இலங்கை மாறி மாறி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒளித்துப் பிடித்து விளையாடும், ஆட்டத்தையே ஆடிக் கொண்டிருக்கிறது.
ஆட்சி மாற்றங்களினால் கூட, இந்த ஆட்டத்தை நிறுத்த முடியவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தொடங்கிய இந்த ஆட்டம், இன்றைய அரசாங்கம் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கடுமையாக விமர்சித்து வந்த தேசிய மக்கள் சக்தி, இப்பொழுது அதே ஆட்டத்துக்குள் சிக்கிப் போயிருக்கிறது.
அண்மையில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதற்கு முன்னதாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த இரண்டு பயணங்களின் போதும் இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருந்தன.
இந்தக் கூட்டறிக்கைகள் இரண்டும், வெளியிடப்பட்டதன் அடிப்படை நோக்கம், புதுடெல்லியிலும் பெய்ஜிங்கிலும் பேசப்பட்ட விடயங்களை- இணக்கம் காணப்பட்ட விடயங்களை முழுமையாக, வெளியே கூறாமல் தவிர்த்துக் கொள்வதுதான்.
மிகக் கவனமாக வார்த்தைகளை கையாண்டு தயாரிக்கப்பட்ட இந்த கூட்டறிக்கைகள் மூலமாக அநுரகுமார திசாநாயக்க வின் அரசாங்கம், தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என கருதி இருந்தது.
ஆனால், அதற்கு மாறாக, இந்த கூட்டறிக்கையின் ஒளிவு மறைவுகளும், அவற்றில் இடம்பெற்றுள்ள விடயங்களும் அரசாங்கத்துக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஜனாதிபதி அநுரகுமார மேற்கொண்ட பயணங்களின் மூலம் , இரண்டு நாடுகளுக்கும் இடையே, இலங்கைத் தீவு மிகமோசமான சூழலில் சிக்கி இருக்கிறது என்பதை, தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
இந்த சிக்கல் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் இருந்து வருகிறது.அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் ஒவ்வொரு உத்தியை கையாளுகின்றன.
சில அரசாங்கங்கள் சீனாவை பகைக்காமல், இந்தியாவை அரவணைத்துக் கொண்டன. சில அரசாங்கங்கள் இந்தியாவை பகைக்காமல் சீனாவை அரவணைக்க முயன்றன.
எவ்வாறாயினும் எந்த ஒரு அரசாங்கத்தினாலும் இந்த இரண்டு நாடுகளின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை, தனி ஒரு நாட்டை சார்ந்து இருக்கவும் முடியவில்லை.
ஏனென்றால், இரண்டு நாடுகளும் இலங்கை தீவுக்கு மிக மிக முக்கியமானவை. இந்த இரண்டு நாடுகளையும் உதறித் தள்ளி விட்டோ ஒதுக்கி வைத்து விட்டோ, இலங்கைத் தீவினால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.
பூகோள அரசியல் போட்டியில் இரண்டு நாடுகளும் தவிர்க்க முடியாத எதிர் எதிர்முனைகளில் இருப்பவையாக இருப்பதால், இவற்றுக்கு இடையில் சமரசம் செய்து கொள்வதோ, உறவுகளைச் சமநிலைப்படுத்திக் கொள்வதோ இயலாத காரியமாக இன்று வரை நீடிக்கிறது.
இலங்கையை பொறுத்தவரையில் அணிசேரா கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறிக் கொண்டாலும், அந்த நிலையில் இருந்து வெளியேறி அல்லது விலகி நீண்டகாலம் ஆகிவிட்டது.
விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர், அவர்கள் அழிக்கப்பட்ட பின்னர், அணிசேரா கொள்கையை முழுமையாகப் பின்பற்றக் கூடிய நாடு என்ற தகைமையை இலங்கை இழந்து விட்டது.
விடுதலைப் புலிகளுக்கு பின்னரான பூகோள அரசியல் என்பது, இலங்கைக்கு சவாலான பல சூழ்நிலைகளை உருவாக்கி இருக்கிறது. நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள் . பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது அல்லது நாட்டை பிளவுபடுத்தும் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது, அரசாங்கத்தின் மொழியில், பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலமாக, இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற சர்வதேச சக்திகள், இலங்கையை தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டும் இடமாக மாற்றி விட்டன.
விடுதலைப் புலிகள் இருந்த வரைக்கும், இத்தகைய போட்டி ஒன்று, வெளிப்படையாக இருந்ததில்லை.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் அத்தகைய போட்டி உருவாகியிருந்தாலும், இலங்கைக்குள் அது வந்திருக்கவில்லை.
ஏனென்றால், இலங்கை ஏற்கெனவே விடுதலைப் புலிகளுடன் கரையிலும் கடலிலும் மோதிக்கொண்டிருந்தது.
அதைவிட விடுதலைப் புலிகளைத் தாண்டி வடக்கு, கிழக்கில் சீனாவோ பிற நாடுகளோ காலூன்ற முடியாத ஒரு சூழல் காணப்பட்டது. அது இந்தியாவுக்கு சார்பானதாகவும் இருந்தது. இன்றைக்கு அந்த நிலை இல்லை .
வெறுமையாக மாறிய இலங்கை கடற்பரப்புக்குள், சீனா தனது செல்வாக்கை நுழைக்க தொடங்கியதும், இந்தியா பதற்றம் அடைந்திருக்கிறது.
அதையடுத்து, சீனாவுக்கு இந்தியா தடை போட, சீனா அதற்கு தடை போட, மாறி மாறி இரண்டு தரப்புக்களும் தடம் போட்டு விழுத்துகின்ற காரியத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் இலங்கை அரசாங்கத்தினால் இரண்டு தரப்புகளுக்கும் நடுவே ஒளித்துப் பிடித்து விளையாட வேண்டிய நிலை தான் ஏற்பட்டிருக்கிறது.
அவ்வப்போது தோன்றுகின்ற சர்ச்சைகளை புதுடெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் சென்று தீர்த்துக் கொண்டு வருவதற்குள், அடுத்தது பிரச்சினை முளைத்து விடும்.
இப்படியே மாறி மாறி இலங்கை தனது இராஜதந்திர திறனை இழந்து கொண்டிருக்கிறது. தனக்கான ஒரு தெளிவான வழியை அது கையாள முடியாமல் இருக்கிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சீனப் பயணத்தின் போது கையெழுத்திட்ட இணக்கப்பாடுகள் மற்றும் வெளியிட்ட கூட்டறிக்கையின் படி, சிக்கலான சூழ்நிலைகளுக்குள் இலங்கை சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
சோசலிச முன்னிலை கட்சியின் செயலாளர் புபுது ஜாகொட உலகளாவிய அரசியல் பொறிக்குள் இலங்கை சிக்கிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
ஒரு பக்கத்தில் சீனாவுடன் சேர்ந்து செயற்படுவதாக – அதன் திட்டங்களுடன் சேர்ந்து இணங்குவதாக கூறப்பட்டுள்ள கூட்டறிக்கையில், இன்னொரு பக்கம் இந்தியாவுக்கு சார்பாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இந்த நிலையானது, பிராந்தியத்தில் அதிகாரமுடையவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்குள் ஏற்படுகின்ற சண்டைகளின் போது, இலங்கை முழுமையாக அதற்குள் இழுக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் நம்புகிறார்.
வடக்கு கிழக்கை இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கும், அம்பாந்தோட்டை உள்ளிட்ட தென்மாகாணத்தின் பிரதேசங்களை சீனாவுக்கும் வழங்க மறைமுகமாக ஒப்புதல் வழங்கும் வகையில், கூட்டறிக்கைகள் அமைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதுபோல ஏற்கனவே திருகோணமலை எரிபொருள் தாங்கிகளின் உரிமையை, இந்தியாவுக்கு வழங்கியுள்ள நிலையில், அம்பாந்தோட்டை அருகே புதிதாக எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு சீனாவுக்கு அனுமதி கொடுத்திருப்பதையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இதன்மூலம் சீனா முழுமையாக எரிபொருள் விநியோகத்தை தன் வசம் எடுத்துக் கொள்ளும் என்றும், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புகின்ற வாய்ப்பை, அதுவே பயன்படுத்திக் கொள்ளும் என்றும், கொழும்பு துறைமுகத்திற்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை கூட, சீனாவிடம் இழக்கின்ற நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்
இவற்றையெல்லாம் பட்டியல் போட்டு தான் அவர், உலகளாவிய அரசியல் பொறிக்குள் இலங்கை சிக்கி இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதே கருத்து அரசியலாளர்கள் மத்தியில் இப்பொழுது வலுவாக எடுத்துரைக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு, முன்னர் இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாமல் சீனாவையும் பகைத்துக் கொள்ளாமல் தனித்துவமான முறையில் அணிசேரா கொள்கையின் அடிப்படையில் செயல்படுவோம் எனக் கூறியிருந்தது.
ஆனால் இந்த இரண்டு நாடுகளையும் தவிர்க்கவும் முடியாமல் சேர்க்கவும் முடியாமல், இடை நடுவில் தத்தளிக்கும் நிலையில் இலங்கை இருக்கிறது.
பிராந்திய அதிகாரப் போட்டியில் இருந்து இலங்கை தப்பிக் கொள்ள முடியாது என்பதே, இந்த கூட்டறிக்கைகளின் மூலம் வெளிப்பட்டிருக்கின்ற உண்மை.
அது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், முரண்பாடுகளும் ஆதிக்கப் போட்டியும், நீளுகின்ற காலம் வரை, இலங்கையை பதற்றத்துக்குள்ளேயே வைத்திருக்கப் போகிறது.
-ஹரிகரன்