சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தொழுகை முடிந்த பிறகு நோன்பு கஞ்சி குடித்து நோன்பு திறந்தார் விஜய். பெரும் எதிர்பார்ப்போடு தவெக தொண்டர்கள் காத்திருந்த நிலையில் நான்கே வரியில் தனது பேச்சை முடித்துக் கொண்டு விஜய் புறப்பட்டு சென்றார்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு பொதுவெளி நிகழ்ச்சிகளில் நான்காவது முறையாக கலந்து கொண்டு இருக்கிறார்.

கட்சி மாநாடு, புத்தக வெளியீட்டு விழா, பரந்தூருக்குச் சென்று மக்களை சந்தித்தது என்ற வரிசையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வார் எனவும், மாலை 6:24 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தபடி இன்று மாலை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்கு வருகை தந்தார். வெள்ளை கைலி, வெள்ளை சட்டை, தலையில் தொப்பியோடு வந்த அவரை அங்கிருந்த நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் ஜமாத் நிர்வாகிகள் வரவேற்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தலைவர் @TVKVijayHQ ❤️💛@AadhavArjuna @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #aadhavarjuna #TVKfor2026 #TVK #ஆதவ்அர்ஜுனா #anbudanaadhavarjuna #aadhavarjuna #tvk #vijay #tvkvijay #tvkaadhavarjuna pic.twitter.com/VttTVsj2Hx
— Anbudan Aadhav Arjuna (@aadhavarjunfans) March 7, 2025

தொடர்ந்து விஜய் வருகையால் உற்சாகமடைந்த தமிழக வெற்றிக் கழகத்தினரும், ரசிகர்களும் தடுப்புகளை தாண்டி குதித்து வளாகத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்த பவுன்சர்கள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது தொண்டர்கள் பவுன்சர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அரங்கம் முழுவதுமாக நிறைந்ததால் அழைப்பிதழோடு வந்தவர்களும் அரங்கத்திற்கு வெளியே காக்க வைக்கப்பட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து ஆறு மணிக்கு விஜய் நோன்பு திறக்கும் அரங்குக்கு வந்தார். நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, மட்டன் சமோசா, உலர் பழங்கள், ஜூஸ் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

துவா செய்த பிறகு நோன்பு கஞ்சி, பேரிச்சை, சமோசா ஆகியவற்றை சாப்பிட்டு நோன்பு திறந்தார் விஜய். தொடர்ந்து ரமலான் தொழுகை நடந்த நிலையில், அதிலும் விஜய் கலந்து கொண்டார். பின்னர் தவெக சார்பில் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட நிலையில் அவரது உரையை அங்கிருந்தவர்களும் நேரலையில் பார்த்தவர்களும் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

ஆனால்,” என் நெஞ்சில் குடியிருக்கும்” என தனது பேச்சை தொடங்கிய விஜய், “அன்பையும் சமாதானத்தையும் போதித்த நபிகள் நாயகத்தின் வழியில் மனிதநேயத்தையும் சகோதரத்தையும் பின்பற்றும் இஸ்லாமிய நண்பர்கள் எனது அழைப்பை ஏற்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு அனைவருக்கும் நன்றி” என நான்கே வரிகளில் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க கட்சி சாயமின்றி நடைபெற்றது. நிகழ்ச்சி அரங்கிலும் வெளியேயும் எங்கேயும் கட்சிக் கொடியோ பிளக்ஸ் பேனர்கள் இல்லை.

மேலும் வழக்கமாக விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சந்தன கலர் பேண்ட், வெள்ளை நிற சட்டை அணிந்து வருவார்.

தற்போது அதனையும் தவிர்த்து விட்டு தலையில் தொப்பியுடன், வெள்ளை கைலியுடன் முதல் முறையாக பொது வழியில் விஜய் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் விஜயின் பேச்சை கேட்க ஆர்வத்துடன் அங்கு திரண்டிருந்த கட்சியினரும் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

Share.
Leave A Reply