“பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.சிறுவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர் பிப்ரவரி 8 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தனர்.

சில வாரங்களுக்குப் பிறகு, அல்லல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் காண முடியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.

அது காணாமல் போன சிறுவன் என கூறி குடும்பத்திடம் அந்த உடல் ஒப்படைக்கப்பட்டது. குடும்பத்தினரும் அந்த உடலை தகனம் செய்தனர்.

சிறுவனின் குடும்பத்துக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.ஆனால் அவர்களின் மகன் ஏப்ரல் 17 ஆம் தேதி தர்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் உயிருடன் ஆஜராகி தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளான்.

அதாவது, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மூன்று முதல் நான்கு பேர் தனது வாயை துணியால் மூடியதாகவும், அதனால் தான் சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்தான்.

மேலும் விழித்துப் பார்த்தபோது தான் நேபாள் நாட்டில் இருப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தான்.

சந்தர்ப்பம் பார்த்து கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிய சிறுவன், தனது அண்ணனுக்கு வீடியோ கால் செய்துள்ளான். நேபாளுக்கு கிளம்பிச் சென்ற சகோதரன்,

தம்பியை பத்திரமாக திருப்ப அழைத்து வந்து குடும்பத்துடன் சேர்த்தான். போலீசார் மீது நம்பிக்கை இழந்த குடும்பத்தினர் சிறுவனை நேராக நீதிமன்றம் அழைத்துச் சென்று ஆஜர் படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த போலீசார், தகனம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சிறுவன் கடத்தப்பட்டது குறித்து விசாரிப்போம் என்றும் தெரிவித்தனர். “,

Share.
Leave A Reply