இஸ்ரேலிய ஹமாஸ் மோதலின் முதல் 9 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களை விட மிகவும் அதிகம் என லான்செட் மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் & ட்ராபிகல் மெடிசின், யேல் பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள கல்வியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம்மூலம் இது தெரியவந்துள்ளது.

2023 முதல் 2024 ஜூன் இறுதிவரை இஸ்ரேலின் தாக்குதல்களில் ஏற்பட்ட புள்ளிவிபரங்கள் குறித்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் 64260 பேர் கடும் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 59.1 வீதமானவர்கள் பெண்கள் சிறுவர்கள் 65வயதிற்கு மேற்பட்டவர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் பாலஸ்தீன போராளிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

கடந்த வருடம் ஜூன்மாதம் வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37877 என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

காசாவிற்குள் பத்திரிகையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காததால் உயிரிழப்பு குறித்த புள்ளிவிபரங்களை உறுதி செய்வது கடினமாக உள்ளது.

பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் உயிரிழப்புகள் குறித்த மின்னணு பதிவுகளை பேணும் திறன் இஸ்ரேலின் இராணுவநடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டது என லான்செட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இஸ்ரேல் மருத்துவமனைகள் மருத்துவசதிகள் மீது தாக்குல்களை மேற்கொண்டதையும் டிஜிட்டல் தொடர்பாடல்களை குழப்பியதையும் சுட்டிக்காட்டியது.

பாலஸ்தீன சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களையும்,உறவினர்களின் உயிரிழப்புகள் குறித்து அறிவிப்பதற்காக பாலஸ்தீன அமைச்சு முன்னெடுத்த இணையவழி ஆய்வின் முடிவுகளையும்,சமூக ஊடக மரண அறிவித்தல்களையும் அடிப்படையாக வைத்து தமது முடிவை அறிவித்துள்ள ஆய்வாளர்கள் 2023 ஓக்டோபர் முதல் ஜூன் 2024 வரை 55289 முதல் 78535 பேர் கடும் தாக்குதலால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சரியாக மதிப்பிட்டால் 64260 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் காசாவின் சுகாதார அமைச்சு 41வீத உயிரிழப்புகள் குறித்து மாத்திரமே அறிவித்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply