இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3 இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியதுடன் 33 இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் கடந்த இரு தினங்களாக மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளை கட்டுப்படுத்த கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் தொடர்ந்து இலங்கை கடற்பரப்பில் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் விரிவாக்கமாக, வடமத்திய கடற்படைக் கட்டளை தலைமையகமானது நேற்று சனிக்கிழமை (25) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலையில் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களின்போது இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடி படகுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இதன்போதே 3 இந்திய மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றிலிருந்த 33 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட படகுகளுடன் குறித்த இந்திய மீனவர்கள் இரணைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி கடற்றொழில் உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply