தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக “மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவை எல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை.”

“நான் அமெரிக்காவின் அதிபராக பெருமையுடன் பதவியேற்கும் நாளான 2025 ஜனவரி 25, க்கு முன்பாக காசாவில் இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மத்திய கிழக்கும், மனிதகுலத்துக்கு எதிராக இத்தகையை அட்டூழியங்களை செய்து கொண்டிருப்பவர்களும் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

இதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்க வரலாற்றிலேயே யாரும் செய்யாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். உடனடியாக பிணைக் கைதிகளை விடுவியுங்கள்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், அவர்கள் தங்கியிருக்கும் காசாவில் தீவிர தாக்குதலை நடத்திவருகிறது.

இதில், இதுவரை 43,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்று தெரியப்படுத்தப்படவில்லை.

Share.
Leave A Reply