கரூர் மாவட்டத்தின் தோகைமலை அருகே பிளஸ் 2 மாணவர், சக மாணவியை திருமணம் செய்ய கடந்த வியாழக்கிழமை காரில் சென்றபோது, காரை மறித்த மாணவியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தி அவரை மீட்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
“கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூர் உடையாபட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவி, திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். அதே வகுப்பில் இனாம்குளத்தூர் சமத்துவபுர காலனியைச் சேர்ந்த ஒரு மாணவரும் படித்து வருகிறார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு முடிந்து அவரவர் ஊரில் இருந்தனர். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்ய கடந்த புதன்கிழமை அன்று முடிவெவிடுத்தனர்” என்று தினமணியின் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
தொடர்ந்து அதில், “இதையடுத்து மாணவர், குளித்தலையை அடுத்த அய்யர்மலையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு மாணவியை புதன்கிழமை அழைத்துள்ளார். இதன்படி மாணவியும் சென்றுள்ளார். இதனிடையே மாணவியை வீட்டில் காணாததால் அவரது பெற்றோர் தோகைமலை காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“அப்போது, மாணவிக்கும், மாணவருக்கும் திருமணம் செய்து வைக்க, வியாழக்கிழமை காலை காரில் மாணவரின் பெற்றோர் தோகைமலை காவல் நிலையத்துக்கு அழைத்து வரவுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் உறவினர்கள் குளித்தலை-மணப்பாறை சாலையில், அக்காண்டிமேடு என்ற இடத்தில் மாணவர், மாணவி சென்ற காரை மடக்கினர்.
பின்னர், காரில் இருந்த மாணவரையும், அவரது பெற்றோரையும் தாக்கிவிட்டு, காரையும் சேதப்படுத்தியதோடு, மாணவியை அழைத்துக் கொண்டு கழுகூர், உடையாப்பட்டிக்குச் சென்றுவிட்டனர். தாக்குதல் சம்பவம் குறித்து, தோகைமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்”