தன் மீதான வழக்கில் காவல் துறை இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய தேவை என்ன என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்பு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “காவல் துறை வரும் முன்பே ஊடகம் வீட்டிற்கு வருகிறது. நீங்கள் சம்மன் ஒட்டிவிட்டீர்கள். ஒட்டியதுடன் உங்களுக்கு வேலை முடிந்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல், நீங்கள் ஏன் கதவில் ஒட்டவேண்டும். என் மனைவி வீட்டில்தான் இருந்தார் அவரிடம் கொடுத்திருக்கலாம். நீங்கள் ஒட்டிச் சென்றால் எனக்குப் பதிலாக கதவு வந்து உங்களுக்கு விளக்கம் கொடுக்குமா? சம்மன் ஒட்டும் இடத்தில் ஏன் இவ்வளவு ஊடகங்கள் வருகிறது.

நான் ஏற்கனவே வந்து விளக்கம் கொடுத்துள்ளேன். மீண்டும் வருவேன் என்றும் சொல்லுகிறேன்.

பின் ஏன் இவ்வளவு பதட்டம் அடைகின்றீர்கள். வழக்கிற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை வளசரவாக்கம் காவல்துறை. பின் நீலாங்கரை காவல்துறை அங்கு வரவேண்டிய அவசியம் என்ன? அழைப்பாணை நான் படிக்கவா? அல்லது நாட்டு மக்கள் படிக்கவா? அதைக் கிழித்தால் அவ்வளவு பெரிய குற்றமா?.

இது என்ன பாலியல் வழக்கு. அவர் சொல்லிவிட்டால் குற்றமாகிவிடுமா? ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம். விசாரிக்க வேண்டுமல்லவா? விசாரிக்காமல் உறுதிபடுத்திச் செல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply