தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமாரின் வாழ்வும் காலமும் இந்த நீண்ட கட்டுரையின் கவனக்குவிப்பாக இருந்துவருகிறது.

முதல் மூன்று பாகங்களும் வல்வெட்டித்துறையை சேர்ந்த பதினெட்டு வயதான இளைஞன் எவ்வாறு விடுதலை புலிகள் இயக்கத்தில் ஒரு கெரில்லாப் போராளியாக இணைந்து படிப்படியாக உயர்ந்து யாழ்ப்பாணத்தின் ” முடிசூடா மன்னாக ” வந்தார் என்பதை விளக்கின. கிட்டுவும் அவரது சில தோழர்களும் இந்திய கடற்படை தங்களை கைதுசெய்வதை தடுக்க

தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களின் மரணத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து நான்காவதும் இறுதியுமான இந்த பாகம் விளக்குகிறது.

இந்த கட்டுரைத் தொடரில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டதைப் போன்று 1987 மார்ச் 30 ஆம் திகதி அவரது வாகனத்தின் மீது குண்டு வீசப்பட்டதால் கிட்டு ஒரு காலை இழந்தார்.

அதையடுத்து அவர் தீவிர இராணுவ சேவையில் இருந்து ” கட்டாய ஓய்வைப் ” பெற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

துடிப்பான போராளியான கிட்டு தனது போராட்ட நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு தயாராயிருக்கவில்லை. இந்தியாவுக்கு சென்று செயற்கைக் கால் ஒன்றை பொருத்திக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து அவர் ஆராய தீர்மானித்தார்.

1987 ஜூலை நடுப்பகுதியில் புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணத்தில் தனக்கு அடுத்த நிலையில் இருந்த ரஹீமுடனும் இன்னொரு மூத்த போராளியான செர்ணத்துடனும் சேர்ந்து கிட்டு இரகசியமாக படகு மூலம் இந்தியாவுக்கு சென்றார்.

சில வாரங்கள் கழித்து 1987 ஜூலை 29 ஆம் திகதி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவும் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். அதையடுத்து போரில் ஒரு தணிவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து பெரும் எண்ணிக்கையான விடுதலை புலிகள் இலங்கைக்கு திரும்பினர்.

விடுதலை புலிகள் மீது நிறைந்த அனுதாபம் கொண்டிருந்த அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனை கிட்டு சந்தித்தார்.

அவர் பல வழிகளிலும் விடுதலை புலிகளுக்கு உதவினார். மெட்ராஸில் ( இன்றைய சென்னை ) அசோக் நகரில் உள்ள செய்கை அவயவங்கள் பொருத்தும் மருத்துவ நிலையத்தில் கிட்டு மருத்துவ பராமரிப்பைப் பெறவதற்கு முதலமைச்சர் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

ஆனால், நிலைவரங்கள் விரைவாக மாறத் தொடங்கின.1987 அக்டோபரில் இந்திய அமைதிகாக்கும் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் போர் மூண்டது. நோய்வாய்ப்பட்டிருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அப்போது மருந்தவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

விடுதலை புலிகளின் அரசியல் மதியூகி அன்ரன் பாலசிங்கமும் யோகி மற்றும் திலகர் போன்ற அரசியல் பிரிவின் மூத்த உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலையில், மெட்ராஸில் பிரதான அரசியல் பேச்சுவார்த்தையாளர் கிட்டு மீது திணிக்கப்பட்டது.

அரசியல் பிரிவின் இன்னொரு மூத்த தலைவரான ‘பேபி’ சுப்பிரமணியமும் அப்போது மெட்ராஸில் இருந்தார். ஆனால் செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு காட்டாமல் அமைதியாக இருப்பதற்கு அவர் விரும்பினார்.

கலைஞர்

அன்று எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைலர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியை சந்தித்த கிட்டு விடுதலை புலிகளின் சார்பில் வேண்டுகோள் விடுத்தார்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர்களாக விடுதலை புலிகளை கலைஞர் கருதியதால் அவருக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவுகள் கசப்படைந்திருந்தன.

 

என்றாலும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கியஸ்தரான வைகோ என்று அறியப்பட்ட வை. கோபாலசுவாமி ஊடாக கருணாநிதியுடன் உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு கிட்டுவினால் முடிந்தது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் கிட்டு சந்தித்தார்.

அதன் விளைவாக கருணாநிதியும் தமிழ்நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களும் இந்திய அமைதிகாக்கும் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் மூண்ட போரைக் கடுமையாக கண்டனம் செய்தார்கள். உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களுடனும் இந்தியாவை தளமாகக் கொண்டு செயற்பட்ட சர்வதேச ஊடகங்களுடனும் கிட்டு தொடர்பாடல்களைச் செய்தார்.

அதன் விளைவாக விடுதலை புலிகளின் நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டிலும் வேறு சில இந்திய மாநிலங்களிலும் பிரசித்தம் கிடைத்தது. மேற்குலக நாடுகளில் இருந்த விடுதலை புலிகள் சார்பு அமைப்புக்களுடனும் கிட்டு தொடர்பில் இருந்தார்.

எம்.ஜி.ஆர்.

அமெரிக்காவில் இருந்த வண்ணம் எம்.ஜி.ஆர். கிட்டுவுடன் தொடர்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைலாப்பூரில் இருந்த தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றன் ஊடாக அமெரிக்காவில் இருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்களில் ஒருவருடன் ரஹீம் தொடர்புகொள்வார்.

மாறிமாறி தகவல்கள் பரிமாறப்பட்டன. தமிழ்நாட்டில் விடுதலை புலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிர்பார்த்த எம்ஜி.ஆர். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டு, ரஹீம், காஸ்ட்ரோ மற்றும் சில விடுதலை புலிகளை திருவான்மியூரில் ‘ வீட்டுக்காவலில் ‘ வைத்தார். ஆதனால் இந்தியாவில் விடுதலை புலிகளக்கு எதிராக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேவேளை கிடடுவின் காதலி சிந்தியா இந்திய இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து கிட்டுவின் படம் அடங்கிய அல்பம் ஒன்று கண்டெடுக்கப்படடது. அதன் மூலமாக அவர் கிட்டுவின் காதலி என்பது இந்தியப் படையினருக்கு தெரியவந்தது. சிந்தியா பலாலியில் தடுத்து வைக்கப்பட்டார்.

ஒரு சில வாரங்கள் கழத்து எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்து மெட்ராஸ் திரும்பினார். அவர் கிட்டுவைச் சந்தித்தார். இந்திய இராணுவத்தினால் கிட்டுவின் காதலி தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்து எம்ஜி.ஆர். ஆத்திரமடைந்தார்.

அவர் புதுடில்லிக்கு நெருக்குதல் கொடுத்தார். ஒரு சில நாட்களுக்குளன சிந்தியா மெட்ராஸுக்கு கொண்டுவரப்பட்டு கிட்டுவுடன் மீண்டும் இணைந்துகொண்டார். எம்ஜி.ஆர். 1987 டிசம்பர் 24 ஆம் திகதி காலமானது பெரும் கவலையை ஏற்படுத்தியது.

பேச்சுவார்த்தையாளர்

பெயரளவில் வீட்டுக்காவலில் இருந்தாலும், கிட்டு பேச்சுவார்த்தையாளர் என்ற பாத்திரத்தை வகித்தார். இந்திய புலனாய்வு சேவையான ‘றோ’ வைச் சேர்ந்தவர்கள் உட்பட இந்திய அதிகாரிகள் அவருடன் தொடர்பு கொண்டனர். அவ்வாறே அரசியல் தலைவர்களும் ஊடகங்களின் பிரதநிதிகளும் கிட்டுவுடன் தொடர்பில் இருந்தனர்.

விடுதலை புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு ராஜீவ் காந்தி அரசாங்கத்தின் மீது இந்தியாவுக்குள் கடுமையான நெருக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டன. ‘

றோ’வின் அனுசரணையுடனான ஒரு நடவடிக்கையாக இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களான ஜொனியையும் ரஹீமையும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக கிட்டு வன்னிக்கு அனுப்பினார்

.ஆனால், ஒரு மாபெரும் தொடர்பாடல் தவறு காரணமாக ஜொனி இந்திய அமைதி காக்கும் படையினரால் கொல்லப்பட்டார். ரஹீம் மெட்ராஸுக்கு திரும்பினார்.

நாளடைவில், விடுதலை புலிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்டுத்திக்கொள்ளும் நம்பிக்கையை புதுடில்லி கைவிட்டது.

விடுதலை புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஈ.என்.டி.எல். எவ். இயக்கங்களை ஊக்குவித்து வடக்கு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன் விளைவாக தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் அலுவலகங்களும் பாதுகாப்பான இடங்களும் மூடப்பட்டன. மெட்ராஸ் மத்திய சிறையில் உள்ள ஒரு பகுதியில் கிட்டு உட்பட 164 விடுதலை புலிகள் தடுத்துவைக்கப்பட்டனர். சிந்தியா அந்த சிறையில் பெண்களுக்கான பகுதியில் அடைக்கப்பட்டார்.

விசாரணை எதுவும் இன்றி நீண்டநாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் பொறுமை இழந்து தங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் வழக்குத் தொடரவேண்டும் அல்லது விடுதலை செய்யவேணடும் என்று கோரிக்கை விடுத்தனர்.

எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில் திலீபனைப் போன்று கிட்டுவும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பார் என்று அவர்கள் அறிவித்தனர்.

கிட்டு அவ்வாறு போராட்டத்தில் இறங்கினால் தாங்களும் அதில் இணைந்து கொள்ளப்போவதாகவும் அவர்கள் அச்சுறுத்தினர். உண்ணாவிரதப் போராட்ட அச்சுறுத்தல் பற்றிய செய்தி தமிழ்நாட்டு ஊடகங்களில் வெளியானது.

இந்திய அரசாங்கம் பீதியடைந்தது.தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் 1988 செப்டெம்பரில் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலில் அவர்கள் காங்கேசன்துறையில் தங்கவைக்கப்பட்டு பிறகு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி முகாமுக்கு கூட்டிச்செல்லப்பட்டனர்.

வன்னியில் கிட்டு

கிட்டுவும் சிந்தியாவும் பலாலிக்கு கொண்டு வரப்பட்டனர். பிறகு அவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாக இறக்கி விடப்பட்டனர்.

சென்னையில் செயற்கைக்கால் பொருத்தும் திட்டம் சரிவரவில்லை என்பதால் கிட்டு தொடர்ந்தும் ஊன்றுகோலின் உதவியுடனேயே நடந்துகொண்டு திரிந்தார்.

அவரை போட்டிக்குழுக்கள் தாக்குவது சுலபம். கிட்டுவும் சிந்தியாவும் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி நச்சினார்க்கினியரின் அலுவலகத்துக்கு சென்றனர். வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் தலைவர் வைத்தியசாலைக்கு வந்து கிட்டுவை வன்னிக்கு கூட்டிச் சென்றார். சிந்தியா தனது வீட்டுக்கு சென்று பெற்றோர்களுடன் இணைந்துகொண்டார்.

அதற்கு பிறகு கிட்டு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் வன்னிக் காட்டு்குள் வாழ்ந்தார்.

வன்னியில் வாழ்ந்த அந்த நாட்களே தனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான காலப்பகுதி என்று கிட்டு எனக்கு பின்னர்ஒரு கட்டத்தில் சொன்னார்.

வைகோ என்று அழைக்கப்படுகின்ற தமிழ்நாட்டு அரசியல் தலைவர் கோபாலசுவாமி இலங்கையின் வடபகுதிக்கு இரகசியமாக படகில் வந்தபோது அவரைச் சந்தித்தவர்களில் கிட்டுவும் ஒருவர்.

அதிர்ச்சிதரும் ஒரு திருப்பமாக விடுதலை புலிகளுக்கும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின.

அன்ரன் பாலசிங்கமும் அடேல் பாலசிங்கமும் பேச்சுவார்த்தைகளுக்காக கொழும்புக்கு வந்தனர்.

பேச்சுவார்த்தைகள் 1989 செப்டெம்பரில் போர்நிறுத்தம் ஒன்றுக்கு வழிவகுத்தது. விடுதலை புலிகளும் இலங்கை அரசாங்கமும் பகைமையைக் கைவிட்ட நிலையில், இலங்கையில் இருந்து இந்திய அமைதிகாக்கும் படையை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று புதடில்லி கடுமையான நெருக்குதலுக்கு உள்ளானது.

திருமணமும் ஐக்கிய இராச்சியமும்

நிகழ்வுப்போக்குகளின் இந்த அற்புதமான திருப்பம் கிட்டுவின் வாழ்விலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது.

அவர் தயக்கத்துடன் வன்னியில் இருந்து வெளியேறி ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றார். அதற்கு முன்னர் கிட்டுவும் சிந்தியாவும் கொழும்பில் திருமணம் செய்து கொண்டனர். அடேல் பாலசிங்கம் தனது ” விடுதலைக்கான வேட்கை ” (The Will to Freedom ) என்ற நூலில் அதை விரிவாக எழுதியிருக்கிறார். அதில் இருந்து பொருத்தமான பகுதிகள் வருமாறு ;

” பிரபாகரனைச் சந்தித்து கலந்தாலோசனை நடத்துவதற்கு அக்டோபர் முற்பகுதியில் நாங்கள் முல்லைத்தீவுக்கு இரண்டாவது தடவையாக நாம் சென்றோம். பிரபாகரனைச் சந்தத்தபோது அவர் துண்டாக்கப்பட்ட காலுக்கு சிகிச்சை பெறுவதற்காக கிட்டுவை லண்டனுக்கு அனுப்புவதற்கான தனது விருப்பத்தை பாலாவிடம் அவர் தெரிவித்தார்.

” தன்னை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் குறித்து கேள்விப்பட்டதும் கிட்டு உண்மையில் இரண்டு மனத்தில் இருந்தார்.

செயற்கைக் கால் ஒன்றைப் பொருத்துவதற்கு அவர் விரும்பினார் என்பதை யறுப்பதற்கில்லை. அதைப் பொருத்தினால் அவரின் நடமாட்டத்துக்கு வசதியாக இருக்கும். ஆனால், கிட்டு தனது போராளிகளுடனும் தாயகத்துடனும் உணர்வுபூர்வமான பிணைப்பைக் கொண்டவர்.அவர்களை விட்டு பிரிந்துசெல்லும் சாத்தியம் உண்மையில் அவருக்கு பெரும் வேதனை தருவதாகும்.

” போராளிகளுக்கு போதனைசெய்து அவர்களை உற்சாகப்படுத்தி புதிய திட்டங்களில் ஈடுபடுத்தக்கூடிய சூழ்நிலையில் கிட்டு செழித்தவர்.

வெளிநாட்டுக்கு புறப்படுவதற்கான நாட்கள் நெருங்க நெருஙக அவர் அமைதியானார். அவரின் போராளிகளில் பலரும் கூட அமைதியானார்கள். அளம்பில் காட்டுக்குள் இருந்து கிட்டுவை வெளியே கூட்டிச் செல்லவிருந்த தினம் பிரபாகரனின் தோளில் சாய்ந்து அழுத காட்சி நான் கண்ட மிகவும் கவலைக்குரிய ஒரு காட்சி என்று நான் நினைக்கிறேன்.

” கிட்டுவின் போராளிகள் அவரைக் கதிரையில் வைத்து தங்கள் தோள்களில் சுமந்து காத்துநின்ற ஹெலிகொப்டரை நோக்கிக் கொண்டு சென்றார்கள்.

காட்டுக்கு ஊடாக சென்று கொண்டிருந்தபோது கிட்டு தனக்கே உரித்தான துணிச்சலை வெளிப்படுத்தி போராளிகளுடன் பகிடிவிட்டு சிரித்துப் பேசி அவர்கள் மீதான பாசத்தை வெளிப்படுத்தினார்.

” கொழும்பு வந்துசேர்ந்த உடனடியாக கிட்டுவை நாங்கள் பிரிட்டிஷ் தூதரகத்துக்கு கூட்டிச் சென்றோம்.

பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகருடன் கதைத்த பிறகு கிட்டுவின் ஐக்கிய இராச்சியத்துக்கான விசாவுக்கு அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் அவர் மிகவும் முக்கியமான கடமையொனறைக் கவனிக்க வேண்டியிருந்தது.

” இந்திய அமைதி காக்கும் படையில் காவலில் இருந்து விடுவிக்கப்ட்டு முல்லைத்தீவு காடுகளுக்குள் கிட்டு சென்றபோது மருத்துவ மாணவியான தனது காதலி சிந்தியாவைப் பிரிந்து விட்டார். இப்போது காதலியுடன் மீண்டும் இணைவதற்கு அவர் ஆர்வமாக இருந்தார். அவரது வேண்டுகோளின் பேரில் சிந்தியா அவரைச் சந்திக்க யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வந்தார்.

” அவர்கள் திருமணம் செய்வதற்கு தீர்மானித்தனர். திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக கிடடுவின் தாயார் வல்வெட்டித்துறையில் இருந்து கொழும்புக்கு வந்தார்.

சிந்தியாவின் பெற்றோர் ஏற்கெனவே கொழும்பில் இருந்தனர். பேச்சுவார்த்தைக்காக வந்திருந்த விடுதலை புலிகள் குழு தங்கியிருந்த ஹோட்டல் அறைகளில் ஒன்றில் கிட்டு — சிந்தியா திருமணப்பதிவு இடம்பெற்றது. சில நாட்களுக்கு பிறகு கிட்டு லண்டனுக்கு சென்றார். பயண ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு சிந்தியாவும் லண்டன் சென்று கிட்டுவுடன் இணைந்துகொண்டார்.”

நிகழ்வுகளை பின்னோக்கிப் பார்க்கும்போது இனிமேல் இலங்கைக்கு திரும்பப்போவதில்லை என்ற ஒரு முன்னுணர்வு கிட்டுவுக்கு இருந்தது என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. தனது சுபாவத்துக்கு புறம்பான முறையில் கிட்டு பிரபாகரனின் தோளில் சாய்ந்து அழுததற்கு அதுவே காரணமாக இருந்திருக்கலாம்.

லண்டன் வந்துசேர்ந்த பிறகு கிட்டு தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்று செயற்கைக் காலை பொருத்திக் கொண்டார். லண்டனில் அவருடன் இணைந்த சிந்தியா சில மாதங்களுக்கு பிறகு தனது மருத்துவப் படிப்பை தொடருவதற்கு இலங்கை திரும்பினார்.

விடுதலை புலிகளின் சர்வதேச செயலகம்

ஐக்கிய இராச்சியத்தில் கிட்டு மனவுறுதியுடனும் ஆர்வத்துடனும விடுதலை புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் மூழ்கினார்.

உலகின் பல்வேறு நகரங்களில் இருந்த விடுதலை புலிகள் ஆதரவு அமைப்புக்கள்/ கிளைகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு கிட்டு அவற்றை எல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். விடுதலை புலிகளின் சர்வதேச செயலகம் லண்டனில் அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் விடுதலை புலிகள் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்படவில்லை.

அதேவேளை, இந்திய இராணுவம் 1990 மார்ச் 30 ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறியது. 1990 ஜூனில் இலங்கை ஆயுதப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் போர் மூண்டது.

பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்துக்கும் புதுடில்லிக்கும் இடையில் முரண்பாடுகள் கிளம்பிய நிலையில், சாத்தியமானால் இந்தியாவுடன் நல்லிணக்கத்துக்கு காலம் கனிந்துவிட்டது என்று கிட்டு உணர்ந்தார்.

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி கருணாநிதியின் கீழ் விடுதலை புலிகளுக்கு சார்பான அரசாங்கம் ஆட்சியில் இருந்த அன்றைய சூழ்நிலையை இது விடயத்தில் ஒரு நல்ல அம்சமாக கிட்டு கருதினார்.

ராஜீவ் காந்தி

கிட்டு தனது எண்ணத்தை பிரபாகரனுக்கு தெரியப்படுத்தியபோது அந்த திசையில் நடவடிக்கைகளை முன்னடுக்குமாறு அவரும் பச்சைக்கொடி காட்டினார்.

இந்தியாவில் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலில் ராஜீவ் காந்தி வெற்றிபெறுவார் என்று பரவலாக நம்பப்பட்டது. அதனால் ராஜீவ் காந்தியுடன் உறவுகளைச் சீர்செய்வதற்கு விடுதலை புலிகளின் சார்பில் கிட்டு முயற்சித்தார்.

முதலில் அவர் மெட்ராஸில் தங்கியிருந்த கவிஞர் காசி ஆனந்தனை ராஜீவ் காந்தியைச் சந்திக்க அனுப்பினார்.

அதற்கு பிறகு லண்டனில் இருந்து இரண்டாவது தூதுவர் ஒருவர் ராஜீவ் காந்தியைச் சந்திக்க அனுப்பப்பட்டார்.

நன்கு தெரிந்த நிதியுதியாளர் அர்ஜுனா சிற்றம்பலமே அந்த தூதுவர். இந்த விஜயங்கள் வெற்றிகரமானவையாக அமையவே கிட்டுவும் ராஜிவ் காந்தியின் கீழான எதிர்கால காங்கிரஸ் அரசாங்கம் ஒன்று விடுதலை புலிகளுடன் ஒத்துப்போகும் அணுகுமுறையொன்றை கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால், 1991 மே 21 ஆம் திகதி தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை அடுத்து கிட்டுவின் எதிர்பார்ப்புகள் எல்லாம் சிதறிப்போயின.

ராஜீவ் காந்தியுடன் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை வெளிப்படையாக உற்சாகப்படுத்திய அதேேளை விடுதலை புலிகளின் தலைவரும் புலனாய்வுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் மறைமுகமாக அவரைக் கொலை செய்வதற்கான கொடூரமான சதத்திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தார்கள் போன்று தோன்றியது.

ராஜீவ் காந்தி கொலை கிட்டுவுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் இந்திய அதிகாரிகள் கிட்டுவும் கொலைச்சதியில் சம்பந்தப்பட்டிருந்ததாக சந்தேகித்தார்கள்.

விடுதலை புலிகளினால் தனக்கு எந்த ஆபத்தும் வராது என்று ராஜீவ் காந்தி நினைக்கக்கூடியதான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இரு தூதுவர்களை கிட்டு புதுடில்லிக்கு அனுப்பியதாக இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் (சி.பி.ஐ.) நினைத்தது.

சுவிற்சர்லாந்து

கிட்டுவை விசாரிக்க வேண்டும் அல்லது அவரை விசாரிக்க இந்திய அதிகாரிகளை அனுமதிக்கவேண்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இந்தியா கடுமையான நெருக்குதலைக் கொடுத்தது.

இதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் கிட்டுவுக்கு எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டது. பிரிட்டனை விட்டு வெளியேற வேண்டும் அல்லது விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என்று அவருக்கு காலஅவகாசம் கொடுக்கப்ட்டது.

தான் கைதுசெய்யப்படக்கூடும் என்று எதிர்பார்த்த கிட்டு இங்கிலாந்து கால்வாயைக் கடந்து பிரான்ஸுக்குச் சென்றார் . ஒரு குறுகிய காலத்துக்கு பிறகு சுவிட்சர்லாந்துக்கு சென்றார். அங்கு அவர் அரசியல் தஞ்சம் கோரியதாக கூறப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த வேளையில் சமாதான முயற்சியொன்றை ஆரம்பிக்க கிட்டு முயன்றார்.

இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஏ.சீ.எஸ். ஹமீதுவை ஜெனீவாவில் கிட்டு இரகசியமாக தனியாக ஒரு தடவை சந்தித்ததாக ‘சுவிஸ்’ முரளி என்று அறியப்பட்ட சுவிட்சர்லாந்தில் விடுதலை புலிகளின் ஒருங்கிணைப்பாளர் நடராஜா முரளிதரன் கூறினார். பிரேமதாச அரசாங்கத்தில் ஹமீது அப்போது நீதியமைச்சராக இருந்தார். அவருடனான பேச்சுவார்த்தையின் விளைவாக எந்தப் பயனும் ஏற்படவில்லை.

மெக்சிக்கோ

அதேவேளை, கிட்டு தனது சமாதான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்தார். கலிபோர்ணியாவில் வாழும் இலங்கை வம்சாவளி கல்விமான கலாநிதி கே. செல்வகுமார் ஊடாக அவர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துடன் தொடர்புகொண்டார். மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடொன்றுக்கு கிட்டு வரவேண்டும் என்று இராஜாங்க திணைக்களத்தில் இலங்கை விவகாரங்களைக் கையாளும் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி கலாநிதி புர்னெல் டெலி கூறியதாக கலாநிதி செல்வகுமார் தெரிவித்தார்.

கனடாவுக்குள் பிரவேசிப்பதற்குள் பிரவேசிப்பதற்கு கிட்டு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனால் கிடடு சுவிட்சர்லாந்தில் இருந்து மெக்சிக்கோ சென்றார்.

மெக்சிக்கோவில் இருந்துகொண்டு புர்னெல் டெலியுடன் கிட்டு தொடர்பு கொண்டார். கிட்டு அமெரிக்காவுக்குள் பிரவேசித்து சமாதான முயற்சாக்கான அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற யோசனைக்கு இணக்கமானவராக அந்த அமெரிக்க அதிகாரி இருந்தார் என்று செல்வகுமார் கூறினார்.

ஆனால் குறித்துரைக்கப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அதிகாரமளிக்கும் கடிதம் ஒன்றை கிட்டு சமர்ப்பிக்கவேண்டும என்று கேட்கப்பட்டது.அதன் பிரகாரம் பிரப்கரனுக்கு அறிவித்துவிட்டு கிட்டு கடிதத்துக்காக காத்திருந்தார். அந்தக் கடிதம் ஒருபோதும் வந்துசேரவில்லை.

நீண்ட நாட்களாக காத்திருந்து விரக்தியடைந்த கிட்டு இலங்கைக்கு வருமாறு கேட்கப்பட்டார். விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.

பிரபாகரனுக்கும் பிரதி தலைவர் மாத்தையாவுக்கும் இடையிலான உறவுகள் கசப்படைந்திருந்தன.

அரசியல் பிரிவு தலைவர் யோகியுடனும் பிரபாகரன் மகிழ்ச்சியாக இல்லை. தனது நம்பிக்கைக்குரியவரான கிட்டுைஅரசியல் பிரிவுக்கு பொறுப்பான பிரதி தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார் என்ற ஊகிக்கப்பட்டது. இலங்கை திரும்புவதற்கான சாத்தியம் குறித்து கிட்டுவும் மகிழ்ச்சியடைந்தார்.

தாய்லாந்து

மெக்சிக்கோவில் இருந்து உக்ரெயின் சென்ற கிட்டு அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். பிறகு சிங்கப்பூரில் இருந்து அவர் தாய்லாந்து சென்றார்.

தாய்லாந்தின் புக்கெட்டில் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வேறு கருவிகளையும் ஏற்றிய விடுதலை புலிகளின் சரக்கு கப்பலில் கிட்டு ஏறினார்.

ஹொண்டூராஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பலுக்கு ‘ அஹற் ‘ என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்திய அதிகாரிகள் அந்த கப்பலை சந்தேகத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் என்பது விடுதலை புலிகளுக்கு தெரியாது.

1993 ஜனவரி 13 ஆம் திகதி இலங்கையின் கரையோரத்தில் இருந்து தெற்கே 290 மைல்கள் தொவைிலும் இந்தியாவின் கரையோரத்தில் இருந்து தென்கிழக்கே 440 மைல்கள் தொலைவிலும் வந்துகொண்டிருந்த கப்ஓலை இந்திய கரையோரக் காவல் படை அணுகியது. இது நடந்தது நடந்தது சர்வதேச கடற்பரப்பிலாகும். அது இந்திய கடற்பரப்போ அல்லது இலங்கை கடற்பரப்போ அல்ல.

‘ஒப்பரேசன் ஜபார்தாஸ்த்’

‘அஹற் ‘ விடுதலை புலிகளின் ஒரு ஆயுதக்கப்பல் என்பதும் அதில் இயக்கத்தின் மூத்த தளபதி கிட்டு வருகிறார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டபோது இந்தியா ‘ ஒப்பரேசன் ஜபார்தாஸ்த் ‘ நடவடிக்கையை தொடங்கியது.

கரையோரக்காவல் படையின் இரு கப்பல்களும் மூன்று கடற்படை கப்பலகளும் ‘அஹற் ‘ கப்பலை இடைமறித்தன விவேக், கிர்பான், பெரோஸ் காந்தி எனபவையே கடற்படைக் கப்பல்களின் பெயர்கள்.

விடுதலை புலிகள் சரணடைய வேண்டும் என்று இந்திய கடற்படை கேட்டது. அதற்கு மறுத்த கிட்டு இந்திய படையினர் கப்பலில் ஏறுவதற்கு முயற்சித்தால் அதை குண்டுவைத்து தகர்க்கப்போவதாக அச்சுறுத்தினார். மூன்று நாட்களாக நடுக்கடலில் ஒரு இழுபறிநிலை நீடித்தது.

ஜனவரி 16 ஆம் திகதி இந்திய கடற்படை ‘அஹற்’ கப்பலில் ஏறுவதற்கு தயாரானது. விடுதலை புலிகளினால் பணம் கொடுத்து அமர்த்தப்பட்ட கிரமமான பணியாளர்கள் குழு ஒன்று கப்பலில் இருந்தது. ” ஏழு விரல்கள்” என்று அறியப்பட்ட கப்பலின் காப்டன ஜெயச்சந்திரனையும் ஏழு பணியாளர்களையும் கிட்டு உயிர்காப்பு படகில் அனுப்பிவைத்தார். படகு கவிழ்ந்து பணியாள்கள் கடலில் மூழ்கியபோது இந்திய கடற்படை அவர்களை காப்பாற்றியது.

கிட்டுவும் லெப்டினண்ட் கேணல் குட்டிசிறீ உட்பட எட்டு இயக்கப் போராளிகளும் கப்பலுக்கு தீவைத்தனர். அது விரைவாகவே தீப்பிடித்துக்கொண்டது. கிட்டுவும் தோழர்களும் குண்டுகளை வெடிக்க வைத்ததுடன் சயனைட் வில்லைகளையும் விழுங்கினர். இவ்வாறுதான் காவிய நாயகன் போன்ற கிட்டு் நடுக்கடலில் தனது வாழ்வை பயங்கரமான முறையில் முடித்துக் கொண்டார்.

1993 ஜனவரி 14 தைப்பொங்கல் தினத்தன்று விடுதலை புலிகளின் சகல முகாம்களிலும் பொங்கல் நடந்தது. பல்வேறு முகாம்களில் பொங்கல் கொதிக்கும் நிலையை எட்டியபோது பானைகள் வெடித்தன. இரு நாட்களுக்கு பிறகு கிட்டுவின் மரணத்துடன் இந்த சம்பவங்களை தொடர்புபடுத்திய விடுதலை புலிகளின் பல முக்கியஸ்தர் அவற்றை முன்கூட்டிய அபசகுனமாக கருதினர்.

கிட்டு பூங்கா

விடுதலை புலிகள் மூன்று நாள் துக்கத்தை பிரகடனம் செய்தனர். வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தில் நினைவுத்தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. தங்களது பீரங்கிப் பிரிவுக்கு கிட்டுவின் பெயரையும் மோட்டார் பிரிவுக்கு குட்டிசிறியின் பெயரையும் விடுதலை புலிகள் சூட்டினர். நல்லூரில் உள்ள பூங்கா ஒன்றுக்கும் கிட்டுவின் பெயர் சூட்டப்பட்டது.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் நான் நெருங்கிப் பழகிய விடுதலை புலிகள் இயக்கத்தின் உயர்மட்ட தலைவர்களில் கிட்டு ஒருவர்.

உண்மையில் அவரை நான்தான் முதற்தடவையாக ஆங்கிலப் பிரசுரம் ஒன்றுக்காக (புரொண்ட்லைன்) பேட்டி கண்டேன். அவர் ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து மற்றும் மெக்சிக்கோவில் இருந்த நாட்களில் அவருடன் பல தடவைகள் தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன்.

அவர் மெக்சிக்கோவில் தனிமையில் இருந்ததால் என்னுடன் மணிகணக்காக பேசுவார். அவருடனான ஊடாட்டங்கள் குறித்து இனிமையான நினைவுகள் எனக்கு இருக்கின்றன. “கேணல்” கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமாரின் வாழ்வும் மரணமும் உண்மையிலேயே வடக்கு போராளி ஒருவரின் வீரகாவியம்.

டி.பி.எஸ். ஜெயராஜ்

Share.
Leave A Reply