மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானின் சாரதியான ஜெயந்தன், இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த 8ஆம் திகதி பிள்ளையான் அவரது அலுவலகத்தில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளைத் தொடர்ந்து, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிள்ளையானின் சாரதி ஜெயந்தனை, கொழும்பிலிருந்து வந்த சிஐடி அதிகாரிகள், வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply