நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும் என்றும், அதனை அடக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

“தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. பாதாள உலகக் குழுக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை. ஆனால் இந்த பாதாள உலகக் குழுக்கள் நீண்ட காலமாக வளர்ந்து பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களுக்குள் பரவியுள்ளன.

எனவே, அவர்களின் தொடர்புகள் ஒரு அழிவுகரமான வலையமைப்பாக வளர்ந்துள்ளன. இதனை ஒழிப்பதற்காக நாங்கள் கடுமையாக முயற்சி செய்கிறோம்.

இந்த வேலையைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவை அரசியல் ஆதரவின் கீழ் வளர்ந்துள்ளன. இப்போது அரசியல் பாதுகாப்பு இல்லை. மறுபுறம், எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்து வருகின்றன, மேலும் அது குறித்து விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளோம்.

இவை வெறுமனே வேறொரு கும்பலுடன் மோதும் பாதாள உலகக் கும்பல்களா அல்லது திரைக்குப் பின்னால் இருந்து இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இயக்குகின்றனவா என்ற சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன. நாங்கள் அது குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளோம்.”

 

Share.
Leave A Reply