முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் 5 வீடுகளையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்தும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லைஎன கூறியுள்ளனர்.

கொழும்புக்கு அருகிலுள்ள இரண்டு சொகுசு குடியிருப்பு வளாகங்களில் இரண்டு வீடுகளும், கொழும்பு மற்றும் குருநாகல் பகுதிகளிலுள்ள மூன்று வீடுகளும் இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த சுற்றிவளைப்பின் மூலம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, மாத்தறை வெலிகம, பெலேன பகுதியிலுள்ள W15 உணவகமொன்றுக்கருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாகவே முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகின்றார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், கொழும்பு குற்றப்பிரிவின் சார்ஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டு மற்றொரு அதிகாரி ஒருவரும் காயமடைந்திருந்தார்.

வெலிகம W15 ஹோட்டல் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மகனான முகமது இஷாம் ஜமால்தீனுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரின் சோதனை நடவடிக்கையில், தேசபந்து தென்னகோன் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதை தடுக்கும் வகையிலான பயணத்தடையையும் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply