மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 41 வயதான அனிமேட்டர்(ANIMATOR) ஒருவரின் தற்கொலையும், உருக்கமான கடிதமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள வைல் பார்லேவில் உள்ள சஹாரா ஹோட்டலில் நிஷாந்த் திரிபாதி (41 வயது) கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது தற்கொலைக்கு மனைவி அபூர்வாவும், அத்தை பிரார்த்தனாவும் தான் காரணம் என குறிப்பு எழுதி அதை தான் பணியாற்றிய நிறுவனத்தின் இணையதளத்தில் அவர் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
அவரது தற்கொலை கடிதத்தில், ‘இது அபூர்வாவுக்கானது- அன்பே.. நீ இதைப் படிக்கும் நேரத்தில், நான் போய்விட்டிருப்பேன். என்ன நடந்ததோ அதற்காக என் கடைசி தருணங்களில் நான் உன்னை வெறுத்திருக்கலாம். ஆனால் இந்த தருணத்திற்காக நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்.
நான் உன்னை அப்போது நேசித்தேன், இப்போதும் உன்னை நேசிக்கிறேன். நான் உறுதியளித்தபடி இந்த அன்பு ஒருபோதும் குறையாது. நீயும் பிரார்த்தனா அத்தையும்தான், நான் சந்தித்த அத்தனை போராட்டங்களுக்கும், என் மரணத்திற்குக் காரணம் என்பது என் அம்மாவுக்குத் தெரியும். அதனால்தான் நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன், என் அம்மாவிடம் போகாதே. அவள் மனம் உடைந்துவிட்டாள்’.
தனது தாய், சகோதரர் மற்றும் சகோதரிக்கு கடைசி செய்திகளை அனுப்பிய பிறகு, அவர் தனது மனைவி அபூர்வாவுக்கு இந்த கடைசி கடிதத்தை எழுதினார்.
காவல்துறை தகவலின்படி, அனிமேஷன் துறையில் பணியாற்றி வரும் நிஷாந்த், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியைச் சேர்த்தவர். தற்கொலை செய்து கொள்வதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்திருக்கிறார்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட நாளில், ‘தொந்தரவு செய்யாதீர்கள்’ என்ற பலகையை அறைக்கு வெளியே அவர் வைத்திருக்கிறார்.நீண்ட நேரமாகியும் அவர் ஹோட்டல் ஊழியர்களுக்கு பதிலளிக்காததால், மாஸ்டர் சாவியைப் பயன்படுத்தி அவரது அறைக்குள் நுழைந்தபோது, அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிஷாந்தின் தயார் அளித்த புகாரின்பேரில் மனைவி அபூர்வா மற்றும் அத்தை பிரார்த்தனா மீது பாரதீய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 108 (தற்கொலைக்கு தூண்டுதல்) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.