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் பெயருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இதனால் அக்குழுவிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைப்பதும் கடினமாகியுள்ளது.
இக்குழு மற்ற குழுக்களுடன் சில கசப்பான உட்பூசல்களிலும் ஈடுபட்டுள்ளது.
மேலும் இட்லிப்பைத் தாண்டிய அதன் குறிக்கோள் என்னவென்றும் தெளிவாகத் தெரியவில்லை.
அல்-கொய்தாவிலிருந்து பிரிந்த பிறகு, சிரியாவில் கடுமையான இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கவனம் செலுத்தியது.
முன்னதாக, சிரியாவில் மோதலை பெரிய அளவில் மீண்டும் தொடங்கவோ, அல்லது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிபர் அசாத்தின் கட்டுப்பாட்டை நேரடியாகவோ எதிர்க்க , ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு முயற்சிக்கவில்லை.
ஆனால், சமீபத்திய தாக்குதல் அவர்களின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள சிறு மாற்றத்தைக் குறிக்கிறது.