அரசியல் எதிர்காலத்திற்காக கூட்டாக கொலை செய்வது தென்னிலங்கை அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டது. தமிழர்களிற்கு எதிராகவும் இவ்வாறான தந்திரோபாயங்களையே ஆட்சியாளர்கள் பயன்பபடுத்தினார்கள்

கொழும்பு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மாத்தளை என எல்லா இடங்களிலும் ஒரே தந்திரோபாயங்களே பின்பற்றப்பட்டன, தென்னிலங்கையில் இடம்பெற்ற அநியாயங்கள் பற்றி பேசிவது முக்கியம் ஏனென்றால் இது பற்றி பேசும்போதுதான் ஜேஆர் ரணில் விக்கிரமசிங்க தென்னிலங்கையில்மாத்திரமல்ல வடக்குகிழக்கிலும் இதனை செய்தார்கள்என்பதை சிங்கள மக்கள் அறிந்துகொள்ளும் உணர்ந்துகொள்ளும் நிலை உருவாகும் என பட்டலந்த வதை முகாம் குறித்து புலனாய்வு செய்து அதனை அம்பலப்படுத்திய புலனாய்வு ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன தெரிவித்துள்ளார்

மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்றின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது.

நாங்கள் இளம் காலத்தில் பார்த்த ஒரு கொடுமையான வன்முறை மிகுந்த மர்மமான அரசியல் சூழ்நிலைதான் பட்டலந்த.

இதனுடைய வரலாற்றை பின்னர்பார்ப்போம்.

1960 களின் பிற்பகுதியில் இலங்கைக்கு முதல் முறையாக மொசாட் உறுப்பினர் ஒருவர் விஜயம் மேற்கொண்டார், அவர் – அரிமா லெவி ஜேஆர் ஜெயவர்த்தனவை சந்தித்து அரசியல் இளைஞர் சமூகத்தை எவ்வாறு கட்டியெழுப்பவேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

1970களில்சிறிமாவோ பண்டாரநாயக்க தங்களுடைய பிள்ளைகளை அடிப்படையாகவைத்து ஒரு இளைஞர் அரசியல் சமூகத்தை உருவாக்க முயன்றார். தான் தாங்கள் சார்ந்த இளைஞர் சமூகத்தை உருவாக்க முயன்றார். அதற்கான பொறுப்புகளை தனது பிள்ளைகளிடம் வழங்கினார்.

1970களில்புதிய அரசியல் இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொழும்பின் இந்த அரசியல் தலைவர்கள் தங்களிற்கு பின்னர் தங்கள் பதவிகளை தங்கள் பரம்பரைக்கு எப்படி கொடுப்பது என்பதற்கான திட்டமிடல்களில் ஈடுபட்டனர்.

இவர்கள் அதற்காக எப்படி தயாராகயிருந்தார்கள் என்றால் அரசாங்கத்துடன் ஒத்துப்போகாத இளைஞர்களை அழிப்பதற்கு இவர்கள்தயாராகயிருந்தார்கள். அதற்கான திட்டங்கள் இவர்களிடம்இருந்தன.

1977 முதல்81 வரை தமிழ் இனத்திற்கு எதிராக மிகப்பெரும்வன்முறைகள் தாக்குதல்கள் இடம்பெற்றன.

1981 இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும் தமிழர்கள் கொல்லப்பட்டதும் சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் நினைவில் உள்ளது.

இலங்கையின் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு வைத்திருந்த இந்த வன்முறைகளை முதன்முதலில் பரீட்சித்து பார்த்தது தமிழ் சமூகத்திற்கு எதிராகத்தான்.

தங்களிற்கு மசியாத தமிழ் இளைஞர்கள் தமிழ் சமூகத்தினர் தமிழ் தலைவர்கள் மீது அவர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டார்கள். தண்டனை வழங்கினார்கள்.

அரசாங்க சிறையில் பாதுகாப்பாகயிருந்த தமிழ் கைதிகளை இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்தமை இதற்கான ஒரு உதாரணம்.

இந்த சிறையிலிருந்த தமிழர்களிற்கு எதிராக சிங்களவர்களை தூண்டிவிட்டார்கள், சிங்கள கைதிகளை வைத்தே தமிழர்களை தாக்கினார்கள்.

ஜேஆர் தனக்கு எதிரான சமூகத்தை தண்டிப்பதற்காக எவ்வளவு கீழ்த்தரமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார் என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியது.

நான் முதன் முதலில் ஆராய நினைத்தது கொக்கட்டிச்சோலைபடுகொலை பற்றித்தான்.

கொக்கட்டிச்சோலை படுகொலையில் ஈடுபட்ட அரச இராணுவத்தின் பொறுப்பதிகாரியாக இருந்தவர் இலங்கையின் கொழும்பின் மிகப்பெரிய பாடசாலையாகயிருந்த ஆனந்தா கல்லூரியின் அதிபரின் மகன் குடலிக. கேர்ணல் குடலிகம.

இராணுவநீதிமன்றம் இவர் குற்றவாளி என தெரிவித்திருந்த போதிலும் இவருக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.

தங்களுடைய அரசியல் எதிர்காலத்திற்காக கூட்டாக கொலை செய்வது தென்னிலங்கை அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டது.

1971 இல் சிங்கராஜா வனகாட்டுப்பகுதிக்குள் பின்வாங்கிய ஜேவிபி உறுப்பினரை கைதுசெய்து அவருக்கான புதைகுழியை அவரையே வெட்டச்செய்து கொன்று புதைத்த வரலாறு உள்ளது.

இந்த அரசாங்கங்கள் கடந்த 70 வருடங்களாக தங்களிற்கு எதிரானவர்களை மாற்றுக்கருத்தினை கொண்டிருப்பவர்களை கூட்டாக கொலை செய்தன அல்லது மோசமான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டன.

இந்த பட்டலந்த முகாம் குறித்து தகவல்களை திரட்டுவதற்கு நான் ஆர்வம் காட்டியமைக்கு காரணம் , பட்டலந்தமுகாமிற்கு பொறுப்பாகயிருந்த இந்த நாட்டின் தலைவராக வருவதற்கான கலாச்சாரத்தை நான் உணர்ந்திருந்தேன்.

1987-89 ஆண்டு பகுதிகளில் – இந்திய அமைதிப்படையினர் நிலை கொண்டிருந்த காலத்தில் வடக்குகிழக்கு போல இலங்கை முழுவதும் வதை முகாம்கள் காணப்பட்டன.

நாட்டின் முக்கிய பொறுப்பிலிருந்த அரசியல் தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வதைமுகாம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டோம்.

1970-80களில மிகப்பெரிய முதலீடாக சப்புகஸ்கந்த யூரியா தொழிற்சாலை காணப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஆதரவுடன் விவசாயிகளிற்கு வழங்குவதற்கான யூரியாவை உற்பத்தி செய்வதற்கான திட்டம் இது.

எனினும் தொழில் அமைச்சராகயிருந்த ரணில் விக்கிரமசிங்க பழைய இரும்புகளிற்கு விற்றுவிட்டு வீட்டு தொகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார். தனது அரசியல் தேவைகளிற்காக பயன்படுத்தினார்.

ஒரு தொழிற்சாலையை ஒரு ஒட்டுமொத்த வதைமுகாமாக பயன்படுத்தியது என்பது பெரும் கதையாடல்.

பட்டலந்த முகாமிற்குள் சென்று ஆராய்வது அவசியமான தேவையாக காணப்பட்டது.மிகவும் திட்டமிட்டவாறு கவனமாக நாங்கள் நுழைந்தோம்.

நாங்கள் பயன்படுத்திய உபாயங்கள் காரணமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று பார்த்தோம்.

1994 இல்திரட்டப்பட்ட தகவல் மூலம் ,ஒருமிகப்பெரிய வதைமுகாம் குறித்தும் அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டமை குறித்தும் தகவல்களை திரட்ட முடிந்தது.

இந்த தகவல்களை மாற்றுபத்திரிகையாக காணப்பட்ட ராவயவில் கோட்சூட் அணிந்த தலைவரின் வதைமுகாம் என்ற தலைப்பில் வெளியிட்டோம்.

அன்று ஜனாதிபதியாக பதவி வகித்தவர் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க. அவர் பட்டலந்தகுறித்து உண்மைகளை அறிவதற்கான ஆணைக்குழுவை ஏற்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் , அதற்கு காரணம் எங்கள் எழுத்துக்கள் தான்.

சந்திரிகா இது குறித்து சிஐடியிடம் சென்று முறைப்பாடு செய்யுமாறு என்னை கேட்டார். சிஐடியில் எனது முறைப்பாட்டினை அடிப்படையாக வைத்து 1996 இல் உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவை அமைத்தார்.

சாட்சிகளை விசாரித்தவேளை இந்த பட்டலந்த முகாமில் ஜேவிபி இளைஞர்கள் மாத்திரம் சித்திரவதை செய்யப்படவில்லை, கொல்லப்படவில்லை, ஐக்கிய தேசிய கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூட கொலை செய்யப்பட்டனர் என்பது தெரியவந்தது.

அந்த அரசியல் தலைவரின்ஆசீர்வாதம் பெற்ற பொலிஸார் அரசியல் எதிரிகளை மாத்திரமின்றி கப்பம் பெறுவதற்காக பலரை கடத்தி கொலை செய்தனர், தங்களின் சொல்லை கேட்காத வழக்கறிஞர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் ஏன் பொலிஸாரை கூட கொலை செய்தனர்.

பட்டலந்த விவகாரத்தில் முக்கியமாக ஒரு நபரின் பெயரை குறிப்பிடவேண்டும், அவர் கிறிஸ்டொபர் வின்சென்ட் பெரேரா , திருகோணமலையை சேர்ந்தவர். ரணிலின் உதவியாளராக பணியாற்றியவர்.

பட்டலந்த ஆணைக்குழுவில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் ரணில் விக்கிரமசிங்கவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தங்கள் அறிக்கையில் அவரது பெயரைகுறப்பிடவில்லை.

அந்த இளைஞர் வழங்கிய சாட்சியம் புலனாய்வு பிரிவிடம் இன்றும் உள்ளது.

அந்த நபர் சாட்சியம் வழங்கி மூன்று நாட்கள்வரை ரணில் விக்கிரமசிங்கவின் சட்டத்தரணிகள் அது பற்றி மௌனமாகயிருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் அவர்(36) மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுத்தவேளை ஆணைக்குழு தனக்கு இதற்கான அதிகாரம் இல்லை என தெரிவித்தது.

இது குறித்து சிஐடியினர் மேற்கொண்டிருந்த விசாரணைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பரிந்துரைகளுடன் அந்த அறிக்கை அவரிடம் வழங்கப்பட்டது.

ஆனால் அவர் அந்த அறிக்கையை தனது மாளிகைக்கு கொண்டு சென்றார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது அரசியல் தேவைகளிற்காக 1999 தேர்தலின் போது மாத்திரம் அதனை வெளியில் எடுத்தார்.

அதன் பின்னர் அது வரலாற்றின் புழுதியில் மறைந்துபோனது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான வேளை பட்டலந்த வதை முகாமிற்கு சென்று அது குறித்து புலனாய்வு செய்து எழுதியவன் என்ற அடிப்படையில் வெட்கி தலைகுனியும் நிலையிலிருந்தேன்.

அதன் பின்னரே பட்டலந்தவிற்கு தீ வைத்தோம் என்ற நூலை எழுதினேன். ரணில்ஜனாதிபதியாகயிருந்த காலத்தில் இதனை வெளியிட்டோம்;.

இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியானது , அல் ஜசீரா இந்த நூலைத்தான் தனது பேட்டிக்கு பயன்படுத்தியது.

அல்ஜசீரா இதனை தெரிவித்த பின்னர்தான் இலங்கையின் ஆங்கில சிங்கள முதுகெலும்பு அற்ற பத்திரிகையாளர்களிற்கு இவ்வாறாதொரு விடயம் இருப்பது நினைவிற்கு வந்தது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறப்போகின்றது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடு முழுவதும் ,வதைமுகாம் ஒன்றை பற்றி ஏப்பிரல் பத்தாம் திகதி பேசப்போகின்றது.

இது உலகிற்கு சொல்வதற்கான ஆதாரம்.

இவ்வாறான நபர்களை ஆட்சியாளர்களை ஆட்சிக்கு கொண்டுவராதீர்கள் என உலகிற்கு சொல்வதற்கான வாய்ப்பு.

கொழும்பு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மாத்தளை என எல்லா இடங்களிலும் ஒரே தந்திரோபாயங்களே பின்பற்றப்பட்டன, இதனை செய்தவர்கள் ஒரே ஆட்சியாளர்கள்தான்.

ஆகவே உரத்தகுரலில் இது குறித்து பேசவேண்டும்.

பட்டலந்த என்பது சிங்களவர்களின் பிரச்சினை மாத்திரமல்ல, தமிழர்களின் பிரச்சினை, முஸ்லீம்களின் பிரச்சினை, பட்டலந்தவில் பயனபடுத்திய முறைகளை தான் தங்களிற்கு எதிரானவர்களிற்கு அவர்கள் பயன்படுத்தினார்கள்.

இத்தகைய கொடுமைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த விடயத்தில் ரணில்விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான அழுத்தங்களைநாங்கள்கொடுக்கவேண்டும்.

தென்னிலங்கையில் இடம்பெற்ற அநியாயங்கள் பற்றி பேசிவது முக்கியம் ஏனென்றால் இது பற்றி பேசும்போதுதான் ஜேஆர் ரணில் விக்கிரமசிங்க தென்னிலங்கையில் மாத்திரமல்ல வடக்குகிழக்கிலும் இதனை செய்தார்கள் என்பதை சிங்கள மக்கள் அறிந்துகொள்ளும் உணர்ந்துகொள்ளும் நிலை உருவாகும்.

ரஜீபன்.Virakesari

Share.
Leave A Reply