தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்பதைத் தான் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகாவிடம் வலியுறுத்தியுள்ளதாக லங்கா சமாஜமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்தபோது அவ் அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த பேராசிரியர் திஸ்ஸவிதாரண தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றிற்கான நிபுணர் குழு நியமிக்கப்பெற்று அக்குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளித்த அறிக்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமல்-வலியுறுத்த முடியாமல் இருந்தவர்தான் பேராசிரியர் திஸ்ஸவிதாரண.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ‘நல்லாட்சி’க் காலத்தில் (2015/2019) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க-இரா சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சிக் கூட்டின் மூலம் தயாரான புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையுடன் எல்லாமே நின்று போனது.
அதனைத் தொடரப்போவதாகத்தான் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்ளடக்கி மக்கள் ஆணையையும் பெற்றிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்றப் பெரும்பான்மையையும் மூன்றில் இரண்டுக்கும் அதிகமாக அவர் பெற்றிருக்கிறார்.
தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கைத் தயாரிப்பில் தீவிரமாகச் செயற்பட்டவருமான எம் ஏ சுமந்திரன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் கொடுத்த ஆணையை விரைவில் நிறைவேற்ற வேண்டும்-அதாவது புதிய அரசியலமைப்பை (சமஷ்டியை உள்ளடக்கிய) விரைவில் கொண்டு வரவேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இத்தகைய அறிவிப்புகள்-உறுதிமொழிகள்-கோரிக்கைகள் எல்லாமே கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றன.
ஆனால், இவையெல்லாம் இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் புண்ணுக்குப் புனுகு தடவுகின்ற வேலைகள்தான்.
புதிய அரசியலமைப்பு வரலாம். ஆனால் புதிய அரசியலமைப்பின் மூலம் தற்போதுள்ள 13 ஆவது திருத்தத்திற்குமேல் கடுகளவு கூடிய அதிகாரப் பகிர்வைத்தானும் வழங்கப்போவதில்லை.
அதாவது அது எவ்வகையிலும் 13+ஆக (13 பிளஸ்) இருக்கப் போவதில்லை. ஒரு வாதத்திற்கு அப்படி புதிய அரசியலமைப்பு நகலில் 13+ உள்ளடக்கப்படலாம் என வைத்துக் கொண்டாலும் அது முழு இலங்கையிலும் சர்வ ஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அது தமிழர்களைப் பொறுத்தவரை எதிர்மறை விளைவையே தரும்.
புதிய அரசியலமைப்பின் மூலம் தற்போதுள்ள 13 ஆவது திருத்தம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுமானால் அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை தமிழர்கள் வெறுங்கையுடன்தான் நிற்கவேண்டிய நிலையேற்படும்.
புதிய அரசியலமைப்பைத் தமிழர்கள் நம்பியிருப்பது இறுதியில் இலவு காத்த கிளியின் கதையாகவே முடியும்.
புதிய அரசியலமைப்பு தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு ‘மாயமான்’. அதன் பின்னால் போவது ஆபத்தைத்தான் கொண்டுவரும்.
தமிழ் மக்களுக்குத் தற்போது இருக்கக்கூடிய ஒரே ஒரு ‘கவசம்’ 13 ஆவது அரசியல் திருத்தமும் அதன் விளைவான மாகாண சபைகள் சட்டமுமே.
அதனை முறையாகவும் முழுமையாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் அமுல் செய்வதற்கான அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்கும்படி தாம் வாக்களித்துத் தெரிவு செய்த அரசியற் பிரதிநிதிகள் மீது அழுத்தம் கொடுப்பதற்கான களவேலைகளைத் தமிழர்கள் மத்தியிலேயுள்ள ஏனைய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் தாமதியாது தொடங்க வேண்டும்.
13 ஆவது திருத்தத்தின் முழுமையான முறையான அமுலாக்கல் முழுக்கமுழுக்கத் தமிழர்களுடைய தேவையாகும். அதில் தமிழர்களுக்கு அக்கறை ஏற்படாதவரை இலங்கை அரசாங்கமோ-இந்திய அரசாங்கமோ அது எந்தக் கட்சி அரசாங்கமாகவிருந்தாலும் அக்கறைப்படப்போவதில்லை.
— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —