“ஜெருசலேம்:இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
ஆனாலும் போர் நிறுத்தத்தை மீறும் வகையில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து காசாவில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைகளை ஹமாஸ் மறுத்தது.
இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசா பகுதிகளில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை முடிவற்றது, விரிவடையும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவை அடுத்து இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கும் என தெரிகிறது.
இதற்கிடையே, காசா முனையில் இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது.
இந்தத் தாக்குதலில் 300 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.இந்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 404 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.”,