நீதிமன்றத்தில் சந்தேக நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வாரங்களில் பல்வேறு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை எனது பாதுகாப்பு தொடர்பான கரிசனையை ஏற்படுத்துகின்றது.ஆகவே இரண்டு பாதுகாப்பு உத்தியோஸ்த்தர்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போது மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மையில் நான் எதிர்கொண்ட சம்பவமொன்று எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுகிறது.இம்மாதம்( பெப்ரவரி) 12ஆம் திகதி இரவு யாழ். வலம்புரி ஹோட்டலில் என் மீதும் மற்றும் எனது செயலாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் நான் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளேன் .சந்தேக நபரையும் கைது செய்தனர். எனினும் திடீரென எனக்கு எதிராக வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை பாராளுமன்ற உறுப்பினராக நான் செயற்படுவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்குகின்றது.

கணேமுல்லை சஞ்சீவ நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று கடந்த வாரங்களில் பல்வேறு கொலை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இவை எனது பாதுகாப்பு தொடர்பான கரிசனையையும் ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் எனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சிறப்புரிமையை முன்வைக்க எதிர்பார்க்கின்றேன்.

ஆகவே எனக்கு இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஒதுக்குமாறு கோருகின்றேன். இந்த வேண்டுகோளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்வதுடன், இந்த அவசர நிலைமையை கருத்தில்கொண்டு உங்களின் சாதகமான பதிலையும் உடனடியாக எதிர்பார்க்கின்றேன் என்றார்.

இதன்போது பதிலளித்த சபாநாயகர், சிறப்புரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுமாயின் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார்.

Share.
Leave A Reply