கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று, பின்லாந்து நாட்டை எஸ்டோனியாவுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் செல்லும் முக்கிய மின்சார கேபிள் ஒன்று சேதமடைந்திருந்ததை ஃபிங்ரிட் (Fingrid) என்ற மின்சார நிறுவனத்தின் தொழிலாளர்கள் கண்டறிந்தனர். இதனால் அதன் அண்டை நாடுகளுக்கு மின்சார விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன.

“இது எவ்வாறு ஏற்பட்டது என்று அறிய நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். யாரேனும் செய்த நாசவேலையா என்பது முதல் தொழில்நுட்ப கோளாறா என்பது வரை அனைத்து விதமான சாத்தியக்கூறுகள் பற்றியும் விசாரணை நடந்து வருகின்றது.

இதுவரை நாங்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை”, என்று ஃபிங்ரிட் நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் ஆர்டோ பாக்கின் பின்லாந்து அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

“இந்த சம்பவம் நடந்த போது குறைந்தது இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கேபிளுக்கு அருகில் இருந்தன” என்றும் அவர் கூறினார்.

சில மணி நேரத்திற்குப் பிறகு, பின்லாந்து கடலோர காவல்படையை சேர்ந்த ஒருவர், ‘ஈகிள் எஸ்’ என்ற ரஷ்ய கப்பலில் ஏறி பின்லாந்து கடற்பகுதிக்கு சென்றார். முக்கியமான மின்சார கேபிள்களில் ஒன்றான ‘எஸ்ட்லிங்க் 2’-வுக்கு வேண்டுமென்றே சேதம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள குக் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த கப்பல் உண்மையில் ரஷ்ய நிழற்படையின் ஒரு பகுதி என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கப்பல், தடை செய்யப்பட்ட ரஷ்யாவின் பெட்ரோலியப் பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

‘ஈகிள் எஸ்’ கப்பல் அதன் நங்கூரத்தை கடலுக்கடியில் இழுத்துச் சென்றதால் மின்சார கேபிள் சேதமடைந்திருக்கலாம் என்று பின்லாந்து காவல்துறை கருதுகிறது.

உண்மையில், ‘ஈகிள் எஸ்’ கப்பல் பயணித்த பகுதியில் சுமார் 80 மீட்டர் ஆழத்தில் ஒரு நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கப்பல் அதன் இரண்டு நங்கூரங்களில் ஒன்றை இழந்ததைக் காட்டும் புகைப்படங்களும் இருக்கின்றன.

இதுதொடர்பான குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாக 9 பேரை சந்தேகத்திற்குரியவர்களாக அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

படக்குறிப்பு, கடந்த டிசம்பரில் நடந்ததாகக் கூறப்படும் நாசவேலையைத் தொடர்ந்து, கடலுக்கடியில் உள்ள கேபிள்களைப் பாதுகாக்க எஸ்டோனியா கடற்படை ரோந்துப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

சேதம் ஏற்பட்ட இந்த கேபிளின் நீளம் 170 கிலோமீட்டர் ஆகும். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து பால்டிக் கடல் பிராந்தியத்தில் உள்ள கடலடி கேபிள்களுக்கு ஒரு பகுதியாகவோ அல்லது நிரந்தர சேதத்தையோ ஏற்படுத்திய தொடர்ச்சியான நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இந்த சம்பவம் சமீபமாக நடந்துள்ளது.

‘எஸ்ட்லிங்க் 2’ கேபிள் சம்பவத்திற்குப் பிறகு, நேட்டோ அமைப்பு பால்டிக் கடலில் அதன் படைகளின் இருப்பை அதிகரிக்க கோரிக்கை விடுத்தது. அதே நேரத்தில் எஸ்டோனியா கடலுக்கு அடியில் செல்லும் மற்றொரு முக்கிய கேபிளான ‘எஸ்ட்லிங்க் 1’ செல்லும் பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொள்ள ஒரு கப்பலை அனுப்பியது.

கடலுக்கு அடியில் உள்ள கேபிளுக்கு ஏற்பட்ட சேதம் “முக்கியமான உள் கட்டமைப்புகள் மீதான தொடர்ச்சியான சந்தேகத்திற்கிடமான தாக்குதல்களில் சமீபமாக நடந்த ஒன்று”, என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உலகின் பெருங்கடல்கள் வழியாக மின்சார சப்ளை மற்றும் தகவல் தொடர்பு பரிமாற்றத்திற்காக கடலுக்கு அடியில் சுமார் 600 கேபிள்கள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் ரகசியமாக வைக்கப்பட்ட கரைப் பகுதியில் மட்டுமே கடலை விட்டு மேலே வருகின்றன.

சுமார் 1.4 மில்லியன் கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கேபிள்கள் உலகம் முழுவதையும் இணைக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை தரவு பரிமாற்றத்திற்கு உதவுகின்றன. குறிப்பாக உலக அளவில் இணையவழி தகவல் பரிமாற்றத்திற்காக இவை உதவுகின்றன.

விபத்துகளும் மனிதத் தவறுகளும் தவிர்க்க முடியாதவை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொண்டாலும், இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் போது, ​​கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் நாச வேலைக்கு ஆளாகக் கூடும் என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேற்கத்திய நாடுகள் ஏன் கவலைப்படுகின்றன?

ரஷ்யாவிற்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவுகள் சிறந்ததாக இல்லை என்பது தெரிந்த ஒன்றே.

கிழக்கு யுக்ரேனில் ரஷ்யாவின் உதவியுடன் நடந்த கிளர்ச்சி மற்றும் 2014ஆம் ஆண்டு கிரைமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்குப் பிந்தைய ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன.

2022-ஆம் ஆண்டில், 200,000 ரஷ்ய துருப்புகள் யுக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடங்கின. இந்த போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இரு தரப்பிலும் சுமார் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்.

உலக நாடுகளுக்கு அறிவிக்காமல், ரஷ்யா மற்றொரு போரை நடத்தி வருவதாக நேட்டோ நம்புகிறது. அதை நேட்டோ ஒரு “கலப்புப் போர்” என்று குறிப்பிடுகிறது. யுக்ரேனுக்கு ராணுவ உதவிகளை வழங்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதே இந்த போரின் நோக்கம் ஆகும்.

எதிரிப்படை ஒரு அநாமதேய தாக்குதலை நடத்தும் போது, ​​மிகவும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளில் அது புறக்கணிக்கப்படலாம் அல்லது மறுக்கப்படலாம். இதுவே ‘கலப்பு போர்’ அல்லது ‘கிரே ஸோன் போர்’ என்று அழைக்கப்படுகின்றது.

இது போர் நடவடிக்கையாக கருதப்படும் அளவுக்கு தீவிரமானது அல்ல, ஆனால் எதிரிப்படைக்கு குறிப்பாக அவர்களின் உள் கட்டமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு தீவிரமானது.

“அதிக திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கடல் ஆழத்திற்கு சென்று இந்த கேபிள்களை சேதப்படுத்த முடியும். அதனை பழுது பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்”, என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட பாதுகாப்பு சிந்தனைக் குழுவான ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூடை (ருசி) சேர்ந்த ஆராய்ச்சியாளர் சித்தார்த் கௌஷல் பிபிசியிடம் தெரிவித்தார்.

நேட்டோவுடனான ஒரு மோதலில், நிலத்தில் உள்ள, கட்டமைப்புடன் சேர்த்து, கடலில் உள்ள உள் கட்டமைப்புக்கும் சேதம் விளைவிப்பது ரஷ்யாவுக்கு உத்தி ரீதியாக பலன் அளிக்கும். இதனால் மேற்குலகில் யுக்ரேனுக்கான மக்கள் ஆதரவு படிப்படியாக குறையும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ரஷ்யா மறுப்பு

கடந்த ஆண்டில் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் போலந்தில் உள்ள கொரியர் நிறுவனங்களின் பார்சல் பொட்டலங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் கலப்புப் போர் தாக்குதலுக்கான மற்ற எடுத்துக்காட்டாகும்.

இந்த சம்பவங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான விமானங்களை நாசப்படுத்துவதற்கான ஒத்திகை என்று போலந்து புலனாய்வுத் துறையினர் தெரிவித்தனர்.

இந்த நாச வேலைகளுக்குப் பின்னால் தாங்கள் இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்வீடன் மற்றும் செக் குடியரசு உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள சேமிப்புக் கிடங்குகள் மற்றும் ரயில் பாதைகள் மீதான பிற தாக்குதல்களுக்கு ரஷ்யா பொறுப்பாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வுகள் ரஷ்ய ராணுவத்தின் உளவுத்துறை யுக்ரேனை ஆதரிக்கும் நாடுகள் மீது அநாமதேய மற்றும் ரகசிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மேற்கத்திய நாடுகள் முடிவெடுக்க வழிவகுக்கின்றன.

 

இந்த தாக்குதல் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டதால், அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2017 ஆம் ஆண்டில் பின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கியை மையமாக கொண்டு ஐரோப்பிய சிறப்பு மையம் என்ற அமைப்பை உருவாக்கின.

சில நாடுகள் இந்த வகையான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் காமினோ கவனாக் சுட்டிக்காட்டுகிறார். ஏனெனில் அவை “அவை மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன”, என்றும் அவர் கூறினார்.

கடலுக்கடியில் உள்ள உள்கட்டமைப்புகளைப் பொருத்தவரை, எந்தவொரு சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டையும் அடையாளம் காண, நாடுகளுக்கு அவற்றின் சொந்த பிராந்தியத்தின் கடல் பரப்பில் என்ன நடக்கிறது என்பது பற்றிய உறுதியான புரிதல் தேவைப்படுகின்றது.

“இந்த போரில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்கு பிறகு, மற்ற நாடுகள் சிறப்பாக செயல்படுகின்றன”, என்று காமினோ கவனாக் கூறினார்.

கடலுக்கடியில் ரஷ்யாவின் வலிமை என்ன?

ரஷ்ய ராணுவத்தின் கட்டமைப்பு பல அடுக்குகளை கொண்டது என்று கௌஷல் விவரிக்கிறார்.

ஆழமற்ற நீரில், ஸ்பெட்ஸ்நாஸ் (சிறப்புப் படைகள்), ஜி.ஆர்.யு (ராணுவ புலனாய்வுத்துறை) மற்றும் ரஷ்ய கடற்படையிடமே பொறுப்பு இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், ஆழ்கடலில் தகவல் சேகரித்தல் மற்றும் நாச வேலைகளைத் திட்டமிடுதல் ஆகியவை கடலடி ஆராய்ச்சி இயக்குநரகம் (Underwater Research Directorate – GUGI) என்ற அமைப்பிடம் உள்ளது. இது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரஷ்ய அதிபர் புதினின் கீழ் நேரடியாக செயல்படுகிறது.

கடல் காற்றாலைகள் அல்லது கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களை நிலத்துடன் இணைக்கும் இடங்களைக் கண்டறிதல் போன்ற புலனாய்வு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக கடலின் மேற்பரப்பில் கப்பல்களை GUGI அமைப்பு பயன்படுத்துகிறது என்று கௌஷல் கூறுகிறார்.

“டைட்டானியம்-ஹல் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட பல்வேறு வகையான நீர்மூழ்கிக் கப்பல்கள் ரஷ்யாவிடம் இருக்கின்றன. அவை அதிக கடல் ஆழத்திற்குச் செல்வதுடன், பல பணிகளை மேற்கொள்வதற்கான இயந்திரங்களைக் கொண்டுள்ளன”, என்று கௌஷல் கூறுகிறார்.

இந்த கப்பல்கள் 3 பேர் கொண்ட குழுவினரால் இயக்கப்படுகின்றன. முன்னாள் கடற்படை உறுப்பினர்களாகவும், விண்வெளி வீரர்களைப் போல கடினமான பயிற்சியை மேற்கொண்டவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.

இந்த ஆழத்தில், கடலின் அடித்தளத்தில் என்ன வைக்கப்பட்டுள்ளது அல்லது அங்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் என்ன செய்கின்றன என்பதை கண்டறிவது அமெரிக்க கடற்படைக்கு கூட மிகவும் கடினம் ஆகும்.

இந்த கேபிள்களின் நாச வேலையை இறுதியில் “ஒரு தனியான நிகழ்வாக” பார்க்கக் கூடாது. மாறாக “தகவல் தொடர்பு மற்றும் உள் கட்டமைப்பை அச்சுறுத்தும் ரஷ்யாவின் விரிவான திட்டத்தின்” ஒரு அங்கமாகவே பார்க்க வேண்டும் என்று சாத்தம் ஹவுஸ் மையத்தில் ரஷ்ய நிபுணரும் எழுத்தாளருமான கெய்ர் கில்ஸ் கூறுகிறார்.

கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மற்றும் தொலைத்தொடர்புகள் மீது ரஷ்யா செலுத்தும் முக்கியத்துவம் “தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான அதன் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது தகவல்கள் மீதான கட்டுப்பாடுகளாகவும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்”. என்கிறார் அவர்.

 

புதின், ரஷ்யா, யுக்ரேன், ஐரோப்பா, பிரிட்டன்

பட மூலாதாரம், Getty Images

உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள சமூகங்களை பிற தகவல்கள் கிடைக்க விடாமல் தனிமைப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதனால் அவர்கள் ரஷ்யாவிலிருந்து வரும் தகவல்களை மட்டுமே பெறுவார்கள்.

“இது கிரைமியாவை கைப்பற்றுவதில் கருவியாக இருந்ததால் இது ஒரு முக்கியமான நோக்கமாக பார்க்கப்படுகிறது”, என்று கெய்ர் கில்ஸ் கூறுகிறார்.

உள் கட்டமைப்பு

ரஷ்யா மற்றும் கடலுக்கடியில் இருக்கும் உள் கட்டமைப்புகளில் அதன் தலையீடு பற்றிய சந்தேகங்கள் பின்லாந்து அதிகாரிகளுக்கு மட்டும் வரவில்லை.

2024 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில், ரஷ்ய கண்காணிப்புக் கப்பலான யான்டார் “பிரிட்டனின் முக்கிய கட்டமைப்புகள் அமைந்திருக்கும் பகுதியில் இருப்பதாக” தெரியவந்ததாக பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், யான்டாரின் நகர்வுகளை பிரிட்டன் கடற்படை கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. “புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கவும், பிரிட்டனின் கடலடியில் உள்ள உள் கட்டமைப்பை வரைபடமாக்கவும்” இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வை “வளர்ந்து வரும் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு” என்று ஜான் ஹீலி விவரித்தார்.

பிரிட்டன் கடல்பரப்புக்கு அடியில் மட்டும் சுமார் 60 கேபிள்கள் இருக்கின்றன. அவை அதன் கடற்கரையில் இருந்து வெவ்வேறு பகுதிகளில் நிலத்தை அடைகின்றன.

புதின், ரஷ்யா, யுக்ரேன், ஐரோப்பா, பிரிட்டன்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனுக்கு அருகே கடலுக்கடியில் உள்ள உள் கட்டமைப்புகள் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், அது அந்நாட்டில் உள்ள பிரச்னைகளுடன் சேர்ந்து இன்னும் ஒரு பிரச்னையாக மாறும் என்று கெய்ர் கில்ஸ் கூறினார்.

லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம், யான்டார் கப்பல் சம்பந்தப்பட்ட பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை “முற்றிலும் தவறானது” என்று விவரித்துள்ளது.

இது “பால்டிக் மற்றும் வட கடல் பிராந்தியங்களில் பதற்றங்களை வேண்டுமென்றே தீவிரப்படுத்த” பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளால் பயன்படுத்தப்பட்டு வரும் ரஷ்ய எதிர்ப்பின் விளைவு என்று அது கூறுகிறது.

அப்பாவித்தனமான நம்பிக்கை

இந்த ஆண்டு, தேசிய பாதுகாப்பு உத்திக்கான பிரிட்டனின் கூட்டுக் குழு, கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மீதான தாக்குதல்கள் அந்நாட்டை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த விசாரணையைத் தொடங்கியது.

“ரஷ்யர்கள் ஏற்கனவே கடலுக்கு அடியில் செயல்படும் டிரோன்களை வைத்திருக்கலாம், கேபிள்கள் மற்றும் குழாய்கள் மீது தாக்குதல் நடத்த அவை உத்தரவுகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் – அவை வரலாம் அல்லது வராமலும் போகலாம்,” என்று எழுத்தாளரும் ரஷ்ய நிபுணருமான எட்வர்ட் லூகாஸ் கூறுகிறார்.

“ரஷ்யாவின் கண்காணிப்பு கப்பலான யான்டர், யாருக்கும் தெரியாத கடலின் அடியில் பல ஆண்டுகளாக என்ன இருக்கிறது என்பது குறித்து நோட்டமிட்டு வருகின்றது” என்றும் அவர் கூறுகிறார்.

“கடலடி கேபிள்கள் எதிரிப்படையின் இலக்காக மாறும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இப்போது பல தசாப்தங்களாக மெத்தனமாக இருந்ததன் பலனை அனுபவித்து வருகிறோம். கடலுக்கடியில் இருக்கும் நமது உள் கட்டமைப்புகளை சேதப்படுத்தினால், அதற்கு ரஷ்யா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று நாம் உணர்த்த வேண்டும்” என்றார் அவர்.

 

புதின், ரஷ்யா, யுக்ரேன், ஐரோப்பா, பிரிட்டன்

பிரிட்டன், அதன் உள் கட்டமைப்பை நன்றாக வைத்துள்ளது, அந்நாடு பழுது பார்ப்பு பணிகளை மிக விரைவாக செய்ய முடியும் என்று கவானாக் கூறுகிறார்.

கூடுதலாக கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களின் வடிவமைப்பு, எப்போதாவது ஒரு கட்டத்தில் சேதமடையப் போகிறது, என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் ஒரு நாட்டின் தனிப்பட்ட கேபிள்களுக்கு ஏற்படும் சேதம் ரஷ்யா இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்கத் தொடங்கிய போது இருந்த அதே தாக்கத்தை இப்போது ஏற்படுத்தாது என்று கில்ஸ் விவரிக்கிறார்

ஏனென்றால், ஒரே நாடுகளை பல்வேறு வழிகளில் இணைக்கும் பல கேபிள்கள் இருக்கின்றன. பழுதுபார்க்கும் வலையமைப்பு வலுவாக இருப்பதை உறுதி செய்வதே இதன் குறிக்கோள் என்று கவானாக் கூறுகிறார்.

 

புதின், ரஷ்யா, யுக்ரேன், ஐரோப்பா, பிரிட்டன்

இது ஒரு அபாய எச்சரிக்கை

இந்த விஷயத்தில் அந்நாட்டுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்யா கூறினாலும், ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இந்த சம்பவங்கள் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்தன.

“எப்போதும் அச்சுறுத்தல்கள் இருக்கும். தற்போதைய சூழலில், அச்சுறுத்தல் விடுக்கும் நாடுகள் உண்மையிலேயே முயற்சி செய்து தற்போதைய சூழலில் என்ன நடவடிக்கைகள் வேலை செய்கிறது என்பதைப் பார்க்க அதிக வாய்ப்புகளை பெற்றதாக உணர்கிறார்கள்”, என்று கில்ஸ் விளக்குகிறார்.

கலப்பு போர்முறை ரஷ்யாவிற்கு ஒரு பாடமாகவும் அமைகின்றது. “இதன் தாக்கம் என்ன என்பதை அவர்கள் பார்க்கிறார்கள், அவர்கள் தாக்குதல் நடத்திய நாடுகளின் பதில் என்ன, புலனாய்வுத் திறன், நீதியுடன் கூடிய செயல்முறை போன்றவற்றை அவர்கள் பார்க்கிறார்கள்.” என்று அவர் கூறுகிறார்.

“இது கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களைப் பற்றியது மட்டுமல்ல, ரஷ்யாவில் இருந்து தொலைதூரத்தில் உள்ள மக்களையும் பாதிக்கும் வழிகளை பற்றியது” என்று கில்ஸ் கூறுகிறார்.

“இது பயணிகள் விமானங்களில் வெடிக்கும் பொருட்களை நிறுவுவது போன்றதாகும். இறுதியில், போர் அல்லது எச்சரிக்கை இல்லாமல் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து ஏவுகணை தாக்குதல்கள் வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. ஏனென்றால் ரஷ்யா அதன் விவகாரங்களை அவ்வாறுதான் செய்து வருகிறது”, என்று அவர் குறிப்பிட்டார்.

கடலுக்கடியில் கேபிள்களை சேதப்படுத்தும் அச்சுறுத்தலை ஐரோப்பா எவ்வாறு கையாள்கிறது என்பது விளாதிமிர் புதினின் ரஷ்யாவை மேற்கு நாடுகள் சமாளிக்க முயற்சிக்கும் பல முனைகளில் ஒன்றாகும்.

Share.
Leave A Reply