திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் ஆய்வாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

‘சட்டத்தை யாரும் தங்கள் கைகளில் வைத்துக் கொள்வதற்கு இந்த அரசு அனுமதிக்காது’ என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் முன்னாள் காவல் அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் என்ன நடந்தது? காவல்துறை மீதான குற்றச்சாட்டு என்ன?

திருநெல்வேலி நகரில் தடிவீரன் கோவில் பகுதியில் வசிக்கும் ஜாகிர் உசேன் பிஜிலி என்பவர், காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.

பணி ஓய்வுக்குப் பிறகு நெல்லையில் உள்ள முத்து ஜஹான் தர்காவில் முத்தவல்லியாக (Trustee) பணிபுரிந்து வந்தார். செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 18) அதிகாலை சுமார் 5.45 மணியளவில் பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டை நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சில நபர்களால் தனது வீட்டுக்கு அருகில் ஜாகிர் உசேன் பிஜிலி வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் சம்பவ இடத்தில் பதற்றம் ஏற்பட்டது.

திருநெல்வேலி மாநகர ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, துணை ஆணையர் கீதா ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். அதே நாளில் கொலை வழக்கு தொடர்பாக அக்பர் ஷா, கார்த்திக் ஆகியோர் திருநெல்வேலி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதை பிபிசி தமிழிடம் தெரிவித்த திருநெல்வேலி டவுன் உதவி ஆணையர் அஜிகுமார், “இந்த வழக்கில் நேரடியாக மூன்று பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆனால் நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

ஜாகிர் உசேன் பிஜிலியின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் டவுன் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னணியில் நில விவகாரம்

இதன் பின்னணியில் நில விவகாரம் இருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார், காவல் உதவி ஆணையர் அஜிகுமார். மேலும், திருநெல்வேலி டவுனில் உள்ள வக்ஃபு வாரிய நிலம் தொடர்பாகவே இந்த மோதல் வெடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருநெல்வேலி டவுனில் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான சுமார் 30 சென்ட் நிலம் தொடர்பாக ஜாகிர் உசேன் பிஜிலிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பட்டியல் சாதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தௌஃபிக் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலத்துக்கு கிருஷ்ணமூர்த்தி உரிமை கொண்டாடி வந்ததை ஜாகிர் உசேன் பிஜிலி எதிர்த்து வந்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி என்கிற தௌஃபிக் அளித்த புகாரின் பேரில் கடந்த ஜனவரி மாதம் ஜாகிர் மீது காவல்துறை எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக ஜாகிர் உசேன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை நடந்துள்ளதாகக் கூறும் உதவி ஆணையர் அஜிகுமார், “கைதான நபர்களை காவலில் எடுத்து விசாரிக்கும்போது இதர விவரங்கள் தெரிவதற்கு வாய்ப்புள்ளது” எனவும் குறிப்பிட்டார்.

‘எப்படியும் கொன்றுவிடுவார்கள்’ – ஜாகிர் உசேன்

ஆனால், “தனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம்” என்று கடந்த ஜனவரி 8ஆம் தேதியன்று வீடியோ ஒன்றை ஜாகிர் உசேன் பிஜிலி அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அவரது கொலையைத் தொடர்ந்து அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையர் செந்தில்குமார், டவுன் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தன்னைக் கொலை செய்வதற்கு 20 முதல் 30 பேர் சுற்றிக் கொண்டு வருவதாக அந்த வீடியோவில் கூறியுள்ள ஜாகிர் உசேன் பிஜிலி, “மதம் மாறிய நபர் கொடுத்த புகாரில் என் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். என்னை எப்படியும் கொன்றுவிடுவார்கள் என்று தெரியும்,” எனக் கூறியுள்ளார்.

அவர் கூறியதைப் போலவே கொல்லப்பட்டுவிட்டதால், தொடர்புடைய நபர்களைக் கைது செய்யும் வரை ஜாகிர் உசேனின் உடலை வாங்கப் போவதில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டனர்.
ஜாகிர் உசேன் பிஜிலி, தமிழ்நாடு, காவல்துறை


காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை

இதையடுத்து, ஜாகிர் உசேன் பிஜிலியின் குடும்பத்தினரிடம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மூன்று கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறுகின்றனர் ஜாகிரின் குடும்பத்தினர்.

‘முக்கியக் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும்; கொலையில் தொடர்புடைய அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்; எங்கள் குடும்பத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதை மாநகர காவல் ஆணையர் ஏற்றதாக செய்தியாளர்களிடம் ஜாகிர் உசேனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, ஜாகிர் உசேன் பிஜிலி அளித்த புகார்களை முறையாக விசாரிக்காத காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார், கோவை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணிபுரிந்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் தரப்பில் ஜாகிர் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஜாகிர் உசேன் பிஜிலியின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுவிட்டதாகக் கூறுகிறார், திருநெல்வேலி நகர காவல் உதவி ஆணையர் அஜிகுமார்.

காவல்துறை அலட்சியமாகக் கையாண்டதாகக் கூறப்படும் புகார் குறித்து அவரிடம் கேட்டபோது, “குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி என்ற தௌஃபிக் வழக்கறிஞராக இருக்கிறார். இரு தரப்பும் காவல்துறையில் மாறி மாறி புகார் அளித்துள்ளன. நிலம் தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் காவல்துறை தலையிட முடியாது,” எனக் கூறினார்.

இந்த நிலையில், ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முகமது தௌஃபிக் என்பவரைப் பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த முகமது தௌஃபிக் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டபோது அவர் தப்பியோட முயன்றதாகவும் அப்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அதேநேரம், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கொல்லப்பட்ட விவகாரம் அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியது.

 

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க ஆட்சியில் சட்டத்தின் மீதான அச்சம் துளியும் இல்லை. கொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரைக் கொலை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளதாக தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தி.மு.க அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதன்கிழமையன்று சட்டமன்றத்தில் ஜாகிர் உசேன் பிஜிலி மரணம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை அ.தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கொண்டு வந்தன.

 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

இதற்குப் பதிலளித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, தனது முகநூல் பக்கத்தில் ஜாகிர் உசேன் வெளியிட்டுள்ள காணொளியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அதோடு, “நிலப் பிரச்னை தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்கிற முகமது தௌஃபிக், அவரது மைத்துனர் அக்பர் ஷா ஆகியோர் ஜாகிர் உசேன் மீது புகார் கொடுத்துள்ளனர். ஜாகிர் உசேனும் அவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில் காவல்துறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து எதிர்த் தரப்பினரை அழைத்து காவல்துறை விசாரித்துள்ளது. விசாரணை நடந்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

இந்தக் கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள், அவர்களுக்குப் பின்னணியில் இருந்தவர்கள் என அனைவர் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதியின் முன்பாக நிறுத்தப்படுவார்கள் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும், “சட்டத்தை யாரும் கையில் வைத்துக் கொள்வதற்கு இந்த அரசு அனுமதிக்காது. இந்தக் கொலை மட்டுமல்ல எந்தக் குற்றத்தில் ஈடுபடுவராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.

– இது, பிபிசி கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Share.
Leave A Reply