-மருத்துவ அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை
ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களைப் பயன்படுத்திய பொலிஸ் துறை அதிகாரிகள் 17 பேர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் இவர்களது பதவிகள் பறிபோயுள்ளன.
இவர்களின் பெயர்ப் பட்டியலை புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விஷேட புலனாய்வுப் பிரிவினர் வழங்கியதாக,காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். போதைப்பொருள் பாவித்ததாகக்
குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சகலரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு மருத்துவ அறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோன்ற குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ளும் பல அதிகாரிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மருத்து அறிக்கைகளின் பிரகாரம் இவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.