இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ வேண்டுகோளின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி மீது குற்றம் சாட்டப்பட்டது.
பெல்ஜியத்தில் இருந்து தொழிலதிபர் மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த இந்திய ஏஜென்சிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவகாரம் என்ன?
2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த ஊழலில் நீரவ் மோதி, அவரது மனைவி ஏமி, அவரது சகோதரர் நிஷால், உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கண்டறியப்பட்டனர்.
நீரவ் மோதி தற்போது லண்டன் சிறையில் உள்ளார், அவரது ஜாமீன் மனு பல முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தன்னை இந்தியாவிடம் ஒப்படைத்துவிடக் கூடாது என்று அவர் அங்கே சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து சதி செய்து வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியது.
நீரவ் மோதி, மெஹுல் சோக்ஸி மற்றும் மற்றவர்கள் மீது பஞ்சாப் நேஷனல் வங்கி முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புகார் அளித்தது.
இந்த புகாரில், 280 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று உள் விசாரணை முடிந்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த மோசடி குறித்து மும்பை பங்குச் சந்தைக்கு அறிக்கை அளித்தது.
இது இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடிகளுள் ஒன்றாகும். இந்த வழக்கில் மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது உறவினர் நீரவ் மோதி மீது குற்றம் சாட்டப்பட்டது.
மெஹுல் சோக்ஸி
சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது சாத்தியமா?
மெஹுல் சோக்ஸியை ஒப்படைக்க பெல்ஜியத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
கரீபியன் பிராந்தியத்தை குறித்து செய்திகள் வெளியிடும் அசோசியேட்டட் டைம்ஸ் என்ற இணையதளம், மெஹுல் சோக்ஸி பெல்ஜியம் நாட்டில் வசிப்பதாக ஒரு செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
“மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது மனைவி ப்ரீத்தி சோக்ஸி ஆகியோர் தற்போது பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வசித்து வருகின்றனர். அவர் அந்நாட்டின் எஃப் (F) ரெசிடென்சி கார்டை வைத்திருக்கிறார்.” என்று அந்த செய்தி கூறியது.
அசோசியேட்டட் டைம்ஸின் இந்த செய்தியானது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. தொழிலதிபர் மெஹுல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பெல்ஜியம் அரசாங்கத்திடம் இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகள் இதை இன்னும் உறுதி செய்யவில்லை.
மெஹுல் சோக்ஸி பெல்ஜியம் நாட்டில் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் இந்தியாவில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கவும் செய்யலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
மெஹுல் சோக்ஸியின் சட்டக் குழு அவரது மோசமான உடல்நிலையை முன்வைத்து அதையே ஒரு வலுவான வாதமாக மாற்ற வாய்ப்புள்ளது என்றும் சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, மும்பை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் அளிக்கும் போது மெஹுல் சோக்ஸி இந்தியா வர அவரது இயலாமையை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்ள தனக்கு உடல்நிலை சரியாக இல்லை என்று மெஹுல் சோக்ஸி கூறியதாக எகனாமிக் டைம்ஸ் ஊடகத்தில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கின்றது.
லுகேமியா என்று அழைக்கப்படும் ரத்த புற்றுநோயினால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னால் “100 சதவீதம்” பயணம் செய்ய முடியாது என்று பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு மருத்துவர் தெரிவித்துள்ளதாக மெஹுல் சோக்ஸி கூறியிருந்தார்.
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதி உள்ள இந்தியாவில் மெஹுல் சோக்ஸி முறையான சிகிச்சை பெற முடியும் என்று ஒரு அதிகாரி கூறியதாக எகனாமிக் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் அரசாங்கம் சொல்வதென்ன?
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் இருப்பது குறித்தும் பெல்ஜியம் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக பெல்ஜியத்தின் பெடரல் பப்ளிக் சர்வீஸ் வெளியுறவு விவகாரங்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டேவிட் ஜோர்டான்ஸ் கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெல்ஜியமில் மெஹுல் சோக்ஸி எங்கு இருக்கிறார் என்று கேட்டதற்கு, “எஃப்.பி.எஸ் வெளியுறவு விவகாரங்கள் அமைப்புக்கு இது குறித்து தெரியும் என்று நான் உறுதியாக கூற முடியும், அவர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்”, என்று டேவிட் ஜோர்டான்ஸ் கூறினார்.
“இருப்பினும் எந்தவொரு தனிப்பட்ட வழக்கு குறித்தும் நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இந்த இந்த வழக்கு பெடரல் பப்ளிக் சர்வீஸ் நீதிமன்றத்தின்கீழ் வருகிறது. இது தொடர்பான முன்னெடுப்புகளை எஃப்.பி.எஸ் வெளியுறவு விவகாரங்கள் அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும்”, என்றும் அவர் குறிப்பிட்டார்.
யார் இந்த மெஹுல் சோக்ஸி?
2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று, மும்பை நகரில் இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் நிறுவப்பட்டதாக செய்தி வந்தது.
இந்த ஏடிஎம்மில் பொதுமக்கள் தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் அனைத்து வகையான நகைகளையும் வாங்க முடியும். ஆனால் இந்த இயந்திரத்தால் மக்களை கவர்ந்திழுக்க முடியவில்லை.
வாடிக்கையாளர்கள் யாரும் இதைப் பயன்படுத்துவதில்லை என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த ஏடிஎம்கள் மெஹுல் சோக்ஸியால் நிறுவப்பட்டவை.
மெஹுல் சோக்ஸியின் கதை ஆரம்பத்தில் வைரம் போல பளபளப்பாக இருந்தது. அவரது பழக்கவழக்கங்கள் எப்போதும் தங்கத்தைப் போல நெகிழ்வாக இருந்தன. ஆனால் அவற்றின் விளைவு போலி நகைகளைப் போல ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.
மெஹுல் தனது தந்தை சினுபாய் சோக்ஸியின் வைரம் வெட்டும் மற்றும் பாலிஷ் செய்யும் தொழிலை வாங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழி காட்டினார்.
ஆனால் நிறுவனத்தின் கெட்ட பெயர் காரணமாக ஊழியர்கள் தங்கள் வேலைகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கிய ஒரு காலம் வந்தது.
அவரது நிறுவனமான கீதாஞ்சலி, 2006 ஆம் ஆண்டு ஐபிஓ வெளியீடு மூலம் ரூ.330 கோடியை திரட்டியது. பின்னர் 2013 ஆம் ஆண்டு, முறைகேடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் மெஹுலின் நிறுவனம் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதை 6 மாதங்களுக்கு செபி தடை செய்தது.
2008-ஆம் ஆண்டில், கத்ரீனா கைஃப் இந்நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த போது, இந்நிறுவனத்தின் விற்பனை ஒரு வருடத்தில் 60 சதவீதம் அதிகரித்தது. கீதாஞ்சலி இருவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு போலி வைரங்களை விற்பனை செய்வதாக 2018 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவாஸ்தவா குற்றம் சாட்டினார்.