ரஷ்ய- உக்ரைன் போர் உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றதாக கடந்த மூன்று வருடங்கள் காணப்பட்டது.

தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரு நாட்டுக்குமான போரை முடிவுக்கு கொண்டு வர முதல் கட்ட நகர்வை தொடங்கியுள்ளார்

12. 03.2025 அன்று சவுதிஅரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டாவில் அமெரிக்க வெளிவிவகார செயலாளார் ரூமியோவுக்கும் உக்ரைன் அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த உரையாடலில் 30 நாட்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை உக்ரைன் தரப்பு முன்வந்ததோடு அமெரிக்காவின் உக்ரேனில் காணப்படும் கனி வளங்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலான உடன்படிக்கைக்கு ஒப்புதலும் அளித்துள்ளது.

இதனை அடுத்து இவ் உடன்பாடு தொடர்பில் ரஷ்யாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு டொனால்ட் ட்ரம்ப்பின் விசேட தூதுவர் ஸ்டீம் விட்கோவ் ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் மொஸ்கோவில் உரையாடல் நிகழ்த்தியுள்ளனர்.

அத்தகைய உரையாடலிலும் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு ரஷ்யா உடன்படுவதாகவும் அதற்கான நிபந்தனைகள் சிலவற்றை முன் வைத்ததாகவும் அறிவித்தது.

இக்கட்டுரையும் ரஷ்ய ஜனாதிபதி முன் வைத்துள்ள நிபந்தனைகளையும் அதன் அரசியல் நோக்கங்களையும் தேடுவதாகவுள்ளது.

குறிப்பாக முடிந்த வாரங்களில் உக்ரேனும் ரஷ்யாவும் பரஸ்பரம் தீவிர போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

உக்ரைன் ரஷ்யாவின் மேற்கு குர்க்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றும் நிலையில் ரஷ்ய இராணுவம் மீளவும் அப்பிராந்தியத்தின் நகரத்தை கைப்பற்றியதோடு அப்பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றும் நிலையில் விளங்குகிறது.

இதேபோன்று உக்ரைன் கைப்பற்றிய ஏனைய பகுதிகளையும் கைப்பற்றும் முனைப்போடு காணப்படுகிறது.

அமெரிக்காவின் இராணுவ உதவிகளும் புலனாய்வு ஒத்துழைப்பும் கைவிடப்பட்ட நிலையில் ரஷ்ய தாக்குதல் வேகமாக உக்ரைனை நோக்கி நகருகின்றது.

இச் சந்தர்ப்பத்திலேயே விளாடிமிர் புட்டின் 30 நாள் போர் நிறுத்த உடன்படிக்கையை தந்திரோபாய ரீதியில் கையாளுவதற்கான நடவடிக்கைகளை முதன்மைப்படுத்த தொடங்கியுள்ளார். அதனை விரிவாக விளங்கிக்கொள்வது பொருத்தமானதாக அமையும்.

முதலாவது ரஷ்யாவைப் பொறுத்தவரை இராணுவ ரீதியில் வலுவான நிலையில் நின்று கொண்டு பேச்சுவார்த்தையை எதிர்கொள்வதற்கு விரும்புகின்றது.

அதற்கு அமைவாகவே போரில் ரஷ்யாவின் கை ஓங்குகின்ற நிலையில் போர் நிறுத்த உடன்பாட்டில் நிபந்தனைகளை முன்வைப்பதன் மூலம் தனது இலக்கை அடைந்து கொள்வதற்கு முனைகின்றது.

அதற்கு அமைவாகவே போர் நிறுத்த உடன்படிக்கையில் சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளது. உக்ரைனுக்கான நிபந்தனைகள் மட்டுமின்றி ஐரோப்பாவையும் நேட்டோவையும் இலக்கு வைத்ததாக அந்நிபந்தனைகள் அமைந்துள்ளன.

இரண்டாவது உக்ரையின் ரஷ்ய போருக்கான அடிப்படை நேட்டோவில் உக்ரைன் இணைவது பொறுத்து எழுததே.

அதனால் இப்போர் நிறுத்த உடன்படிக்கை என்பது ஐரோப்பிய யூனியன் நேட்டோ சார்ந்த விடயமாகவே கருதுகின்றனர்.

அதனால் உக்ரையின் நேட்டோவுடன் இணைவது பொறுத்தும் போர் நிறுத்த காலப்பகுதியில் இராணுவ தளபாடங்களையும் உக்ரைன் இராணுவத்திற்கான பயிற்சியையும் வழங்கக் கூடாது என்றும் அத்தகைய நிபந்தனையில் முதன்மைப்படுத்தியுள்ளார்.

இதனால் நேட்டோ இராணுவ உதவிகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே ர‌ஷ்ய ஜனாதிபதியின் முக்கிய நிபந்தனையாக உள்ளது.

மூன்றாவது ரஷ்யா மீதான மேற்கு நாடுகளில் பொருளாதார தடைகளும் ஏனைய எதிர் நடவடிக்கைகளும் முழுமையாக நிறுத்தப்படுவது ரஷ்ய ஜனாதிபதியின் முக்கிய நோக்கமாக உள்ளது.

ரஷ்யா தற்போது ஐரோப்பாவுடன் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதோடு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் நேட்டோவும் ஐரோப்பிய யூனியனும் விஸ்தரிப்பை மேற்கொண்டு வருகின்றன.

இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ரஷ்யாவின் உட்கட்டமைப்புகளை பலவீனப்படுத்தி வருகின்றது.

இதனை தடுத்து நிறுத்துவதும் உக்ரைன் பிராந்தியத்தில் ரஷ்யா கைப்பற்றிய நிலங்களை ஐரோப்பா மற்றும் மேற்குலகம் ஏற்றுக்கொள்ள வைப்பதோடு போர் நிறுத்தம் நீண்ட அமைதியை கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனையை முதன்மைப்படுத்தி இருக்கிறது.

இது ஒரு வகையில் நிரப்பப்பட முடியாத நிபந்தனையாக இருந்தாலும் இதுவே ரஷ்யாவின் பிரதான இலக்காக உள்ளது. அமெரிக்கா ஐஸ்லாந்தையும் பனாமாக் கால்வாயையும் உக்ரைன் கனிம வளங்களையும் கைப்பற்ற முடியும் எனில் ரஷ்யா ஏன் தன்னுடைய நலன் கருதி உக்ரைன் பிராந்தியத்தில் கைப்பற்றிய நிலங்களை ஆளுகை செய்ய முடியாது என்ற எண்ணத்தோடு நகர முயலுகிறது.

நான்காவது பிரிக்ஸ் அமைப்பு டொலர் நாணயத்துக்கு பதிலாக புதிய நாணயத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

அத்தகைய திட்டமிடலை வழி நடத்துகின்ற பிரதான நாடுகளில் ஒன்றாக ரஷ்யா விளங்குகிறது. அதனை குழப்புவது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சி காலத்தில் பிரதான இலக்காக உள்ளது. அத்தகைய இலக்கை முன்னகர்த்துவதில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் முக்கியமானவர்.

அதனால் அவரை இலகுவாக கையாளக் கூடிய டொனால்ட் போர் நிறுத்தத்தை முன்னிறுத்திக் கொண்டு டொலருக்கு எதிரான பிரிக்ஸ் அமைப்பின் எழுச்சியை முடிவுக்கு கொண்டு வர முனைகின்றார்.

அதே சந்தர்ப்பத்தில் அதனை ஒரு பலமான அம்சமாக முன்னிறுத்திக்கிக் கொண்டு உக்ரைன் நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்ற மேற்கொண்ட போரை பயன்படுத்திக் கொள்ள முனைகிறது. இதனால் அமெரிக்காவின் போர் நிறுத்தத்தை கையாண்டு இலக்கை அடைய முடியும் என்று நிபந்தனைகளை அதிகப்படுத்தி உள்ளது.

டொலரை பாதுகாக்க வேண்டும் எனில் ரஷ்யாவின் நிபந்தனைக்கு அமெரிக்கா கட்டுப்பட வேண்டிய தேவை தவிர்க்க முடியாதது.

அப்படியாயின் மீளவும் உக்ரைன் அமெரிக்காவால் பலியிடப்பட வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும். ரஷ்யா விரும்பும் உபாயங்களுக்குள் உக்ரைன் இசைவு பெறுகின்ற நிலை தவிர்க்க முடியாதாக எழுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தற்போது போரை அமெரிக்கா ரஷ்யா பக்கம் திசைதிருப்பி உள்ளார் என்பது உண்மையே. ஆனால் அதில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள நலன்கள் ஒன்று சேரும் சூழல் ஏற்படுமாயின் மீளவும் உக்ரைனை பலியிடுவதைவிட அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை. அத்தகைய சூழலுக்குள்ளேயே ரஷ்ய ஜனாதிபதி புட்டின் நகர்வுகள் அமைந்துள்ளன.

எனவே போர் நிறுத்த உடன்பாடு ரஷ்ய ஜனாதிபதியின் கோரிக்கைகளுக்கு அமைவானதாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

புடின் அதிக நிபந்தனைகளை முன் வைத்ததன் அடிப்படை நோக்கம், அதில் குறைந்தபட்சமான விடயங்களாவது ஏற்றுக் கொள்ளப்படுகின்ற சூழல் தவிர்க்க முடியாததாக ஏற்பட வாய்ப்புள்ளது என்பதேயாகும். அதனை நோக்கி போர் நிறுத்த உடன்பாடு பற்றிய உரையாடல் நகர்கிறது.

அடிப்படையில் இப்போர் நிறுத்த உடன்பாட்டை சாத்தியமாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு எழுந்தது. டொனால்ட் ட்ரம்ப் மீள மீள மக்கள் கொல்லப்படுவதையும் மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதையும் பற்றி அதிக கரிசனை கொண்டவராக காட்டிக் கொள்ள முயலுகிறார். ஆனால் அது எவையும் யதார்த்தமானவை கிடையாது. அவை அனைத்தும் வெளியே காண்பிக்கப்படும் வடிவம் மட்டுமே.

உள்ளார்ந்த ரீதியில் பிரிக்ஸின் நாணயம் டொலரின் இருப்பையும் அதன் சந்தையையும் பெருமளவுக்கு காணாமல் செய்துவிட வாய்ப்புள்ளது அல்லது மட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. வரி அதிகரிப்பு என்பது சந்தைக்கான வாய்ப்பினை மட்டுப்படுத்திவிடும். இதுவே உக்ரைன் ரஷ்ய போர் நிறுத்தத்தின் நோக்கமாக உள்ளது.

-ரி.கணேசலிங்கம்-

Share.
Leave A Reply