மதம், கலாசாரம், வரலாற்று பாரம்பரியங்களை தன்னகத்தே கொண்டே பெருமைக்குரிய நாடாக பாரத இந்தியா விளங்குகிறது.

என்னதான் தொழில்நுட்ப உலகில் பல புரட்சிகளை செய்து இந்தியா சாதனை படைத்தாலும் கூட, இங்குள்ள மக்கள் தமது பாரம்பரியங்களையும், மத நம்பிக்கையையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் அவற்றை கட்டிக்காத்து பேணி வருவது சிறப்பம்சமாகும்.

அந்த வகையில் இந்தியாவைப் பற்றி அறிந்துகொள்வோம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், நாம் பயணித்த முக்கிய இடமாகவும் தனித்துவம் மிக்க தளமாகவும் லோட்டஸ் கோவில் அதாவது தாமரை கோவில் காணப்படுகிறது.

 

கோவில் என்றாலே பல தெய்வங்களின் சிலைகளும் பாரம்பரியத்தை, மதத்தை பறைசாற்றும் ஓவியங்களும் கலை அம்சங்களும் தான் நமது எண்ணத்தில் தோன்றும்.

ஆனால் இந்த தாமரை கோவிலானது எந்தவொரு மதத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கடவுளின் சிலைகளையோ ஏனைய மத நம்பிக்கைக்குரிய சான்றுகளையோ கொண்டு காணப்படவில்லை.

எனினும், சகல மதத்தையும் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தினமும் அங்கு சென்று, பிரார்த்தனைகளில் ஈடுபடுவது நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக காணப்படுகிறது.

தாமரை கோவில் என அழைக்கப்படும் இந்த தனித்துவம் மிக்க தலமானது டெல்லியில் மிக பிரமாண்டமாக அழகாக காட்சியளிக்கிறது.

இது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானது. அதன் தனிச்சிறப்பு என்னவென்றால், இது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினையும் சார்ந்தது அல்ல. அனைத்து மதத்தினரும் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால், இங்கு சிலைகளோ சடங்குகளோ கிடையாது. மாறாக, பல்வேறு மதங்களின் புனித நூல்கள் இங்கு வாசிக்கப்படுகின்றன. இது அனைத்து மதத்தினருக்கும் சமமான இடமாக அமைந்துள்ளது.

தாமரை கோயிலின் மிகவும் தனித்துவமான அம்சம் அதன் அற்புதமான கட்டடக்கலை ஆகும். இது வெள்ளை பளிங்குக் கல்லால் ஆனது. தாமரை மலரைப் போன்றது. இக்கோயிலில் 27 இதழ்கள் உள்ளன. அவை மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன் வெளித்தோற்றம் கிட்டதட்ட அவுஸ்திரேலியாவில் காணப்படும் சிட்னி ஓபரா மாளிகைக்கு இணையானதாக காணப்படுகின்றது.

டெல்லியில் உள்ள தாமரை கோயில் 1986ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயிலை ஈரானிய கட்டடக் கலைஞர் ஃபரிபார்ஸ் சஹாபா வடிவமைத்தார். கோயிலின் மையக் கோபுரம் 40 மீட்டர் உயரமும் ஒன்பது வாயில்களையும் கொண்டுள்ளது.

பாதி மலர்ந்த தாமரை இதழ் போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாமரைக்கோயிலானது 10 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டப்பட்டதாகும்.

1953இல் இந்தக் கோவிலுக்கான நிலம் கொள்முதல் செய்யப்பட்டு கோயில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1980ஆம் ஆண்டு இதற்கான கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1986ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டன.

1986 டிசம்பர் 23ஆம் நாளில் திறக்கப்பட்டு 27ஆம் நாள் மக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. 107 நாடுகளில் இருந்து 8,000 பேர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவில் உள்ள 22 மாகாணங்களில் இருந்து சுமார் 4,000 பேர் அடங்குவர்.

1987ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கோயில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. முதல் நாளில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர்.

இந்த வழிபாட்டு இல்லமானது அனைத்து மதத்தினரும் கூடி, சிந்தித்து, வழிபடுவதற்கான இடமாக இருக்க வேண்டும் என்பதே பிரதான கருப்பொருளாக காணப்பட்டது.

அதனடிப்படையில் மதப் பின்னணி, பாலினம் அல்லது பிற வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் எவரும் தாமரை கோயிலுக்குள் பிரவேசித்து தியானங்களில் ஈடுபடலாம்.

தாமரைக் கோயிலானது, தனித்தனியாக நிற்கும் 27 பளிங்குக் கற்களாலான அமைப்புகளினால் மிதந்து கொண்டிருக்கும் பாதி திறந்த தாமரை மலர்,

அதன் இலைகளால் சூழப்பட்ட தோற்றத்தைக் கொடுக்கிறது. இந்த கட்டடத்தில் ஒரு சுற்றுக்கு ஒன்பது என மூன்று தொகுதியாக அடுக்கப்பட்டாற்போன்று ஒன்பது பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலுக்குத் தேவையான 10,000 சதுர மீட்டர் பளிங்குக் கற்கள் கிரீஸிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, இத்தாலியில் கட்டுமானத்துக்கு தேவையான வடிவம், அளவில் வெட்டப்பட்டது.

இந்தப் பளிங்கினை உட்புறமும் வெளிப்புறமும் இணைக்க, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட துருப்பிடிக்காத இணைப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தாமரையைச் சுற்றிலும் வளைந்த நடைபாதைகள் உள்ளன. தாமரையின் மிதக்கும் இலைகளைக் குறிக்க ஒன்பது குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாமரைக்கோயிலின் வெளிப்புறமிருந்து பார்த்தால் இதன் இதழ்கள் அல்லது இலைகள் மூன்று தொகுதியாகக் காணப்படும்.

இதில் வெளிப்புறமாக திறந்தவாறு இருக்கும் இதழ்கள் ‘நுழைவிதழ்கள்’ என்று அழைக்கப்படும். இந்த அமைப்பானது ஒன்பது இதழ்கள் கொண்ட வெளிப்புற தொகுப்பாகும்.

தாமரைக்கோவிலின் மொத்த மின் பயன்பாட்டில் 500 கிலோவாட் மின்சாரத்தினை கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி சேமிப்பு மின்கலன்கள் மூலம் பெறப்படுகிறது.

1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக இந்த வழிபாட்டுத் தலம் திறந்து வைக்கப்பட்டது. அது முதல் இன்று வரை கோடிக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக உலகில் மிகவும் அதிகமாக வருகை தரப்பட்ட கட்டடங்களில் இதுவும் ஒன்றானது.

குறிப்பாக இந்த கோவிலை பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை, ஈபிள் கோபுரம் மற்றும் தாஜ் மஹால் ஆகியவற்றின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை முந்தியுள்ளது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் கட்டடக் கலை வடிவமைப்புக்காகவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் பல்வேறு சர்வதேச விருதுகளை இந்த கோவிலுக்கு அளித்துள்ளன.

கோயிலின் உள்ளே ஒரே நேரத்தில் 2500 பேர் அமரக்கூடிய பிரமாண்டமான பிரார்த்தனை மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்துக்குள் பிரவேசிக்கும்போதே ஒருவித மன அமைதியும் சாந்தமும் கிடைக்கப்பெறுகிறது. இங்கு வருபவர்கள் அவரவர் விரும்பிய இடங்களில் அமர்ந்து தமக்கே உரிய தெய்வங்களை நினைத்து பிரார்த்தனைகளிலும் வேண்டுதல்களிலும் ஈடுபட முடியும்.

ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு, இங்கு மயான அமைதி நிலவுகிறது. குறிப்பாக பெருமளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அங்கு சென்று தியானங்களிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.

அவர்களை சரியான முறையில் வழிநடத்த ஊழியர்களும் பாதுகாப்பு பிரிவினரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பினும் இங்குள்ள மக்கள் மத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். பல மதங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாகவே இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக அழைக்கப்படுகிறது.

(தொடரும்…)

Share.
Leave A Reply