சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் நடந்த பெண் காவல் அதிகாரி அஷ்வினி பித்ரே-கோரேயின் கொலை சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியது.

அஷ்வினியின் உடல், கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதம் மற்றும் பிற ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் இந்த வழக்கு மிகவும் சிக்கலானதாக மாறியது. ஒரு பெண் காவல்துறை அதிகாரி காணாமல் போனது பல கேள்விகளை எழுப்பியது.

இருப்பினும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரின் போராட்டம், அரசு வழக்கறிஞர்கள் வழக்கை நடத்திய முறை மற்றும் ஒரு பெண் காவல் அதிகாரி நடத்திய விசாரணை ஆகியவற்றின் காரணமாக, அஷ்வினியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட மூத்த காவல் ஆய்வாளர் அபய் குருந்த்கரை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர் ஒரு பெண் காவல்துறை அதிகாரி, கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரும் காவல்துறையைச் சேர்ந்தவர் மற்றும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்ததும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி என்ற வகையில் இது ஒரு தனித்துவம் வாய்ந்த வழக்காக அமைந்தது.

இந்த வழக்கு எதைப் பற்றியது? அஷ்வினியின் டும்பத்தினர் இதற்கான எவ்வாறு போராடினர்? இந்த வழக்கில் காவல்துறையின் பங்கு என்ன?

வழக்கு விவரம்

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையின் கலம்போலி பகுதியிலிருந்து 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் அஷ்வினி பித்ரே-கோரே காணாமல் போனார்.

அவர் காணாமல் போனதற்குக் காரணம் மூத்த காவல்துறை அதிகாரி அபய் குருந்த்கர் என்று அஷ்வினியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

ஆரம்ப காலகட்டத்தில் காவல்துறை சரியாக விசாரணையை நடத்தவில்லை என்று அஷ்வினியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மகாராஷ்டிராவில் கோலாப்பூர் மாவட்டத்தின் ஆல்டே கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்வினி. அவர் 2005 ஆம் ஆண்டு ராஜு கோரே என்பவரை திருமணம் செய்தார்.

அஷ்வினி 2000-ஆம் ஆண்டு முதல், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். திருமணமான ஒரு வருடத்திற்குள், அஷ்வினி போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று, காவல்துறை உதவி ஆய்வாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

காவல் துறையில் சேர்ந்த பிறகு, அவர் முதலில் புனேவிலும் பின்னர் சாங்லியிலும் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், அதே காவல் நிலையத்தில் மூத்த காவல்துறை அதிகாரியாக இருந்த அபய் குருந்த்கரை, அஷ்வினி சந்தித்தார்.

இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது. பின்னர் 2013 ஆம் ஆண்டு, அஷ்வினி பதவி உயர்வு பெற்றபிறகு, ரத்னகிரிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

அபய் குருந்த்கர், அஷ்வினியைச் சந்திக்க அடிக்கடி ரத்னகிரிக்கு வருவார். அஷ்வினியின் கணவருக்கும், தந்தைக்கும் இதைப் பற்றித் தெரிய வந்தது.

சில நாட்களுக்கு பிறகு, அஷ்வினி காணாமல் போனார். இறுதியாக அவர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.

அபய் குருந்த்கரின் குழந்தைப் பருவ நண்பரான மகேஷ் ஃபல்ஷிகர், அஷ்வினியைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

அதிர்ச்சியூட்டும் விதமாக, அஷ்வினி கொலை செய்யப்பட்டபின், மரம் வெட்டப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்தி அவரது உடல் துண்டுகளாக வெட்டப்பட்டது. பின்னர் அந்தத் துண்டுகள் ஒரு ஓடையில் வீசப்பட்டன.
அஷ்வினி பித்ரே வழக்கு

மடிக்கணினியில் கிடைத்த தகவல்கள்

இதற்கிடையில், அஷ்வினியை தொடர்பு கொள்ள முடியாததால் அவரது கணவர் ராஜு கோரும், மகள் ஸித்தியும் கவலைப்பட்டனர். காவல்துறையிடம் புகார் அளிப்பதற்கு முன்பு, அஷ்வினி பணியாற்றிய கலம்போலி காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்தனர்.

இருப்பினும், அங்கு எந்த தகவலும் கிடைக்காததால், அஷ்வினி காணாமல் போனதாக அவர்கள் புகார் அளித்தனர். அஷ்வினி வசித்து வந்த அடுக்குமாடி வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு, அவரது கைபேசி மற்றும் மடிக்கணினியும் சோதனை செய்யப்பட்டன.

இந்த விசாரணையின் மூலம்தான், அஷ்வினிக்கும் பணிநீக்கம் செய்யப்பட்ட மூத்த காவல் ஆய்வாளர் அபய் குருந்த்கருக்கும் இடையிலான உறவு பற்றிய கூடுதல் தகவல்கள் வெளிவந்தன.

இதன் பிறகுதான் அஷ்வினிக்கு மோசமாக ஏதேனும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கலம்போலி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் புகாரில், ராஜு பாட்டீல், மகேஷ் ஃபல்ஷிகர் மற்றும் குந்தன் பண்டாரி ஆகியோருடன் காவல் ஆய்வாளர் அபய் குருந்த்கர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இருந்த அரசியல் தொடர்புகள் காரணமாக அஷ்வினி மற்றும் ராஜு குடும்பங்கள் பெரும் அழுத்தத்தைச் சந்தித்தன. இத்தனை அழுத்தம் இருந்த போதிலும், ராஜு கோரே ஒவ்வொரு வாரமும் விசாரணைக்காக பன்வேல் மற்றும் மும்பைக்கு பயணம் செய்து வந்தார்.

அது மட்டுமல்லாமல், அப்போதைய முதல்வர் மற்றும் ஆளுநரையும் சந்தித்து அவர்களது ஆதரவு கோரினார்.

இந்த வழக்கின் விசாரணை குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இறுதியாக, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, இந்த வழக்கில் சரியான திசையில் விசாரணை தொடங்கியது.

இந்த வழக்கில், 2017 ஆம் ஆண்டு ஜனவர் 1 ஆம் தேதி முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வருடம் கழித்து கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், அஷ்வினி குடும்பத்தின் போராட்டம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெற்றி பெற்றுள்ளது. பன்வேல் நீதிமன்றம் அபய் குருந்த்கர் மற்றும் அவரது கூட்டாளிகளை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அஷ்வினிக்கு நீதி கிடைத்துள்ளது. இருந்தாலும் குற்றவாளிகள் இன்னும் சிறைதண்டனை பெறவில்லைதான்.
அஷ்வினி பித்ரே வழக்கு


விசாரணையின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள்

கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, உதவி காவல் ஆய்வாளர் அஷ்வினி, கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அபய் குருந்த்கரை, தானே நகரில் சந்தித்துள்ளார்.

அன்று மாலை, தானே ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் இருவரும் ஒன்றாக தேநீர் அருந்தினர்.

அதன் பிறகு, அவர்கள் இருவரும் ஒரே காரில் அபய் குருந்த்கரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அஷ்வினி மற்றும் அபய் குருந்த்கர் இருவரின் MTNL மொபைல் சிம்மின் இருப்பிடத்தைப் பயன்படுத்தி காவல்துறை நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று அஷ்வினி கொலை செய்யப்பட்டார்.

அடுத்த நாள், அஷ்வினியின் உடலை அப்புறப்படுத்த குந்தன் பண்டாரி குருந்த்கருக்கு உதவினார். இது அவர்கள் அனைவரின் MTNL மொபைல் சிம்மின் இருப்பிடங்கள் மூலம் தெரியவந்தது.

மற்ற குற்றவாளிகளின் சிம் கார்டுகளும் அந்த சமயத்தில் அதே பகுதியில் செயல்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கியமாக, அஷ்வினி கொலை செய்யப்பட்ட பிறகும் கூட அவர் உயிருடன் இருப்பதாகக் காட்ட, அபய் குருந்த்கர் ஒரு திட்டம் வகுத்தார்.

அபய் குருந்த்கர் அஷ்வினியின் மொபைலில் இருந்து தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பி வந்தார். இந்த குறுஞ்செய்திகளின் மூலம்தான் அபய் குருந்த்கர் கொலையில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அபய் குருந்த்கர், அஸ்வினியின் மொபைலில் இருந்து ‘எப்படி இருக்கீங்க?’ (How are you?) என்ற கேள்வியைக் கேட்க ‘You’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

காவல்துறைக்கு இதிலிருந்து துப்பு கிடைத்தது. அஷ்வினி எப்போதும் ‘You’ என்று சொல்வதற்கு பதிலாக ‘U’ என்ற எழுத்தைதான் பயன்படுத்துவார். ஆனால் திடீரென குறுஞ்செய்திகளில் ‘U’ என்ற எழுத்து காணாமல் போனதை காவல்துறையினர் கவனித்தனர்.

அபய் குருந்த்கர் ‘U’ என்பதற்கு பதிலாக ‘You’ என்றே எழுதினார்.
அஷ்வினி பித்ரே வழக்கு

அபய் குருந்த்கரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட நான்கு அல்லது ஐந்து பேரிடமிருந்து காவல்துறை இதை உறுதிப்படுத்தினர்.

அபய் எப்போதும் ‘நீ’ என்று சொல்ல ‘You’ என்ற சொல்லை பயன்படுத்தினார் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினாலும், அஸ்வினி ‘நீ’ என்று சொல்ல ‘You’ என்ற சொல்லை பயன்படுத்தியதில்லை என்பது அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து தெளிவாகத் தெரிந்தது.

அஸ்வினியின் மொபைல் போனில் இருந்து அவரது உறவினர் அவினாஷ் கங்காபூரேவுக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்தது.

மனநலம் சார்ந்த பிரச்னைகள் காரணமாக சிகிச்சைக்காக அவர் (அஸ்வினி) ஐந்து முதல் ஆறு மாதங்களுக்கு உத்தராகண்ட் அல்லது இமாச்சலப் பிரதேசத்திற்குச் செல்லப் போவதாகக் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காவல்துறையினரிடம் தொழில்நுட்ப ஆதாரங்கள் இருந்தன. அஷ்வினி காணாமல் போன சமயத்திலும் அபய் கடைசியாக அவருடன் இருந்துள்ளார். விசாரணையில், அஷ்வினி உயிருடன் இருப்பது போல் காட்டுவதற்காக அவரது கைபேசி மூலம் அபய் தொடர்ந்து மற்றவர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்தது.

அபய் குருந்த்கர் மட்டையால் அஷ்வினியின் தலையில் அடித்து கொலை செய்ததாக, குருந்த்கரின் நண்பர் மகேஷ் ஃபல்ஷிகர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.

அஷ்வினி பித்ரேவின் மொபைல் போன் மற்றும் முக்கிய குற்றவாளியான மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அபய் குருந்த்கரின் மொபைல் போன், பேஸ்புக், வாட்ஸ்அப், மடிக்கணினி மற்றும் அனைத்து சமூக செயலிகள் ஆகியவற்றிலிருந்து முக்கியமான தரவுகளை சைபர் நிபுணர் ரோஷன் பங்கேரா மீட்டெடுத்தார்.

மீட்கப்பட்ட தரவுகள் சாட்சியக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானவை என்பது நிரூபிக்கப்பட்டது. அதேநேரத்தில், இந்த வழக்கில், உடல் மற்றும் கொலைக்கான ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் தொழில்நுட்ப ஆதாரங்கள் முக்கியமானவை என்பது நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்குக்காக கூகுள், நீருக்கடியில் ஸ்கேனிங், கடல்சார் துறையின் உதவி மற்றும் செயற்கைக்கோள் படங்கள் போன்ற தொழில்நுட்ப உதவிகள் எடுக்கப்பட்டன.


நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

அஷ்வினி பித்ரே கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு ஏப்ரல் 5 ஆம் தேதி வழங்கப்பட்டது. பன்வெல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஜி. பால்தேவார் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

அஷ்வினி பித்ரே வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அபய் குருந்த்கர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, பிரிவு 302 மற்றும் 218 இன் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

மற்ற இரண்டு கூட்டாளிகளான குந்தன் பண்டாரி மற்றும் மகேஷ் ஃபல்ஷிகர் ஆகியோரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு 80 பேரின் சாட்சியங்களைப் பதிவு செய்து, குருந்த்கர் உட்பட மூன்று பேர் மீது கொலைக் குற்றம் சாட்டியது.

அதிகாரிகள் நிலேஷ் ரவுத் மற்றும் சங்கீதா அல்போன்சோ ஆகியோர் நடத்திய விசாரணையில், அஷ்வினி பித்ரேவைக் கொன்று அவரது உடலை குருந்த்கர் அப்புறப்படுத்தியது தெரியவந்தது.

குருந்த்கருடன், ராஜு என்கிற தியானேஷ்வர் தத்தாத்ரே பாட்டீல், குந்தன் பண்டாரி மற்றும் மகேஷ் ஃபல்ஷிகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் தலோஜா சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 11 ஆம் தேதி பிற்பகல் அமர்வில் நடைபெறும். தண்டனை வழங்குவதற்கு முன்பு நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்கும்.

அஷ்வினி பித்ரேவின் மகள் மற்றும் கணவர் அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் அபய் குருந்த்கரை குற்றவாளி என்று தீர்ப்பளித்ததை அடுத்து அஷ்வினி பித்ரே-கோரேயின் கணவர் ராஜு கோரே திருப்தி தெரிவித்துள்ளார். தற்போது நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக தான் உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களிடம் கூறுகையில், “முதலில், இந்த தீர்ப்புக்கு ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் இந்த பிரச்சினையை ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்ததால்தான் வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். ஆரம்ப கட்டங்களில் இந்த வழக்கை நாங்கள் தொடர்ந்தபோது, நீதிமன்றத்தின் ஆதரவு எங்களுக்கு இருந்தது.”

“அந்த நேரத்தில் ஊடகங்கள் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டதால்தான் இது சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது, பின்னர் முறையான போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்திலும், வழக்கறிஞர் பிரதீப் கரட் எங்கள் தரப்பை எடுத்துச் சொல்ல மிகவும் கடினமாக உழைத்தார்.”

இந்த வழக்கில் காவல் அதிகாரி சங்கீதா அல்போன்சோவின் சிறந்த விசாரணை, வழக்கு நீதிமன்றத்தில் நடத்தப்பட சாத்தியமாக்கியது. ஊடகங்கள், வழக்கறிஞர் பிரதீப் கரட் மற்றும் காவல் அதிகாரி சங்கீதா அல்போன்சோ ஆகியோருக்கு நான் நன்றி கூறுகிறேன்.”

இந்த வழக்கில், ராஜு கோரே சார்பாக வழக்கறிஞர் பிரதீப் கரட் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய வழக்கறிஞர் பிரதீப் கரட், “இன்று, ஒவ்வொரு நபருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன், நீதிமன்றம் இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்க வேண்டும்.

“முக்கிய குற்றவாளியான குருந்த்கர் மீது கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகள் அவருக்கு உடலை அப்புறப்படுத்த உதவினர் கைது நிரூபிக்கப்பட்டுள்ளது.”

“ஏப்ரல் 11 ஆம் தேதி இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிக்கும். இந்த வழக்கை விசாரிப்பதில் அலட்சியமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

கொலை வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி சங்கீதா அல்போன்சோ, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, “இந்த வழக்கைத் தீர்க்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். எங்கள் முழு குழுவும் முயன்றது.

தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சூழ்நிலை ஆதாரங்களை சேகரிக்க வேண்டியிருந்தது. இந்த வழக்கில் நான் சுமார் ஆறு-ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். இந்த வழக்கில் 85 சாட்சிகள் இருந்தனர். உடல் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், சூழ்நிலை ஆதாரங்கள் மூலம் குற்றத்தை நிரூபிக்க முடிந்தது.” என்றார்.

 

Share.
Leave A Reply